மே 5-ல் உதகை மலர் கண்காட்சி தொடக்கம்: தோட்டக்கலைத் துறை ஆணையர் அறிவிப்பு

By ஆர்.டி.சிவசங்கர்

உதகை: நீலகிரி மாவட்டம் உதகையில் 124-வது மலர் கண்காட்சி மே மாதம் 20-ம் தேதி தொடங்கி 5 நாட்களுக்கு நடைபெறவுள்ளதாக தோட்டக்கலைத் துறை ஆணையர் பிருந்தா தேவி அறிவித்துள்ளார்.

சர்வதேச சுற்றுலா நகரமான நீலகிரி மாவட்டத்துக்கு ஆண்டுதோறும் சுமார் 30 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவர கோடை காலத்தில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பில் கோடை விழா நடத்தப்படும்.

இதில் முக்கியமாக ரோஜா கண்காட்சி, மலர்க் கண்காட்சி மற்றும் பழங்கள் கண்காட்சி ஆகியவை அடங்கும். உதகை மலர் கண்காட்சி உலக பிரசித்திப் பெற்றது என்பதால் மலர் கண்காட்சியை காண உள்நாடு மற்றும் வெளி நாடுகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருவர்.

மலர் கண்காட்சி நடக்கும் நாட்களில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தருவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு ஆண்டுகளாக குரோனா காரணமாக விழாக்கள் ரத்து செய்யப்பட்டன. இந்தாண்டு 124-வது மலர் கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான ஆலோசனைக் கூட்டம் தோட்டக்கலைத் துறை ஆணையர் பிருந்தா தேவி தலைமையில் உதகையில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அம்ரித், தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் (பொ) சிபிலா மேரி, நகராட்சி ஆணையர் காந்திராஜ் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தோட்டக்கலைத் துறை ஆணையர் பிருந்தா தேவி, "இந்தாண்டு கோடை விழாவை முன்னிட்டு உதகை தாவரவியல் பூங்காவில் மே மாதம் 20-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை 5 நாட்கள் மலர் கண்காட்சியும், மே 28 மற்றும் 29-ம் தேதிகளில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழங்கள் கண்காட்சியும், மே 14 மற்றும் 15-ம் தேதிகளில் உதகை ரோஜா பூங்காவில் 17-வது ரோஜா கண்காட்சியும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதே போல, கோத்திகிரி நேரு பூங்காவில் மே மாதம் 7 மற்றும் 8-ம் தேதிகளில் 11-வது காய்கறி கண்காட்சியும், மே மாதம் 13,14 மற்றும் 15-ம் தேதிகளில் கூடலூரில் 9-வது வாசனை திரவிய கண்காட்சியும் நடக்கிறது.

கோடை விழா சிறப்பாக நடக்க அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. காட்சிகளில் இடம்பெறும் சிறப்பு அலங்காரங்கள் குறித்து ஆலோசித்து, முடிவு செய்யப்படும்" என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE