வலுக்கும் இந்து அமைப்புகள் போராட்டம் | காரைக்கால் மாவட்ட ஆட்சியராக கூடுதல் பொறுப்பேற்றார் இ.வல்லவன்

By வீ.தமிழன்பன்

புதுச்சேரி: இந்து அமைப்புகள் போராட்டம் வலுத்து வரும் சூழலில், காரைக்கால் மாவட்ட ஆட்சியராக, புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் இ.வல்லவன் இன்று (மார்ச் 25) கூடுதல் பொறுப்பேற்றுக் கொண்டார்.

காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா விடுப்பில் சென்றுள்ளார். இதனிடையே, காரைக்கால் பொய்யாத மூர்த்தி விநாயகர் கோயில் முன்பு கட்டப்பட்டுள்ள முகப்பு மண்டபம் உரிய அனுமதி பெறாமல் பொது இடத்தில் கட்டப்பட்டுள்ளாதால், அதனை 28-ம் தேதிக்குள் இடித்து அகற்ற வேண்டும் என அது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 18 ம் தேதி தீர்ப்பளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காரைக்கால் மாவட்டத்தில் உள்ள இந்து அமைப்புகள் சார்பில் கடையடைப்பு உள்ளிட்ட பலகட்ட போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு அரசியல் கட்சிகளும் முகப்பு மண்டபத்தை இடிக்கக் கூடாது என வலியுறுத்தி வருகின்றன. பொய்யாத மூர்த்தி விநாயகர் கோயில் முன்பு ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பனியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து பதற்றமான சூழல் நீடிப்பதால், மாவட்ட ஆட்சியர் விடுப்பை ரத்து செய்துவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.

இந்தச் சூழலில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா பணிக்கு திரும்பும் வரை, புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் இ.வல்லவனை காரைக்கால் மாவட்ட ஆட்சியராக கூடுதல் பொறுப்பேற்க புதுச்சேரி அரசு ஆணை பிறப்பித்தது. மேலும், உடனடியாக காரைக்கால் சென்று பொறுப்பேற்க வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று காரைக்கால் ஆட்சியர் அலுவலகத்தில் இ.வல்லவன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE