திமுக அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் வெற்றி - திருமங்கலம் நகராட்சி தலைவர் தேர்தலில் வாக்குச்சீட்டுகள் கிழிப்பு

By செய்திப்பிரிவு

திருமங்கலம் நகராட்சி தலைவர், துணைத்தலைவர் தேர்தலில் திமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். வாக்கு எண்ணிக்கையின்போது திடீரென வாக்குச்சீட்டுகள் கிழிக்கப்பட்டதால் கட்சியினரிடையே மோதல், போலீஸ் தடியடி என பரபரப்பான சம்பவங்கள் நடந்தன.

திருமங்கலம் நகராட்சி தலைவர் தேர்தல் கடந்த மார்ச் மாதம் 4-ம் தேதி நடந்தது. அப்போது போதிய கவுன்சிலர்கள் பங்கேற்காததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. மொத்தம் உள்ள 27 வார்டுகளில் திமுக 18, அதிமுக 6, தேமுதிக 2, காங்கிரஸ் 1 என வெற்றி பெற்றனர். தேமுதிக கவுன்சிலர் ஒருவர் திமுகவில் இணைந்ததால் திமுக கூட்டணியின் பலம் 20 ஆனது. திமுக தலைமை நகராட்சி தலைவர் பதவிக்கு 6-வது வார்டு கவுன்சிலர் ரம்யா முத்துகுமார், துணைத்தலைவர் பதவிக்கு 21-வது வார்டு கவுன்சிலர் முன்னாள் எம்எல்ஏ அதியமான் மகன் ஆதவன் ஆகியோரின் பெயர்களை அறிவித்தது.

மார்ச் மாதம் நடந்த தேர்தலின்போது திமுக நகர் பொறுப்பாளராக இருந்த சி.முருகன் தனது மருமகள் சர்மிளாவை நகர்மன்ற தலைவராக்க முயற்சி எடுத்தார். தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நகர் பொறுப்பாளர் பதவியிலிருந்தும் முருகன் நீக்கப்பட்டார்.

இந்த சூழலில் நேற்று நகராட்சி தலைவர், துணைத்தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. தலைவர் வேட்பாளர்களாக திமுக சார்பில் ரம்யா, அதிமுக சார்பில் முன்னாள் நகராட்சி தலைவர் உமாவிஜயன் மனு தாக்கல் செய்தனர். தேர்தல் நடந்த அறைக்குள் கவுன்சிலர்களைத் தவிர யாரும் அனுமதிக்கப்படவில்லை. 27 பேரும் வாக்களித்தனர். வாக்குப்பதிவு முடிந்து வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. அப்போது அதிமுகவுக்கு கூடுதல் வாக்குகள் கிடைத்திருக்கலாம் என தகவல் பரவியது. இதனால் நகராட்சி அலுவலகத்துக்கு வெளியே குவிந்திருந்த கட்சியினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தாக்கிக்கொள்ளும் சூழல் உருவானது. இதை தவிர்க்க போலீஸார் லேசான தடியடி நடத்தினர். எனினும் நகராட்சி அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து பலரை மிரட்டினர்.

இது குறித்து கவுன்சிலர் ஒருவர் கூறியது: திமுக முன்னாள் நகர் பொறுப்பாளர் முருகன் மருமகளுக்கு தலைவர் பதவி மறுக்கப்பட்டதால் திமுக கவுன்சிலர்கள் சிலர் வாக்குகளை மாற்றி அளித்திருக்கலாம் என சந்தேகம் எதிர்தரப்பினருக்கு எழுந்தது. இதனால் கட்சி மாறி வாக்குகள் விழுந்து அதிமுக வெற்றிபெற்றுவிடுமோ என்ற பதட்டத்தில் திமுகவினர் இருந்தனர்.

இதனால் வாக்கு எண்ணிக்கை நடந்துகொண்டிருந்தபோதே ரம்யாவை ஆதரிக்கும் திமுக கவுன்சிலர் ஒருவர் வாக்குச்சீட்டுகளை தேர்தல் அதிகாரியிடமிருந்து பறித்து கிழித்தெறிந்தார். ரம்யாவின் உறவினரான மேலும் ஒரு கவுன்சிலர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 6 வாக்குச்சீட்டுகள் கிழிக்கப்பட்டது. எனினும் 21 வாக்குகள் எண்ணப்பட்டதில் திமுக 15, அதிமுக 6 வாக்குகளை பெற்றதாகவும், திமுக வேட்பாளர் ரம்யா வெற்றி பெற்றதாகவும் தேர்தல் அதிகாரி அனிதா அறிவித்தார். இதை ஏற்க மறுத்து அதிமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கிழிக்கப்பட்ட 6 வாக்குகளும் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன.

மாலையில் நடந்த துணைத்தலைவர் தேர்தலில் அதிமுக கவுன்சிலர்கள் பங்கேற்கவில்லை. திமுக சார்பில் ஆதவன் மட்டும் மனு தாக்கல் செய்ததால், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். தலைவர், துணைத்தலைவர் இருவரும் நேற்று மாலை பதவியேற்றுக் கொண்டனர். தெற்கு மாவட்ட திமுக செயலாளர் எம்.மணிமாறன், முன்னாள் எம்எல்ஏ. லதா அதியமான், முன்னாள் நகர் பொறுப்பாளர் முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தேர்தல் அதிகாரியின் நடவடிக்கைகளை கண்டித்து அவர் மீது மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகரிடம் அதிமுக வேட்பாளர் உமா புகார் அளித்துள்ளார்.

அதிமுகவுக்கு வாக்களித்த திமுக கவுன்சிலர்கள்

இது குறித்து கட்சியினர் கூறுகையில் ‘6 வாக்குச்சீட்டுகளை கிழித்தது திமுக கவுன்சிலர்தான். வெற்றி நம்பிக்கை இல்லாததால் இப்படி செய்துள்ளனர். எனிலும் திமுக வென்றுவிட்டது. கிழிக்கப்பட்ட வாக்குகளில் அதிமுவுக்கு 5, 4, 2 என பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் திமுக கவுன்சிலர்களின் வாக்குகள் அதிமுகவுக்கு பதிவானது உறுதியாகியுள்ளது. இதன் பின்னணி குறித்து உளவுப்பிரிவு போலீஸாரும் விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE