போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் ஓய்வுக்கால பயன்களை தாமதப்படுத்துவது நியாயமல்ல: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: "போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் பணக்காரர்கள் அல்ல. ஓய்வுக்கால பயன்கள் எனப்படுபவை அவர்கள் செலுத்திய பணத்தை அவர்களுக்கு திருப்பித் தருவது தான். அதில் தாமதம் செய்வது நியாயமல்ல" என்று தமிழக அரசை பாமக நிறுவனர் ராமதாஸ் கடுமையாக சாடியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர்கள், பணியின்போது உயிரிழந்தவர்கள் என 1000-க்கும் மேற்பட்ட பணியாளர்களின் குடும்பங்கள் ஓய்வுக்கால பயன்களை பெற முடியாமல் தவித்து வருகின்றன. குடும்பச் சூழலை கருத்தில் கொண்டு ஓய்வுக்கால பயன்களை வழங்க வேண்டும் என்ற அவர்களின் அடிப்படையான கோரிக்கையை பரிசீலிப்பதற்குக் கூட அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் முன்வராதது கண்டிக்கத்தக்கது ஆகும்.

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி கடந்த 10 ஆண்டுகளாக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் அனைவரும் வெறுங்கைகளுடன் தான் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட வேண்டிய ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சத்திற்கும் கூடுதலான ஓய்வுக் கால பலன்கள் பல ஆண்டு இழுத்தடிப்புக்குப் பிறகு தான் வழங்கப்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக பல முறை வலியுறுத்தியதன் பயனாக 31.03.2020 வரை ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்துக்கழகங்களின் பணியாளர்களுக்கு ஓய்வுக்கால பயன்கள் வழங்கப்பட்டு விட்டன.

அதன்பின் ஓய்வு பெறுவதற்கான வயது 60 ஆக உயர்த்தப்பட்டதால், அடுத்த இரு ஆண்டுகளுக்கு எவரும் ஓய்வு பெற மாட்டார்கள்; 2022-க்குப் பிறகு நிலைமை சீரடையும் என நம்பப்பட்டது. ஆனால், கள நிலைமை வேறாக உள்ளது.

2000-வது ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு வயது முதிர்வின் அடிப்படையில் எவரும் ஓய்வு பெறவில்லை என்றாலும் சுமார் 1,000 பணியாளர்கள் விருப்ப ஓய்வு பெற்றுள்ளனர். நூற்றுக்கணக்கான பணியாளர்கள் பணிக்காலத்தில் உயிரிழந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் உடனடியாக ஓய்வுக் கால பயன்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கிட்டத்தட்ட இரு ஆண்டுகளாக இவர்களுக்கு மற்றும் குடும்பங்களுக்கு ஓய்வுக்கால பயன்கள் வழங்கப்படவில்லை. ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. அதனால் சம்பந்தப்பட்ட குடும்பங்கள் துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.

விருப்ப ஓய்வு பெற்றவர்களின் குடும்பங்களுக்கும், பணிக்காலத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கும் கல்விச் செலவு, திருமண செலவு, மருத்துவச் செலவு என ஏராளமான பொருளாதாரக் கடமைகள் உள்ளன. அவர்களில் பலரும் ஓய்வு பெறுவதற்கு இன்னும் சில ஆண்டுகள் இருக்கும் போதிலும், முன்கூட்டியே விருப்ப ஓய்வு பெற்றதற்கு காரணம், ஓய்வுக்கால பயன்களைக் கொண்டு செலவுகளை சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை தான். ஆனால், கடந்த இரு ஆண்டுகளில் விருப்ப ஓய்வு பெற்ற சுமார் 1,000 பணியாளர்களில் ஒருவருக்குக் கூட, இன்று வரை ஓய்வுக்கால பயன்கள் வழங்கப்படவில்லை.

ஓய்வுக்கால பயன்கள் வழங்கப்படாததால் பல பணியாளர்கள் தங்களின் பிள்ளைகளின் படிப்பு, திருமணம் ஆகியவற்றுக்காகவும், குடும்பத்தினரின் மருத்துவச் செலவுக்காகவும் வட்டிக்கு கடன் வாங்கி செலவு செய்கின்றனர். ஒரு மாதத்திற்கு ரூ.15,000 வரை ஓய்வூதியம் மட்டுமே பெறும் ஓய்வு பெற்ற ஊழியர்களால் எவ்வாறு வட்டியுடன் கடனை அடைக்க முடியும்?

2003-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன் பணியில் சேர்ந்தவர்களின் நிலை இதுவென்றால், அதற்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி பணியில் சேர்க்கப்பட்ட அவர்களுக்கு ஓய்வூதியமும் வழங்கப்படுவதில்லை. அதனால், அவர்கள் அன்றாட செலவுகளை சமாளிக்கவே திணறுகின்றனர்.

ஓய்வு பெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் மீதான அகவிலைப்படி உயர்வும் வழங்கப்படுவதில்லை என்பதால், அவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்தால் போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க ஓய்வுக்கால பயன்களும் வழங்கப்படாதது தொழிலாளர் நலனுக்கு எதிரானதாகும்.

போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் பணக்காரர்கள் அல்ல. ஓய்வுக்கால பயன்கள் எனப்படுபவை அவர்கள் செலுத்திய பணத்தை அவர்களுக்கு திருப்பித் தருவது தான். அதில் தாமதம் செய்வது நியாயமல்ல. எனவே, போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த முன்வருவதுடன், ஓய்வுக்கால பயன்களையும் உடனடியாக வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்