கரோனாவால் உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம், வேலையை தமிழக அரசு வழங்கவில்லை: அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

கரோனா தொற்றால் உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம், வேலைவாய்ப்பை தமிழக அரசு வழங்கவில்லை என்று அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் மருத்துவர் பெருமாள் பிள்ளை தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் கரோனா தொற்றுப் பரவல் தொடங்கியபோது, நாடு முழுவதும் பதற்றம் இருந்தது. இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளே தொற்றை சமாளிக்க முடியாமல் திணறின.

அப்போது தமிழக சட்டப்பேரவையில் கரோனா ஆபத்து பற்றி எதிர்கட்சி துணை தலைவர் கேள்வி எழுப்பியபோது, ‘நாட்டிலேயே சிறந்த மருத்துவர்கள்தான் நம் அரசு மருத்துவர்கள். எனவே அச்சம் கொள்ள வேண்டியது இல்லை’ என்று அப்போதைய முதல்வர் பழனிசாமி பதில் கூறியதை நினைத்து பார்க்க வேண்டும்.

ரூ.2 லட்சம் நிவாரணம்

கரோனாவால் மருத்துவர்கள் உயிரிழந்த நிலையிலும், தங்களுக்கும் தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு என தெரிந்தும், ஒவ்வொரு மருத்துவரும் அர்ப்பணிப்போடு களத்தில் நின்று பணியாற்றினோம். அப்போதைய அரசு, ‘மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியமாக ஒரு மாத ஊதியம் வழங்கப்படும். தொற்று ஏற்படும் மருத்துவர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் தரப்படும்’ என அறிவித்தது. ஆனால் கடைசி வரை தரவில்லை.

புதிய ஆட்சி அமைந்தபோது, கரோனா 2-வது அலை மின்னல் வேகத்தில் அதிகரித்த வண்ணம் இருந்தது. அப்போது முதல் தமிழகத்தின் பலமாக 18 ஆயிரம் அரசு மருத்துவர்கள்தான் அரசுக்கும், மக்களுக்கும் உறுதுணையாக இருந்து பணியாற்றி வருகிறோம்.

ஏற்கெனவே மருத்துவர்களுக்கு முதல்வர் உறுதியளித்தவாறு, புதிய ஆட்சி அமைந்ததும் ஊதியக் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற ஏக்கத்துடன் காத்திருந்தோம். ஆனாலும், புதிய ஆட்சி அமைந்து 11 மாதங்களுக்கு பிறகும் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

அரசு வேலை வழங்கவில்லை

கரோனாவால் உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு இன்னமும் மாநில அரசிடம் இருந்து ஒரு பைசா கூட நிவாரணம் தரப்படவில்லை. தொற்றால் உயிரிழந்த மருத்துவர் விவேகானந்தனின் மனைவி கண்ணீர் விட்டு அழுத பிறகும், அவருக்கு அரசு வேலை வழங்கப்படவில்லை.

நாங்கள் ஒன்றும் புதிதாக ஊதிய உயர்வு எதுவும் கேட்கவில்லை. ஏற்கெனவே முதல்வராக கருணாநிதி இருந்தபோது வெளியிட்ட அரசாணை 354-ன் படி ஊதியத்தை வழங்குமாறு கேட்கிறோம். மற்ற மாநிலங்களில் எம்பிபிஎஸ் மருத்துவர்களுக்கு தரப்படும் ஊதியத்தைவிட ரூ.40 ஆயிரம் குறைவாக, இங்குள்ள எம்பிபிஎஸ், சிறப்பு மற்றும் உயர்சிறப்பு மருத்துவர்களுக்கு மாத ஊதியம் வழங்கப்படுகிறது.

எனவே, கரோனா கட்டுப்படுத்தப்பட்டு அனைவரும் நிம்மதியாக இருக்கும் இந்த நேரத்தில், தொற்றால் உயிரிழந்த அரசு மருத்துவர்களையும், அவர்களின் குடும்பத்தினரின் கண்ணீரையும் அரசு ஒருகணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையை நிறைவேற்றி, உற்சாகமாக பணியாற்றிட உதவவேண்டும். இவ்வாறு அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE