’உள்ளாட்சித் தேர்தலுக்குப் பின் திமுக பெண் கவுன்சிலர்களின் குடும்பத்தினர் அராஜகம்’ - ஓபிஎஸ் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்குப் பின் திமுக கவுன்சிலர்கள் மட்டுமல்லாமல், பெண் கவுன்சிலர்களுடைய குடும்பத்தினரின் ஆதிக்கம், அராஜகம், அட்டகாசம், அடக்குமுறை தமிழகம் முழுவதும் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறது என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து அரசு அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும், ஒப்பந்ததாரர்களும் மிரட்டப்பட்டும், தாக்கப்பட்டும் வந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்குப் பின் திமுக கவுன்சிலர்கள் மட்டுமல்லாமல், அவர்களுடைய குடும்பத்தினரின் ஆதிக்கம், அராஜகம், அட்டகாசம், அடக்குமுறை தமிழ்நாடு முழுவதும் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறது.

பொதுவாக, உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பணி என்பது, அந்த வார்டிற்கு உட்பட்ட இடங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீரை மக்களுக்கு அளிப்ப்து, குடிநீருடன் கழிவு நீர் கலக்காமல் இருப்பதை உறுதி செய்வது, தெருக்களில் சாக்கடை நீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்வது, பழுதடைந்த சாலைகளை செப்பனிடுவது, மழைக் காலங்களில் கொசு மருந்து அடிப்பது, தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி போடாதவர்களை போட வைப்பது போன்றவைதான். இதற்காகத்தான் மக்கள் வாக்களித்து அவர்களைத் தேர்ந்தெடுத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுப்புகிறார்கள். கவுன்சிலர் பணி என்பது மக்களைக் காக்கும் பணி. மக்களுக்கு சேவை செய்வது தான் அவர்களது இன்றியமையாப் பணி.

ஆனால், இதையெல்லாம் மறந்துவிட்டு, தங்கள் நோக்கமே வேறு என்பது போல் திமுக கவுன்சிலர்கள் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் தமிழகம் முழுவதும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். நான் இங்கே இரண்டு உதாரணங்களை சுட்டிக்காட்ட கடமைப்பட்டு இருக்கிறேன்.

மகளிருக்காக ஒதுக்கப்பட்ட 34வது வார்டிலிருந்து சென்னை மாநகராட்சிக்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சர்மிளா காந்தி. இவர் தன்னுடைய அலுவலகத்திற்கு வந்து தன்னுடைய இருக்கையில் தனது கணவரை அமர்த்தி, அவர் மூலம் வீடு கட்டும் உரிமையாளர்களை கூப்பிட்டு மிரட்டும் பணியில் ஈடுபட்டு இருக்கிறார். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கின்றது.

அந்த வீடியோவில், ஒரு வீட்டின் உரிமையாளர் பெண் கவுன்சிலரைப் பார்த்து, நல்லது செய்வதற்குத் தான் நீங்கள் இருக்கிறீர்கள் என்றும், கேள்வி கேட்கின்ற உரிமை உங்களுக்குத்தான் இருக்கிறது என்றும், இவர்கள் எல்லாம் யார் என்றும், இவர்கள் ஏன் கேள்வி கேட்கிறார்கள் என்றும் கேட்பது நன்கு பதிவாகியுள்ளது. இந்த வீடியோவிலிருந்து அந்த வீடு கட்டும் உரிமையாளரிடமிருந்து கவுன்சிலரின் கணவர் ஏதோ எதிர்பார்ப்பதும், அதற்கு அந்த உரிமையாளர் மறுத்ததன் காரணமாக அவரை கவுன்சிலரின் கணவர் மற்றும் அங்கிருந்த திமுக-வினர் மிரட்டுவதும், இவை எல்லாவற்றிற்கும் அந்த பெண் கவுன்சிலர் ஆதரவு அளிப்பதும் தெள்ளத் தெளிவாகிறது.

இதேபோல், தாம்பரம் மாநகராட்சிக்கு 31வது வார்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சித்ரா தேவி என்பவரின் மைத்துனரும், திருநீர்மலை திமுக இளைஞர் அணிச் செயலாளருமான தினேஷ் என்பவர் திமுக-வினருடன் நேற்று மாலை ஓர் உணவுக் கடைக்குச் சென்று அந்தக் கடை உரிமையாளரிடம் 10,000 ரூபாய் கேட்டதாகவும், ஒவ்வொரு மாதமும் 10,000 ரூபாய் தர வேண்டுமென்று மிரட்டியதாகவும், அதற்கு அந்த உரிமையாளர் முதலில் தர மறுத்ததாகவும், பின்னர் கடைக்குள் அசம்பாவிதம் ஏதும் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக 3,000 ரூபாயை 'கூகுள் பே' மூலமாக அனுப்பியதாகவும், இதனைத் தொடர்ந்து 7,000 ரூபாயை இரவுக்குள் தருமாறு மிரட்டியதாகவும், அதற்கு அந்தக் கடையின் உரிமையாளர் மறுத்ததையடுத்து, அந்தக் கடை திமுக-வினரால் அடித்து நொறுக்கப்பட்டதாகவும், கடையில் இருந்த வாடிக்கையாளர்கள் பதற்றத்துடன் வெளியே ஓடிச் சென்றதாகவும், இது குறித்து புகார் கொடுக்கப்பட்டதன் அடிப்படையில் காவல் துறையினர் இருவரை கைது
செய்துள்ளதாகவும் இன்று பத்திரிகையில் செய்திகள் வந்துள்ளன.

மேற்கண்ட சம்பவங்களிலிருந்து உள்ளாட்சி அமைப்புகளில் லஞ்சம் தலைவிரித்து ஆடுவதும், ஆணாதிக்கம் கொடிகட்டி பறப்பதும் தெள்ளத் தெளிவாகிறது. மகளிர் இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதே ஆணாதிக்கத்தை தடுக்க வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால், மகளிர் இட ஒதுக்கீட்டையே கொச்சைப்படுத்தும் நோக்கில் திமுக-வினர் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதேபோல், திமுக-வினரின் வசூல் வேட்டையைப் பார்த்து வீட்டு உரிமையாளர்களும், வியாபாரிகளும் கலக்கம் அடைந்துள்ளனர். திமுக கவுன்சிலர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் அராஜகச் செயல்களுக்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன். திமுக-வினரின் இதுபோன்ற ஆணாதிக்க செயல்பாடு மற்றும் வசூல் வேட்டை தமிழ்நாடு முழுவதும் தலைவிரித்து ஆடுகிறது. இதனை ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டிய பொறுப்பும், கடமையும் முதல்வருக்கு உண்டு.

எனவே, முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, பெண் கவுன்சிலர்களின் செயல்பாடுகளில் அவர்களது கணவரோ அல்லது குடும்ப உறுப்பினர்களோ ஈடுபடுவதைத் தடுக்கவும், மக்களை மிரட்டும் கவுன்சிலர்கள் மற்றும் திமுக-வினர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கவும், மேற்படி நிகழ்வுகளில் வீட்டு உரிமையாளரை மிரட்டியவர்கள் மீதும், உணவுக் கடையை அடித்து நொறுக்கியவர்கள் மீதும் சட்டப்படி வழக்கு பதிவு செய்து தண்டனைப் பெற்றுத் தரவும், அடித்து நொறுக்கப்பட்ட கடைக்கு உரிய இழப்பீட்டை வழங்கவும், இதுபோன்ற செயல்கள் இனி வருங்காலங்களில் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளவும், வன்முறைச் செயல்களில் ஈடுபடுபவர்களை இரும்புக் கரம் கொண்டு
ஒடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்." என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்