நம்மைக் காக்கும் 48 | முதலமைச்சர் காப்பீட்டு அடையாள அட்டை கேட்பதால் திட்டத்தின் இலக்கை எட்டுவதில் பின்னடைவு

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை: ‘நம்மைக் காக்கும் 48’ திட்டத்தில் சிகிச்சைப் பெற முதலமைச்சர் காப்பீட்டு திட்ட அடையாள அட்டை கேட்பதால், அனைவராலும் இந்த திட்டத்தில் சிகிச்சைப்பெற முடியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அரசு மருத்துவமனைகளுக்கு இந்த திட்டத்தால் கிடைக்கும் வருவாயும் குறைந்துள்ளது.

சாலை பராமரிப்பில் ஏற்படும் குறைபாடுகளை களைவதற்கும், சாலை விபத்துகளை அறிவியல் பூர்வமாக தடுக்கவும் மாநில நெடுஞ்சாலைத்துறையும், காவல்துறையும், உள்ளாட்சி அமைப்புகளுடன் கைகோர்த்து நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அவை ஒரளவு கைகொடுத்தாலும், விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளை முழுமையாக தடுக்க முடியவில்லை. இதனால் சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளை முழுமையாக தடுக்க முதல் 48 மணி நேர அவசர சிகிச்சை செலவுகளை அரசே ஏற்றுக் கொள்ளும் வகையிலும் ‘நம்மைக்F காக்கும் 48’ என்ற மருத்துவத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தினை கடந்த டிசம்பர் மாதம் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்தத் திட்டத்தின் மூலம், விபத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர் முதல் 48 மணி நேரத்திற்கு அரசு மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற ஒரு லட்சம் ரூபாய் வரை பெற்றுக் கொள்ளலாம். விபத்து நடந்தவுடன் எவ்வித தாமதமும் இல்லாமல் விபத்தில் சிக்கியவர்களை சரியான நேரத்தில் மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்று சிகிச்சை வழங்கி அவர்கள் உயிர்களை காப்பாற்றுவதே இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கம். இந்த திட்டத்தால் தமிழகத்தில் விபத்துகளில் ஏற்படும் மரணங்கள் எண்ணிக்கை சமீப காலமாக குறையத் தொடங்கி இருக்கிறது. இதனால் இந்த திட்டம் தமிழகத்தில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது இத்திட்டத்தில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் நோயாளிகள் கண்டிப்பாக முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் அடையாள அட்டையை வழங்க வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் விபத்துக்குள்ளாகும் எல்லோராலும் சிகிச்சை பெற முடியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கூறும்பொழுது, " ‘நம்மைக் காக்கும் 48’ திட்டம் தொடங்கும் போது முதலமைச்சர் காப்பீடு திட்டம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, விபத்துக்கான சிகிச்சை செலவை முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் இருந்து முதல் 48 மணி நேரத்திற்கு ரூ.1 லட்சம் வரை பெற்றுக் கொள்ளலாம் என்றதாலே இந்த திட்டம் வரவேற்பை பெற்றது. திட்டத்தில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் முகவரியை பெற்று அவர் சிகிச்சைப் பெறும் புகைப்படம் எடுத்து சிகிச்சை வழங்கும் மருத்துவர் கையெழுத்துப்போட்டாலே போதும். அவர்களுக்கு 'நம்மைக் காக்கும் 48' திட்டத்தில் உடனடியாக ஒப்புதல் வழங்கப்பட்டது.

அதனால், தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமில்லாது வெளிமாநிலத்தவர்கள் கூட இந்த ‘நம்மைக் காக்கும் 48’ திட்டத்தில் பயன்பெறும் நிலை இருந்தது. தனியார் மருத்துவமனைகளில் முதல் 48 மணி நேரம் சிகிச்சைப்பெறும் நோயாளிகளுக்கும் இதுதான் விதிமுறையாக இருந்தது.

தற்போது முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் போல், ‘நம்மைக் காக்கும் 48’ திட்டத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கும் முதலமைச்சர் காப்பீடு திட்ட அடையாள அட்டையை கேட்கின்றனர். எல்லோராலும் அரசு மருத்துவமனைகளில் அடையாள அட்டையை உடனடியாக வழங்க முடியவில்லை. அதனால், இந்த திட்டத்தில் முன்புபோல் அனைவராலும் சிகிச்சைப்பெற்று பலனடைய முடியவில்லை. தனியார் மருத்துவமனையில் இந்த நடைமுறையால் பாதிப்பில்லை. அவர்கள் நோயாளிகள் பணம் கொடுத்தால் சிகிச்சை வழங்குவார்கள். இல்லையென்றால் அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்துவிடுவார்கள்.

ஆனால், அரசு மருத்துவமனைகளில் ‘நம்மைக் காக்கும் 48’ திட்டம் மூலம், நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டால், முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் போல் குறிப்பிட்ட தொகை மருத்துவமனைக்கு வருவாயாக கிடைத்து வந்தது. இந்த நிதியை அரசு மருத்துவமனை மேம்பாட்டுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். தற்போது முதலமைச்சர் காப்பீட்டுத்திட்ட அடையாள அட்டை கேட்பதால் நம்மைக் காக்கும் 48 திட்டத்தில் சிகிச்சை வழங்க முடியவில்லை.

ஆனாலும் எந்த தாமதம் செய்யாமல் வழக்கமாக ஒருவர் அடிப்பட்டு மருத்துவமனைக்கு வந்தால் என்ன சிகிச்சை வழங்கப்படுமோ அந்த சிகிச்சையை தடைப்படாமல் வழங்கி வருகிறோம். ஆனால், அரசு மருத்துவமனைகளுக்கு கிடைக்கும் வருவாய் பெருமளவு குறைந்துவிட்டது. உதாரணமாக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு நம்மைக் காக்கும் 48 திட்டம் ஆரம்பித்து இதுவரை ரூ.60 லட்சம் வரை வருவாய் கிடைத்தது. தற்போது அடையாள அட்டை கெடுபிடியால் இந்த வருவாய் பெருமளவு குறைந்து அரசு மருத்துவமனைகள் பாதிக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE