நீட் தேர்வில் 9,19,400-க்கும் பிந்தைய இடத்தைப் பிடித்த மாணவருக்கு  தமிழகத்தில் இடம்: ராமதாஸ் கேள்வி

By செய்திப்பிரிவு

சென்னை: நீட் தேர்வின் அடிப்படையிலான அனைத்திந்திய தரவரிசைப் பட்டியலில் 9,19,400-க்கும் பிந்தைய இடத்தைப் பிடித்த மாணவருக்கு தமிழகத்திலும், 9,17,875 ஆவது இடத்தைப் பிடித்தவருக்கு ராஜஸ்தானிலும், எம்பிபிஎஸ் படிப்பில் சேர இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

மதிப்பெண்களின் அடிப்படையில் அல்லாமல் பணத்தின் அடிப்படையிலேயே இந்த இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், இப்படித் தான் நீட் தேர்வின் மூலம் மருத்துவக் கல்வியின் தரம் உயர்த்தப்படுகிறதா? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "நீட் தேர்வின் அடிப்படையிலான அனைத்திந்திய தரவரிசைப் பட்டியலில் 9,19,400-க்கும் பிந்தைய இடத்தைப் பிடித்த மாணவருக்கு தமிழகத்திலும், 9,17,875 ஆவது இடத்தைப் பிடித்தவருக்கு ராஜஸ்தானிலும், எம்பிபிஎஸ் படிப்பில் சேர இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. மதிப்பெண்களின் அடிப்படையில் அல்லாமல் பணத்தின் அடிப்படையிலேயே இந்த இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், இப்படித் தான் நீட் தேர்வின் மூலம் மருத்துவக் கல்வியின் தரம் உயர்த்தப்படுகிறதா? என்ற வினா எழுகிறது.

இந்தியாவில் 2021-22 ஆம் ஆண்டிற்கான மருத்துவ மாணவர் சேர்க்கை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து விட்ட நிலையில், இதுவரை மருத்துவப் படிப்பில் சேர்ந்தவர்களின் நீட் மதிப்பெண், தரவரிசை உள்ளிட்ட விவரங்கள் தெரியவந்திருக்கின்றன. நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள் பொதுப்பிரிவினருக்கு 720-க்கு 136 ஆகவும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 108 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 500-க்கும் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கே மருத்துவ இடம் கிடைக்கும்.

ஆனால், சென்னை திருப்போரூர் அருகில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 108 மதிப்பெண் எடுத்த மாணவருக்கும், சென்னை கோயம்பேடு பகுதியில் அமைந்துள்ள இன்னொரு நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 109 மதிப்பெண் எடுத்த மாணவருக்கும் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 108 மதிப்பெண் பெற்றவரின் தரவரிசை 9 லட்சத்து 19,400 முதல் 9 லட்சத்து 24,410-க்குள்ளும், 109 மதிப்பெண் பெற்றவரின் தரவரிசை 9 லட்சத்து 14,441 முதல் 9 லட்சத்து 19,399க்குள்ளும் இருக்கும்.

அதேபோல், ராஜஸ்தான் மாநிலத்தில் தரவரிசை 9 லட்சத்து 17,875 (மதிப்பெண் 109) பெற்றவருக்கு ஜெய்ப்பூர் ஜவகர்லால் நேரு மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் கோலார் தேவராஜ் அர்ஸ் மருத்துவக் கல்லூரியில் 8 லட்சத்து 76,357 ஆவது இடம் பிடித்தவரும், மராட்டியத்தின் லோனியில் உள்ள பிரவரா மருத்துவக் கல்லூரியில் 8 லட்சத்து 72,911-ஆவது இடம் பிடித்தவரும் மருத்துவப் படிப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவை ஒரு சில எடுத்துக் காட்டுகள் தான். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர் ஒதுக்கீட்டு இடங்களிலும் 108, 109, 110 மதிப்பெண்களை எடுத்த ஏராளமான மாணவர்கள் தாராளமாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்குக் காரணம் பணம் தான்.

மராட்டியம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இன்னொரு கேலிக் கூத்தும் நடத்தப்பட்டிருக்கிறது. மராட்டியத்தில் தனியார் கல்லூரிகளுக்கான வெளிநாடு வாழ் இந்தியர் ஒதுக்கீட்டில் 200-க்கும் கூடுதலான இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தன. இந்தியாவில் வாழும் மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள எவரிடமிருந்தாவது சான்றிதழ் பெற்று வந்தால், அவர்கள் வெளிநாடு வாழ் இந்தியர்களாக கருதப்பட்டு அவர்களுக்கு இடம் ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது. அதன்படி ஒரே நாளில் 152 மாணவர்கள் சான்றிதழ் பெற்றுத் தந்த நிலையில், அவர்களை வெளிநாடு வாழ் இந்தியர்களாக அறிவித்து அவர்களுக்கு அதற்கான ஒதுக்கீட்டு இடங்களை ஒதுக்க இந்திய மருத்துவக் குழு அனுமதிக்கிறது.

நீட் தேர்வு மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. அதில் 108, 109 மதிப்பெண் என்பது வெறும் 15 சதவீதமாகும். 12-ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்பட்ட போது, மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கே 60 சதவீதத்துக்கும் கூடுதலான மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். 95 சதவீதத்துக்கும் கூடுதலான மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு மட்டும் தான் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கும். அப்படிப்பட்ட முறை தகுதியை ஊக்குவிக்கவில்லை என்று கூறித் தான் நீட் தேர்வை மத்திய அரசு அறிமுகம் செய்தது. ஆனால், அதில் 15 சதவீத மதிப்பெண் பெற்றவர்களுக்குக் கூட, பணம் இருந்தால், இடம் கிடைக்கும் என்றால் இந்த முறையில் தகுதி எவ்வாறு ஊக்குவிக்கப்படும்?

இந்தியாவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 76,928 இடங்கள் உட்பட ஒட்டுமொத்தமாக ஒரு லட்சத்து 18,316 இடங்கள் உள்ளன. தகுதி அடிப்படையில் பார்த்தால் தரவரிசைப் பட்டியலில் ஒன்றரை லட்சத்திற்கும் குறைவான இடங்களைப் பிடித்தவர்களுக்கு மட்டும் தான் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்க வேண்டும். ஆனால், 60 ஆயிரமாவது தரவரிசை பெற்றவர்களுக்கு கிடைக்காத மருத்துவ இடம் 9 லட்சத்திற்கும் பிந்தைய தரவரிசை பெற்றவர்களுக்கு கிடைப்பதற்குக் காரணம் பணம், பணம், பணம் மட்டும் தான்.

தனியார் மருத்துவ நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் படிப்புக்கான ஆண்டுக் கட்டணமாக ரூ.25 லட்சம் வரையிலும், நன்கொடையாக ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையிலும் வசூலிக்கப் படுகிறது. வெளிநாடு வாழ் இந்தியர் ஒதுக்கீட்டு இடங்களுக்கு தமிழகத்தில் ரூ.23.50 லட்சமும், பிற மாநிலங்களில் ரூ.40 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரையிலும் ஆண்டுக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களால் இவ்வளவு கட்டணத்தை செலுத்துவது குறித்து நினைத்துக் கூட பார்க்க முடியாது. அதனால், அவர்கள் 400 முதல் 500 மதிப்பெண்கள் வரை பெற்றிருந்தாலும் கூட, அவர்களிடம் பணம் இல்லாததால், மருத்துவப் படிப்பில் சேர முடிவதில்லை.

அவர்களுக்கு கிடைக்க வேண்டிய இடங்களைத் தான் 108, 109 மதிப்பெண்களைப் பெற்று கோடிக் கணக்கில் பணத்தை குவித்து வைத்திருப்பவர்கள் பறித்துக் கொள்கின்றனர். இந்த சமூக அநீதியை மத்திய அரசும், இந்திய மருத்துவக் கவுன்சிலும் ஆதரிப்பது தான் கொடுமையிலும் கொடுமையாகும். நீட் அடிப்படையிலான மருத்துவ மாணவர் சேர்க்கையில், ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு மாநிலத்திலும் இத்தகைய கொடுமை தான் நீடிக்கிறது. இந்த அநீதியை அகற்ற வேண்டியது அவசரக் கடமையாகும்.

நீட் தேர்வை அறிமுகப்படுத்துவதற்காக மத்திய அரசு முன்வைத்த காரணங்கள், நீட் தேர்வு வந்தால் மருத்துவக் கல்வியின் தரம் மேம்படும்; மருத்துவக் கல்வி வணிகமயமாவது தடுக்கப்படும் என்பன தான். ஆனால், அந்த இரு நோக்கங்களுமே நிறைவேறவில்லை என்பதையும், ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் மருத்துவக் கனவுகளை நீட் பறித்திருக்கிறது என்பதையும் மேற்கண்ட புள்ளிவிவரங்கள் நிரூபிக்கின்றன. எனவே, நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் கடந்த 5 ஆண்டுகளில் ஏற்பட்ட தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு செய்ய வேண்டும், அதன் அடிப்படையில் நீட்டை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

38 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்