ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிக்க உரிய சட்டம் தேவை: அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: ஆன்லைனில் விளையாடப்படும் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் வகையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவினை எதிர்த்து மேல்முறையீடு செய்யவோ அல்லது சூதாட்டத்தை ஒழிக்கும் வகையில் சட்டம் இயற்றவோ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்துயுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சூதாட்டம் ஒரு நோய் என்பதும், அடிமைத்தனம் என்பதும், பொறுப்புணர்வை இழக்கச் செய்யும் திறன் கொண்டது என்பதும், எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதும், குடும்பத்தை நடுத் தெருவிற்கு அழைத்து வந்துவிடும் என்பதும், பணிச் சீர்குலைவை உண்டாக்கும் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றாகும். இதனை நன்கு உணர்ந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2003ம் ஆண்டு லாட்டரி விற்பனைக்குத் தடை விதித்தார்.

லாட்டரி விற்பனை தடை செய்யப்பட்டாலும், ஆன்லைன் மூலம் பல்வேறு விளையாட்டுகள் சில ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகப்படுத்தப்பட்டு, இளைஞர்கள் அடிமைகளாக்கப்பட்டனர். சில தற்கொலை நிகழ்வுகளும் நடந்தேறின. இதனையடுத்து, ரம்மி, போக்கர் உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை தடுக்கும் வகையில், முதலில் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு, பின்னர் தமிழ்நாடு விளையாட்டு மற்றும் காவல் சட்டங்கள் திருத்தச் சட்டமுன்வடிவு 04-02-2021 அன்று தமிழக சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்டு, 05-02-2021 அன்று நிறைவேற்றப்பட்டது.

மேற்படி அவசரச் சட்டத்தை எதிர்த்து தனியார் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கினை தொடுத்தது. இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மேற்படி சட்டம் ஒரு தொழிலையோ அல்லது பணியையோ அல்லது வியாபாரத்தையோ மேற்கொள்ள இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள உரிமைக்கு எதிராக உள்ளது என்று தெரிவித்து ஆன்லைன் விளையாட்டினை தடை செய்ய வழிவகுக்கும் திருத்தச் சட்டத்தினை ரத்து செய்து 02-08-2021 அன்று தீர்ப்பளித்தது. அதே சமயத்தில், சட்டத்திற்கு உட்பட்ட தன்மைக்கேற்ப பந்தயம் மற்றும் சூதாட்டம் குறித்து உரிய சட்டத்தை இயற்ற தமிழக அரசுக்கு எந்தத் தடையும் இல்லை என்றும் சென்னை உயர்
நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

எனினும், இது குறித்து உரிய சட்டத்தை அரசு கொண்டு வந்ததாகவோ அல்லது சென்னை உயர் நீதிமன்ற ஆணையை எதிர்த்து மேல்முறையீடு செய்ததாகவோ தெரியவில்லை. இந்தச் சூழ்நிலையில், ஃபேன்டசி, ரம்மி, லூடோ, போக்கர், கால் பிரேக், கேரம் என பல ஆன்லைன் விளையாட்டுகள் குறித்தும், 2,000 கோடி ரூபாய் வரையில் ஜெயிக்கலாம் என்றும் பிரபல நாளிதழ்களில் முதல் பக்கத்தில் விளம்பரங்கள் கடந்த சில நாட்களாக வந்து கொண்டிருக்கின்றன. அந்த விளம்பரத்திலேயே, இந்த விளையாட்டில் நிதி அபாயங்கள் உள்ளன என்றும், இது ஒரு கட்டாய பழக்கமாக மாறலாம் என்றும், தயவு செய்து பொறுப்புடனும், சுய கட்டுப்பாட்டுடனும் விளையாடவும் என்றும் கொடுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்தே இது சூதாட்டம் என்பது தெள்ளத் தெளிவாகிறது.

ஆன்லைன் விளையாட்டால் பணத்தை இழந்து விரக்தியில் தமிழகத்தைச் சேர்ந்த பலர் தற்கொலை செய்து கொண்டதன் காரணமாகத் மேற்படி சட்டம் கொண்டு வரப்பட்டு, இந்த விளையாட்டு சில மாதங்களுக்கு தமிழகத்தில் நடைபெறாமல் இருந்தது. தற்போது மேற்படி சட்டம் ரத்து செய்யப்பட்டதன் காரணமாக ஆன்லைன் விளையாட்டு மீண்டும் தலைதூக்க ஆரம்பித்து, அதில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக இளைஞர்கள் இந்த விளையாட்டில் ஆர்வம் காட்டுவதாகவும், ஆன்லைன் விளையாட்டில் வெற்றி அடைபவர்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதாக விளையாட்டுத் துறையினரும், திரைப்படத் துறையினரும் விளம்பரம் செய்வதன் காரணமாக இளைஞர்கள் இதில் நாட்டம் செலுத்துகின்றனர் என்றும் கூறப்படுகிறது.

எனவே இந்த விளையாட்டு தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென்பதே பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. 1968ம் ஆண்டைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை மேற்கோள் காட்டி இந்த ஆன்லைன் விளையாட்டு சூதாட்டம் அல்ல, திறமையை வளர்க்கும் விளையாட்டு என்று மேற்படி விளையாட்டினை நடத்தும் நிறுவனங்கள் சொல்வது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. இது திறன் விளையாட்டாக இருந்தால், இதில் உள்ள அபாயங்கள் குறித்து விளம்பரத்தில் ஏன் குறிப்பிடப்பட்டு இருக்கிறது?

இந்த நிலைமை தொடர்ந்தால், இளைஞர்கள் கல்வியிலும், வேலை வாய்ப்பினைத் தேடுவதிலும் நாட்டம் செலுத்துவதை தவிர்த்து, இதுபோன்ற அடிமைத்தனத்திற்கு ஆளாக்கப்படுவார்கள். இதன்மூலம் பாதிக்கப்படுபவர்கள் ஏழை, எளிய, நடுத்தர மக்கள்தான். இது போன்ற விளையாட்டு மிகவும் ஆபத்தானது.

எனவே, முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, ஆன்லைன் மூலம் விளையாடப்படும் ஃபேன்டஸி, லூடோ, போக்கர், ரம்மி, கால்பிரேக் உள்ளிட்டவற்றிற்கு தடை விதிக்கும் வகையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவினை எதிர்த்து மேல்முறையீடு செய்யவோ அல்லது சூதாட்டத்தை ஒழிக்கும் வகையில் உரிய சட்டம் இயற்றவோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்