அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றுடன் தனது பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்புகிறார். முன்னதாக இந்திய சமூக மற்றும் கலாச்சார மையத்தில், இந்திய சமூக மற்றும் கலாச்சார மையம் மற்றும் அபுதாபி வாழ் தமிழ் சமூகம் சார்பாக நடைபெற்ற பாராட்டு விழாவில் கடைசியாக அவர் ஆற்றிய உரையில், "நான்கு நாட்களாக துபாயிலும், இந்த அபுதாபி பகுதியிலும் நான் ஒரு சுற்றுப் பயணத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன். தமிழகத்திலே தான் சுற்றுப் பயணம் நடத்துவது எனக்கு வழக்கம்.
அழைத்த இடங்களுக்கு எல்லாம் நான் போவது உண்டு. அப்படி அழைக்கப்பெறும் இடங்களிலெல்லாம் எனக்கு வரவேற்புக்களை மகிழ்ச்சியோடு, உற்சாகத்தோடு, ஊக்கத்தோடு என்னை வரவேற்பது உண்டு. அதற்குக் கொஞ்சம் கூட குறைவில்லாமல், கொஞ்சம் கூட இல்லை, ஒரு இன்ச் கூட குறைவில்லாமல், இந்த நான்கு நாட்களாக நான் திக்குமுக்காடிப் போயிருக்கிறேன். எதைப் பேசுவது, என்ன பேசுவது, எப்படிப் பேசுவது என்று நான் யோசிக்கின்ற நேரத்தில், பேசாமல் உங்கள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தால் போதும், அப்படி என்கிற உணர்வு தான் என்னை ஆட்கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டை நோக்கி பல தொழில் நிறுவனங்களை ஈர்ப்பதற்கான பயணமாக என்னுடைய பயணம் என்று சொல்லப்பட்டாலும், அதற்காக சுற்றுப் பயணத்தை வகுத்திருந்தாலும், இன்னும் அதைத் தாண்டி சொல்ல வேண்டுமென்றால், தமிழ்நாட்டை நோக்கி தமிழர்களின் மனங்களை ஈர்க்கின்ற பயணமாக என்னுடைய பயணம் அமைந்திருக்கிறது.
ஆனால், இந்தப் பயணம் இவ்வளவு வெற்றி அடைந்து கொண்டிருக்கிறதே, இவ்வளவு சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறதே, ஊடகங்களில் பார்க்கிறார்கள், பத்திரிகைகளில் படிக்கிறார்கள், தொலைக்காட்சியில் இந்தக் காட்சிகளையெல்லாம் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய எல்லோரும் பார்க்கிறார்கள். ஆனால் ஒரு சிலருக்கு இந்த வெற்றியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதைத் திசை திருப்ப வேண்டும், ஒரு தவறான பிரசாரத்தை நடத்திட வேண்டும் என்று திட்டமிட்டு, நான் பணத்தை எடுத்துக் கொண்டு வந்திருப்பதாக, நான் அரசியல் பேசுவதாக நீங்கள் கருதக்கூடாது, நான் அரசியல் பேசினேன் என்றால் நீங்கள் என்னை விடமாட்டீர்கள், அது வேறு அதுவும் எனக்குத் தெரியும். நான் பணத்தை எடுத்துக் கொண்டு வரவில்லை, தமிழ்நாட்டில் வாழக்கூடிய மக்களுடைய மனத்தைத் தான் எடுத்து வந்திருக்கிறேன், அதுதான் உண்மை.
» குற்றவாளிகளை அடையாளம் காணும் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் - காஞ்சிபுரத்தில் புதிய முயற்சி
» தமிழகத்தில் இன்று 33 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 16 பேர்: 61 பேர் குணமடைந்தனர்
உங்களில் ஒருவனான நான், உங்களது தமிழ்ச் சொந்தங்களால் தமிழ்நாட்டின் முதல்வர் பொறுப்புக்கு வந்திருக்கிறேன், அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு செயலாற்றிக் கொண்டிருக்கிறேன். நான் எப்போதும் சொல்வது உண்டு. துபாயில் கூட பேசுகிற போது, குறிப்பிட்டுச் சொன்னேன். முதல்வர் பொறுப்பு என்று சொன்னேனே தவிர, முதல்வர் பதவி என்று சொல்லவில்லை. அந்த நிலையிலே தான் நான் என்னுடைய பணியை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேன்.
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சி, அதுதான் திராவிட மாடல். அந்த திராவிட மாடல் ஆட்சியைத்தான் நாங்கள் இன்றைக்கு தமிழகத்தில் நடத்திக் கொண்டிருக்கிறோம். ஆகவே, பல துறைகள் இருந்தாலும், முக்கியமான துறைகளில் ஒன்று, தொழில் துறை. அந்தத் தொழில் வளர்ச்சி என்பது தனிப்பட்ட ஒரு நிறுவனத்தினுடைய வளர்ச்சி மட்டுமல்ல, ஒரு தொழில் நிறுவனம் தொடங்குகின்றபோது, அந்த நிறுவனத்தோடு சேர்ந்து பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் பயனடைகிறார்கள். அந்த நிறுவனத்தின் மூலமாக மாநிலமே வளர்ச்சி பெறுகிறது. அத்தகைய வளர்ச்சிக்கு இந்த ஐக்கிய அரபு அமீரகமும், அதன் நிறுவனங்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று நான் உங்களையெல்லாம் விரும்பி, வேண்டி கேட்டுக் கொள்ள வந்திருக்கிறேன்.
இந்தப் பயணத்தில், நான் பெருமையோடு சொல்கிறேன், 6,100 கோடி ரூபாய் மதிப்பிலான தொழில்கள் தொடங்க ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கிறது. துபாய் இல்லாமல் - துபாய் நிறுவனங்கள் இல்லாமல் ஒரு மாநிலம் வளர முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும், எனக்கும் தெரியும். அதனால்தான் முதல் வெளிநாட்டுப் பயணமாக துபாய் பயணத்தைத் தான் நான் தேர்ந்தெடுத்தேன். தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு இத்தனை நிறுவனங்கள் ஆர்வமாக இருப்பதைப் பார்த்து நான் உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன்.
துபாயில் இருக்கக்கூடிய உலகின் மிக உயர்ந்த கட்டடமான புர்ஜ் கலீஃபா அந்த கோபுரத்தில் நம்முடைய செம்மொழியான தமிழ் வண்ண வண்ண விளக்குகளில் ஒளிர்ந்ததை, அதைப் பாடியதை, நம்முடைய தமிழ்நாட்டின் பெருமை - பாரம்பரியம் - அகழ்வாய்வுகள் காட்டும் தொன்மை ஆகியவற்றின் சிறப்புகள் உலகறிய வெளிப்பட்டதைப் பார்த்தபோது எனக்கு உள்ளபடியே மகிழ்ச்சி.
"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி தமிழ்க்குடி’என்று சொல்வார்கள். இன்றைக்கு உலகம் முழுவதும் பரவி இருக்கும் நம்முடைய தமிழினம், சுமார் 75-க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழர்கள் வந்து வாழ்கிறார்கள். தமிழ்ப் பெருமையை நாம் பேசினாலும் - 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற தமிழ் நெறிப்படி உலகம் முழுவதும் பரவி நாம் வாழ்ந்து வருகிறோம். எந்த நாட்டில் வாழ்ந்தாலும், நமது தாய் மண்ணை நாம் மறந்துவிடக் கூடாது. சிவகங்கை மாவட்டம் கீழடியில் கிடைத்துள்ள ஆதாரங்கள் நம்முடைய பழமையை - பெருமையை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே - வியக்கத்தக்க வகையிலே செங்கல் கட்டுமானங்கள், கருப்பு மற்றும் சிவப்பு வண்ணம் தாங்கிய பானை ஓடுகள், அரிய கல்மணிகள், தங்க அணிகலன்கள், சிந்துவெளி நாகரிக காலத்தில் காணப்பட்ட அதே, திமில் கொண்ட காளையின் எலும்புகள், விளையாட்டுப் பொருட்கள், தொழிற்பகுதிகள் என ஒரு செழுமைமிக்க சமூகமாக சங்காலத் தமிழர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை நாம் மட்டுமல்ல, உலகமே கீழடி மூலமாக அறிந்து கொண்டிருக்கிறது. இவற்றைக் கொண்ட மாபெரும் கண்காட்சி அரங்கத்தை விரைவில் நாம் அமைக்க இருக்கிறோம்.
கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, கொடுமணல், மயிலாடும்பாறை, கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய இடங்களிலும் தற்போது அகழாய்வுப் பணிகளை நாம் மேற்கொண்டிருக்கிறோம். தமிழினத்தின் வரலாறு என்பது 3200 ஆண்டுகளுக்கு முந்தியது என்ற வரலாற்றை மீட்டெடுக்க தமிழக அரசு உறுதி பூண்டுள்ளது. ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கை உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின் போது கிடைத்திருக்கக்கூடிய அரிய பொருட்களை அழகுற காட்சிப்படுத்தும் விதமாக, திருநெல்வேலி நகரில் நவீன வசதிகளுடன் அருங்காட்சியகம் அமைக்கப்படும். இது "தண்பொருநை" அருங்காட்சியகம் என அழைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் நான் ஏற்கனவே அறிவித்திருக்கிறேன்.
இதுமட்டுமல்ல, தமிழ்ப் பண்பாட்டின் வேர்களைத் தேடி, இந்திய நாடெங்கும், அதேபோல் கடல்கடந்து பயணம் செய்து தமிழர்கள் வெற்றித்தடம் பதித்த வெளிநாடுகளிலும் தமிழக தொல்லியல் துறை உரிய அனுமதிகளைப் பெற்று இனி ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும் என்றும் நான் அறிவித்திருக்கிறேன். ஒரு இனம் கடந்தகால வரலாற்றை முழுமையாக அறிந்திருக்க வேண்டும். அதனை ஆவணப்படுத்த வேண்டும். அதனை வரக்கூடிய வருங்காலத் தலைமுறைக்குச் சொல்லித் தர வேண்டும். எத்தகைய வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள் என்ற பெருமிதம் நமக்கு வேண்டும்.
அதே நேரத்தில் கடந்தகாலப் பெருமைகளை மட்டும் பேசிக் கொண்டு இருந்துவிடக் கூடாது. நிகழ்காலத்தில் கல்வியில், வேலைவாய்ப்பில், தொழில் வளர்ச்சியில், வர்த்தகத்தில் நாம் முன்னேற வேண்டும். அதனால்தான், ஒரு கையில் கடந்த காலப் பெருமிதங்கள் - இன்னொரு கையில் எதிர்கால பெரிய உயர்வுகள் - ஆகிய இரண்டுக்கும் முக்கியத்துவம் தரும் அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.
இந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னால் அமீரக தேசிய கீதம் பாடல் பாடப்பட்டது. இந்தியாவினுடைய தேசிய கீதம் பாடலும் பாடினார்கள். அதேபோல தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டிருக்கிறது. ஆகவே, எப்படி அமீரக தேசிய கீதம் பாடுகின்றபோது, நாம் எழுந்து நின்று அதற்குரிய மரியாதையை, நம்முடைய வணக்கத்தைச் செலுத்தினோமோ, அதேபோல, இந்தியாவினுடைய தேசிய கீதம் பாடுகிறபோதும் நாம் நம்முடைய மரியாதையை, நம்முடைய வணக்கத்தைத் தெரிவித்திருக்கிறோம்.
நிறைவாக, தமிழ்த்தாய் வாழ்த்து பாடுகிறபோது பார்த்தேன், எல்லோருடைய வாயும் அசைந்தது, மேடையில் இருக்கக்கூடிய எல்லோருடைய வாயும், என்னுடைய வாயும் சேர்த்துச் சொல்கிறேன். எல்லோர் வாயும், அந்தப் பாடலைப் பாடியது. அந்தப் பாடலுக்கு நாம் ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு சர்ச்சை ஏற்பட்டது, நான் அந்த பிரச்சனைக்கு போக விரும்பவில்லை. ஆனால், அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து இனி தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எல்லோரும் எழுந்து நின்று வணக்கத்தைச் சொல்ல வேண்டும் என்று ஒரு அரசாணையையும் வழங்கப்பட்டது, அதை நீங்கள் செய்திகளில் பார்த்திருப்பீர்கள்.
ஆகவே, நான் அதிக நேரம் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை, நான் எப்போதும் அதிக நேரம் பேச மாட்டேன். அதைக்கூட எல்லோரும் கிண்டல் செய்வார்கள், இவர் பேசவே மாட்டார், பேசவே மாட்டார் என்று. ஒரு அடுக்கு மொழி உண்டு, Do or Die செய் அல்லது செத்து மடி என்று வரும். ஆனால் அந்த or என்கிற வார்த்தையை நீக்கிவிட்டு Do and Die, செய்து முடித்துவிட்டுத் தான் சாக வேண்டும். அந்த உறுதியை எடுத்துக்கொண்ட காரணத்தால்தான், பேச்சைக் குறைத்து நம்முடைய செயலில், நம்முடைய திறமையைக் காட்டிட வேண்டும் என்ற அந்த உணர்வோடு நான் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.
தமிழ்நாட்டுக்கு போய் இன்று இரவோடு இரவாக நான் இறங்கப் போகிறேன். பத்திரிக்கை நிருபர்கள், ஊடகத்துறையைச் சார்ந்தவர்கள் என்னை மறித்து கேட்பார்கள், என்ன நடந்தது, எவ்வளவு முதலீட்டைப் பெற்றிருக்கிறீர்கள், எப்படி இருந்தது என்று துளைத்துத் துளைத்து கேள்வி கேட்பார்கள். நான் அவர்களிடத்திலே சொல்லப் போவது ஒன்றே ஒன்று தான். நான் துபாய்க்கு, அபுதாபிக்கு சென்றுவிட்டு வந்தேனென்றால், அங்கிருக்கக்கூடிய என்னுடைய சொந்தங்களை, என்னுடைய உறவினர்களை, என்னுடைய நண்பர்களை, என்னுடைய உடன்பிறப்புக்களை பார்க்கத்தான் போயிருந்தேன், பார்த்துவிட்டுத் தான் வந்திருக்கிறேன்.
எனக்கு ஒரு ஏக்கம், உள்ளபடியே ஒரு ஏக்கத்தோடு தான் நிற்கிறேன். என்ன ஏக்கம் என்றால், நான்கு நாள் தானே நிகழ்ச்சி போட்டிருக்கிறோம், இன்னும் ஒரு நான்கு நாட்கள் இருந்துவிட்டு போகக்கூடாதா அப்படியென்ற ஒரு ஏக்கம் எனக்கு வந்திருக்கிறது. ஆனால், நாளைக்கு சென்னைக்குச் சென்றவுடன், உடனடியாக நான் டெல்லிக்கு செல்ல வேண்டியிருக்கிறது. பிரதமரிடத்திலும், உள்துறை அமைச்சரிடத்திலும் நேரம் கேட்கப்பட்டு, நேரமும் தேதியும் குறித்துக் கொடுத்திருக்கிறார்கள்.
இப்போது சொல்கிறேன், இனிமேல் நீங்கள் அழைத்தாலும், அழைக்காவிட்டாலும் அடிக்கடி இந்த துபாய்க்கு வந்து போவேன்" என்று பேசியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
27 mins ago
தமிழகம்
32 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago