சென்னை: "மக்கள் தொகை அடிப்படையில் சாதி ரீதியாக இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், அதற்கான சரியான, நியாயமான காரணங்களைக் கூற வேண்டும்" என தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம், இதுபோன்ற காரணங்கள் கூறப்படாததால், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்தும் உத்தரவிட்டுள்ளது.
இட ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு: தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு முறை அமலில் உள்ளது. இதில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இப்பிரிவுக்குள் வரும் வன்னியர்களுக்கு10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கி அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் சார்பில் 35 வழக்குகள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களில், ‘தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாமல் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கியது சட்டவிரோதம். முந்தைய அரசு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாமல், சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு வாக்குக்காக வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கும் அவசரச் சட்டத்தை நிறைவேற்றியது. எனவே, அந்த அவசரச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்’ என கோரப்பட்டிருந்தது.
இட ஒதுக்கீடு ரத்து: இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கர் ஆகியோரைக் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தன. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கர் அமர்வு பிறப்பித்த உத்தரவு:
» 'சுங்கக் கட்டணங்களையும் உயர்த்தி மக்களை வதைப்பதா?' - மத்திய அரசுக்கு தினகரன் கண்டனம்
» புதுக்கோட்டை அருகே மர்ம மரணம்: சடலத்தை மீட்டு காவல்துறையினர் விசாரணை
இந்த வழக்கில் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. ஏற்கெனவே அமலில் உள்ள இட ஒதுக்கீட்டில் உள் இட ஒதுக்கீடு வழங்க மாநில சட்டப்பேரவை முடிவெடுக்க முடியுமா? சாதி வாரியாக எந்த கணக்கெடுப்பும் இல்லாமல் இது போன்ற உள் இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா? எந்த ஆய்வும் மேற்கொள்ளாமல் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் ஒரு பிரிவுக்கு மட்டும் 10.5 சதவீத ஒதுக்கீடு வழங்க முடியுமா என பல கேள்விகள் உள்ளன.
சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாமல் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் ஒரு வகுப்புக்கு மட்டும் உள் இட ஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. எனவே, வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு நிறைவேற்றிய அவசரச் சட்டம் ரத்து செய்யப்படுவதாக தீர்ப்பளித்தனர்.
மேல்முறையீடு: இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, பாமக சார்பிலும், இடஒதுக்கீட்டை எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இட ஒதுக்கீடு ரத்து செல்லும்: இந்த மேல்முறையீட்டு மனுக்கள் நீதிபதிகள் நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், "1994-ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தை மீறும் வகையில், உள் இடஒதுக்கீடு கொடுக்கும்போது விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்பட வேண்டும். மக்கள் தொகை ரீதியிலான சாதிய உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கு, மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால், அவ்வாறு இடஒதுக்கீடு வழங்கும்போது அதற்கு சரியான, நியாயமான காரணங்களை மாநில அரசுகள் கூற வேண்டும்.
வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள விவகாரத்தில் அதற்கான சரியான காரணங்கள் எதுவும் கூறப்படவில்லை. எனவே இதன் காரணமாக உள் இடஒதுக்கீடு வழங்கி பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்கிறோம். இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற கிளை வழங்கிய தீர்ப்பை உறுதி செய்கிறோம்" எனத் தீர்ப்பளித்தனர்.
தீர்ப்பு குறித்து தமிழக அரசின் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் கூறுகையில்: "உயர் நீதிமன்ற கிளை பிறப்பித்த அந்த தீர்ப்பின் அத்தனை விசயங்களையும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்யவில்லை. மாநில அரசுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க அதிகாரம் இல்லை என்பதை உச்ச நீதிமன்றம் ஒத்துக்கொள்ளவில்லை. மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது.
குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும். அதை வாங்காமல் இந்த இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதாக கூறப்பட்டது. அதையும் உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. அவ்வாறு ஒப்புதல் பெற அவசியமில்லை என்று கூறியுள்ளது.
உள் இட ஒதுக்கீடு, ஏற்கெனவே எம்பிசிக்கு 20 சதவீதம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 10.5 சதவீதம் வன்னியர்களுக்கு கொடுப்பதற்கு வாய்ப்பில்லை என கூறப்பட்டது. அதனை ஏற்றுக்கொள்ளாத உச்ச நீதிமன்றம், மாநில அரசுக்கு அவ்வாறு இட ஒதுக்கீடு வழங்க அதிகாரம் உள்ளது என்று கூறியுள்ளது.
நீதிபதி தணிகாசலம் அளித்த அறிக்கையின் அடிப்படையில்தான் இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளனர். அதில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் கொடுக்க பரிந்துரைத்திருந்தார். இந்த அறிக்கை ஜனார்த்தனம் கமிசன் அறிக்கையை பார்க்காமல், நீதிபதி தணிகாசலம் அறிக்கை தந்துள்ளார். எனவே இதுபோன்ற உள் இட ஒதுக்கீடு நிலைக்கத்தக்கதல்ல. இது அரசியல் சட்டப்பிரிவு 14-க்கு விரோதமானது எனக்கூறி ரத்து செய்துள்ளனர்" என்று கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago