சென்னை சென்ட்ரலில் மேம்படுத்தப்பட்ட சுரங்கப்பாதையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

சென்னை: மத்திய சதுக்கத் திட்டத்தின் கீழ் சென்னை சென்ட்ரல் பகுதியில் ,ரூ. 34.22 கோடி செலவில் அழகுபடுத்தப்பட்ட நில மேம்பாட்டு வசதிகள் மற்றும் சுரங்க நடைபாதையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சென்னை சென்ட்ரல் பகுதியில், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் நிதியுதவியுடன், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் செயல்படுத்தப்படும் உலகத் தரம் வாய்ந்த பன்முக போக்குவரத்து ஒருங்கிணைப்பு திட்டமான மத்திய சதுக்கத் திட்டத்தின் கீழ், 34.22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அழகுபடுத்தப்பட்ட நில மேம்பாட்டு வசதிகள் மற்றும் சுரங்க நடைபாதையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 30) பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

அழகுபடுத்தப்பட்ட நில மேம்பாட்டு வசதிகள்: திறந்த வெளிப்பகுதி, நடந்து செல்பவர்களுக்கு பாதுகாப்பாகவும் வசதியாகவும் மேம்படுத்தப்பட்டு மரங்கள், புல்வெளி மற்றும் அழகிய தாவரங்களுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும், வண்ண விளக்குகளுடன் கூடிய நீரூற்றுகள், நடைபாதையில் டென்சைல் கானோபி, பர்கோலாஸ் மற்றும் கிரைனைட் இருக்கைகள், நடைபாதையை ஒட்டி வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் எளிதில் செல்லும் வகையில் பாதைகளும், கிரானைட் கற்கள் பதிக்கப்பட்ட நடைபாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மேம்பாட்டுப் பணிகள் சுமார் ரூ. 12.49 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சுரங்க நடைபாதை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பகுதியில் பல்லவன் சாலை பூந்தமல்லி நெடுஞ்சாலை சந்திப்பிற்கு குறுக்கே பாதசாரிகள் பாதுகாப்பாக செல்லும் வகையில் சுரங்க நடைபாதை அமைக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் அனைத்து வகையான பயனாளிகளும் பயன்பெறுமாறு மின்தூக்கிகள் மற்றும் நகரும் படிக்கட்டுகளும் நிறுவப்பட்டுள்ளன. ஏற்கனவே பூந்தமல்லி நெடுஞ்சாலையின் குறுக்கே அமைந்துள்ள சுரங்க நடைபாதையுடன் இவை ஒருங்கிணைக்கப்பட்டு, பழைய சுரங்கப்பாதையையும் மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தேவையான மின்விளக்குகள் மற்றும் ஒளிரும் வழிகாட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சுரங்க நடைபாதை சுமார் ரூ. 21.73 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் / முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE