சென்னை: துபாய் மற்றும் அபுதாபி பயணத்தில் 14,700 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் 6 மிகப்பெரிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருக்கின்றன என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், ”அனைவருக்கும் வணக்கம். நான் முதல்வராக பொறுப்பேற்றதற்குப் பிறகு, முதல்முறையாக வெளிநாட்டுப் பயணமாக துபாய், அபுதாபி போன்ற நாடுகளுக்குச் சென்று விட்டு வந்திருக்கிறேன். என்னுடைய பயணம் வெற்றிகரமாக, மகிழ்ச்சிகரமான பயணமாக அமைந்தது என்பதை முதலில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். எப்படி துபாய் பிரம்மாண்டமான ஒரு நாடாக உருவாகியிருக்கிறதோ, அதுபோன்று என்னுடைய பயணமும் மிகப் பிரம்மாண்டமான வகையில் அமைந்தது என்பதை மகிழ்ச்சியுடன் நான் உங்களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
ஆறு மிக முக்கியமான தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) போடப்பட்டு இருக்கிறது.
* இரும்பு தளவாடங்கள் துறையில் இருக்கக்கூடிய நோபல் ஸ்டீல்ஸ் துறையோடு 1,100 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது.
» 8 நாட்களில் 7-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு: டெல்லியில் லிட்டர் ரூ.100-ஐ கடந்தது
*ஜவுளித் துறையைச் சார்ந்த White House நிறுவனத்துடன் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது.
*உணவுத் துறையைச் சார்ந்த Transworld குழுமத்தோடு 100 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது.
* மருத்துவத் துறையைச் சார்ந்த Aster DM Healthcare நிறுவனத்தோடு 500 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது.
* சரக்கு போக்குவரத்து நிறுவனத்தைச் சார்ந்த Sharaf நிறுவனத்துடன் 500 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது.
* உணவு பதப்படுத்தும் தொழில் மற்றும் கட்டுமானத்துறையைச் சார்ந்த Lulu நிறுவனத்தோடு 3,500 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது.
இந்த ஆறு நிறுவனங்களுடன் 6,100 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தங்கள் போடப்பட்டிருப்பதன் மூலமாக 14,700 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகப் போகிறது. ஆகவே, இந்தப் பயணம் ஒரு மகத்தான பயணமாக, வெற்றிப் பயணமாக அமைந்திருக்கிறது என்பதை நான் மகிழ்ச்சியுடன் உங்களுக்கு தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
துபாய் மற்றும் அபுதாபிக்குச் சென்று அந்த நாட்டினுடைய முக்கியமான துறைகளின் அமைச்சர்களையும், அரசு சார்ந்த அலுவலர்களையும், பெரிய பெரிய தொழில் நிறுவனங்களின் தலைவர்களையும் நான் சந்தித்து உரையாடி இருக்கிறேன். துபாய், அபுதாபி உள்ளிட்ட அமீரகத்தின் பெரும் நிதி மேலாண்மை நிறுவனங்கள் தமிழகத்தில் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தித் திட்டங்கள், சிறு துறைமுகங்கள் மேம்பாடு, உணவு பதப்படுத்துதல், தொழில் பூங்காக்கள் உருவாக்கக்கூடிய திட்டங்களில் முதலீடு செய்திட அவைகளெல்லாம் முன்வந்திருக்கின்றன. தமிழகத்தில் தொழில் முதலீடுக்கு ஏற்ற சூழல் இருப்பதை நான் தெளிவாக எடுத்துச் சொல்லி இருக்கிறேன்.
தமிழகத்தில் நிலவக்கூடிய, தொழில் தொடங்க உதவக்கூடிய சாதகமான சூழ்நிலை அமைந்திருப்பதை எல்லோரும் அங்கே என்னை பாராட்டினார்கள், தமிழகத்தையும் ஒட்டுமொத்தமாக பாராட்டியிருக்கிறார்கள். இப்போது 6 மிகப்பெரிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருக்கிறது.
தொடர்ந்து, அடுத்தடுத்த மாதங்களில் இன்னும் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருக்கின்றன. நான் சந்தித்த அனைவரையும், தமிழகத்தில் வருகை தரவேண்டும் என்று நான் அழைப்பு விடுத்திருக்கிறேன். அவர்களது வருகை தமிழகத்தினுடைய வளர்ச்சிக்கு அடித்தளமாக நிச்சயம் அமையப் போகிறது.
ஜவுளித்துறை, மருத்துவ சேவைத் துறை, உணவு பதப்படுத்துதல், இரும்பு தளவாடங்கள் செய்தல் ஆகிய துறைகள் நிச்சயமாக வளர்ச்சி பெறும். அந்த வகையில், துபாய் பயணம் தமிழக வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமான அடித்தளத்தை அமைத்துள்ளது. அதேபோல் நம்முடைய தொழில் துறை அமைச்சர் அவருக்கு துணை நிற்கக் கூடிய தொழில் துறை அதிகாரிகளும் மிகவும் சிறப்பான வகையில் நம்முடைய பிரச்சினைகளை எல்லாம் அங்கே எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். அதற்காக நான் எல்லாம் இந்த நேரத்தில் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.
மேலும் தமிழகத்தில் தொழில் துறையின் கீழ் இயங்கக்கூடிய தொழில் வழிகாட்டி நிறுவனம் (Guidance Bureau) மூலமாக இரு நாடுகளிலிருந்து மேலும் முதலீடுகளைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும்.
’காகிதக் கப்பல்கள்.. ’ கடந்த அதிமுக ஆட்சியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அனைத்தும் காகிதக் கப்பல்களாகத் தான் இருந்தது. ஒப்பந்தம் போட்டதோடு சரி. ஆனால் நாங்கள் ஒப்பந்தம் போட்டிருக்கிறோம். அதனை விட முக்கியமாக அந்த நிறுவனங்கள் இங்கே வந்து தொழில் தொடங்க நடவடிக்கை எடுப்பதும், துரிதப்படுத்துவதுடன், முதலமைச்சரின் அலுவலகத்தில் Dash Board வைத்து மாதந்தோறும் அதை நாங்கள் ஆய்வு நடத்தி குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே அந்தத் தொழிலைத் தொடங்கி ஒரு நல்ல சூழலை உருவாக்கப் போகிறோம். வேலைவாய்ப்பை உருவாக்கப் போகிறோம். இதனை, உடன் வந்த அதிகாரிகள் அனைவருக்கும் நான் உத்தரவாக பிறப்பித்திருக்கிறேன். தொழில் துறைக்கு நன்றி சொன்னது போலவே, துபாய் அபுதாபி வாழ் தமிழர்களுக்கும் நான் இந்த நேரத்தில் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். அவர்கள் தந்த வரவேற்பு மிகவும் எழுச்சியோடு, உணர்ச்சியோடு இருந்தது, இன்னும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால், நாங்கள் போனபோது தமிழ்நாட்டு உணர்வைத் தான் நான் பெற்றேன். அந்த அளவிற்கு அவர்கள் உற்சாகத்தை, வரவேற்வை எனக்கு வழங்கியிருக்கிறார்கள். எனக்கே ஒரு சந்தேகம் வந்தது, இது தமிழ்நாடா அல்லது துபாயா என்று கூட எனக்கு சந்தேகம் வந்தது. அந்த வகையில்,
என்னுடைய பயணம் வெற்றிகரமாக அமைந்தது என்பதை மீண்டும், மீண்டும் உங்கள் மூலமாக தமிழ்நாட்டு மக்களுக்கு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதன் விவரம்,கேள்வி: துபாயில் உள்ள தொழிலதிபர்களுக்கு இங்கு வந்து தொழில் தொடங்குவதற்கு எந்த அளவு எதிர்பார்ப்பு இருக்கிறது? இங்கு வந்து தொழில் தொடங்குவதற்கு அவர்களுக்கு எந்த அளவுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறீர்கள்?
முதல்வர்: ஒப்பந்தம் நேரடியாக கையெழுத்திட்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் தொடங்கினீர்கள் என்றால் எல்லா விதமான சலுகைகளும் முறையான வகையில் தொழில் தொடங்குவதற்கான சூழ்நிலையை நிச்சயமாக உருவாக்கத் தருகிறோம் என்ற நம்பிக்கையை கொடுத்திருக்கிறோம். அவர்களும் அந்த நம்பிக்கையுடன் தான் இருக்கிறார்கள்.
கேள்வி: இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் தொழில் வடிவம் எத்தனை மாதங்களில் வரும்?
முதல்வர்: ஒரு குறிப்பிட்ட காலத்தை நிர்ணயித்து ஒப்பந்தம் கையெழுத்திட்டிருக்கிறோம். அதுதான் சொன்னேன், நாங்கள் ஒப்பந்தம் போட்டிருக்கிற தேதிக்கு முன்பே அந்தத் தொழிலை தமிழ்நாட்டிற்கு கொண்டுவந்து வேலைவாய்ப்பை நிச்சயமாக உருவாக்கித் தருவோம். அதில் எந்த சந்தேகமும் இல்லை.
கேள்வி: உங்களுடைய பயணம் குறித்து எதிர்க்கட்சிகள் எல்லாம் பல குற்றச்சாட்டுகள் வைக்கிறார்கள், அதைப் நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
முதல்வர்: அவர்கள் எதிர்க்கட்சி, அப்படித்தான் சொல்வார்கள். நான் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவது கிடையாது.
கேள்வி: தொடர்ச்சியாக இப்பொழுது ஐக்கிய அரபு நாடுகளில் சென்றது போல, வேறு நாடுகளுக்குச் சென்று, தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான வாய்ப்பு எப்படி இருக்கிறது?
முதல்வர்: தொழில் தொடங்கக்கூடிய சூழ்நிலையில், வேலைவாய்ப்பு ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலையில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக நிச்சயமாக அப்படி ஒரு சூழ்நிலை வருகிறபோது நான் நிச்சயமாக பயன்படுத்துவேன், அதில் எந்த சந்தேகமும் இல்லை.
இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
21 mins ago
தமிழகம்
26 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago