சென்னை: திமுக ஆட்சிக்கு வந்த 10 மாதங்களில் குழந்தைகள், பெண்கள், பொதுமக்கள், அதிகாரிகள், காவலர்கள் என்று யாருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலைதான் உள்ளது. மாநிலத்தில் நிலவும் சட்டம் - ஒழுங்கு சீர்குலைவுக்கு காவல் துறையை தன் வசம் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் தான் முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்று சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்று கடந்த 10 மாதங்களாக சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது. சமூக விரோதிகள் மற்றும் ஆளும் கட்சியினரின் கைகளில் தமிழகம் சிக்கி சீரழிந்து வருகிறது. தினமும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், செயின் பறிப்புச் சம்பவங்கள், போக்சோ குற்றங்கள் என்று நாளிதழ்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆளும் கட்சி நிர்வாகிகள் மற்றும் சமூக விரோதிகளால் கூட்டாக பாலியல் வன்கொடுமைக்கு இளம் பெண்கள் ஆளாக்கப்படும் கொடுமை நாள்தோறும் அரங்கேறி வருகிறது.
விருதுநகர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் நடைபெற்ற கூட்டுப் பாலியல் வன்கொடுமையைத் தொடர்ந்து, கடந்த 23-ஆம் தேதி ராமநாதபுரத்தில் கல்லூரி மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக செய்திகள் வந்துள்ளன. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, பாளையம்பட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் மார்ச் மாதம் 23-ஆம் தேதி ராமநாதபுரத்தை அடுத்த மூக்கையூர் கடற்கரைக்குச் சென்றுள்ளார். இவர்களை நோட்டமிட்ட ஐந்து ரவுடிகள், அந்த ஆண் நண்பரை தாக்கிவிட்டு, கூட வந்த மாணவியின் துப்பட்டாவால் அவரை கட்டிப்போட்டு, அவரின் கண் எதிரே மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இந்த அவலத்தை மொபைல் போனில் வீடியோவும் எடுத்துள்ளனர். மேலும், அந்த மாணவியின் மொபைல் போன் மற்றும் கூட வந்த நபரின் தங்க பிரேஸ்லெட்டையும் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவத்தால் மனம் உடைந்த ஆண் நண்பர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பாதிக்கப்பட்ட அந்த மாணவி விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களிடம் (SP-க்களிடம்) புகார் கொடுத்துள்ளார். சந்தேகப்பட்ட நபர்களைப் பிடிக்க உதவி ஆய்வாளர் (SI) சென்றபோது, ரவுடிகள் அந்த உதவி ஆய்வாளரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றதாக செய்திகள் வந்துள்ளன.
மேலும், மார்ச் மாதத்திலேயே திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே சின்னக்கரை கிராமத்தில் உள்ள திமுக கிளைச் செயலாளர், 3 வயது பெண்குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாகவும்; மதுரை, திருப்பரங்குன்றத்தில் 11-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு திமுக கிளைச் செயலாளர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.
இந்த அவலத்தின் ஈரம் காயும் முன், நேற்று (27.3.2022) ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் கஞ்சா வியாபாரிகள் போலீஸ் மீது வெடிகுண்டு வீசி தப்பி இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன. அரக்கோணம், திருமலை ஆச்சாரி தெருவைச் சேர்ந்த ரியாஸ் அகமது என்ற கஞ்சா வியாபாரி, அரக்கோணம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தைச் சேர்ந்த சுமார் நூறு நபர்களை கஞ்சா விற்பனையில் ஈடுபடுத்தி, கஞ்சா வியாபாரம் செய்து வந்த செய்தி அறிந்து, 27.3.2022 அன்று இவர்களைப் பிடிக்கச் சென்ற காவலர்கள் மீது சிறுவர்களைப் பயன்படுத்தி, குண்டு வீசி தப்பிச் சென்றுள்ளனர். இன்றைய நாளிதழ்களிலும், ஊடகங்களிலும் இச்செய்தி வெளிவந்துள்ளது. இந்த குண்டு வீச்சில் ஏழுமலை, சந்தோஷ் என்ற இரண்டு காவலர்களும், ஜெயசூர்யா என்ற நபர் உட்பட மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்த மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் நேற்று, ``சென்னையில் துப்பாக்கியுடன் போதை மாத்திரை விற்பனை செய்து வந்த கும்பல் கைது’’ என்று செய்தியும் வந்துள்ளது. சுமார் 100 நபர்களை பயன்படுத்தி சுதந்திரமாக ஒருவர் அரக்கோணம் முழுவதும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளார். தலைநகர் சென்னையில் துப்பாக்கி உதவியுடன் போதை மாத்திரை விற்பனையில் ஒரு கும்பல் ஈடுபட்டுள்ளது.
இச்சம்பவங்கள் ஓரிரு நாட்களில் ஆரம்பிக்கப்பட்டதாக இருக்க முடியாது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, 10 மாத காலத்தில் போதை மருந்து வியாபாரிகள் மெல்ல மெல்ல வளர்ந்து சுதந்திரமாக வியாபாரம் செய்து வந்துள்ளனர் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. இந்த சமூக விரோதிகளை கட்டுப்படுத்த இயலாதபடி, காவல் துறையினரின் கைகளைக் கட்டியது யார் என்று காவல் துறையை தன்வசம் வைத்துள்ள முதல்வர் இதனை விளக்க வேண்டும்.
தற்போது நடைபெற்று வரும் திமுக ஆட்சியில், சமூக விரோதிகள் காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்துவது சர்வசாதாரணமாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகால ஜெயலலிதாவின் ஆட்சியில் காவலர்கள் சுதந்திரமாக செயல்பட்டனர். அனைத்துக் குற்றங்களுக்கும் FIR பதிவு செய்யப்பட்டன. மாநிலம் முழுவதும் CCTV-க்கள் பொருத்தப்பட்டன. தவறு இழைத்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது எந்தவிதமான அரசியல் தலையீடும் இன்றி சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் ஜெயலலிதாவின் அரசு, தங்கள் வசதிக்காக, முன்னாள் அமைச்சர்கள், எதிர்க்கட்சிப் பிரமுகர்கள் மீது பொய்ப் புகார்கள் சுமத்தி, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளில் காவல் துறையினரை பயன்படுத்தியது கிடையாது. அதனால் தான் இந்தியாவிலேயே சட்டம் - ஒழுங்கை பேணிக் காப்பதில் முதன்மை மாநிலமாக தமிழகம் ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசிடமும், தனியார் நிறுவனங்களிடமும் பல விருதுகளைப் பெற்றுள்ளது. சட்டம் - ஒழுங்கு பேணிக் காக்கப்பட்டு, அமைதியான மாநிலம் என்பதால் தான், தமிழகத்தில் தொழில் துறை முதலீடுகள் குவிந்தன.
இந்த அரசு, ஆட்சிக்கு வந்த 10 மாதங்களில் குழந்தைகள், பெண்கள், பொதுமக்கள், அதிகாரிகள், காவலர்கள் என்று யாருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலைதான் உள்ளது. மாநிலத்தில் நிலவும் சட்டம் - ஒழுங்கு சீர்குலைவுக்கு காவல் துறையை தன் வசம் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின்தான் முழுப் பொறுப்பேற்க வேண்டும். இந்த அரசு இனியாவது சட்டம் - ஒழுங்கில் எந்த சமரசமும் செய்துகொள்ளாமல், சமூக விரோதிகளை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
31 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago