கோதாவரி இணைப்பு உரிமையையும் எதிர்ப்பதா? - கர்நாடக அரசின் தீர்மானத்துக்கு ராமதாஸ் கண்டனம்

By செய்திப்பிரிவு

சென்னை: காவிரி மட்டுமின்றி கோதாவரி இணைப்பு உரிமையையும் எதிர்ப்பதா?, கர்நாடக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக அரசைக் கண்டித்து கர்நாடக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம் தொடர்பான அனைத்து அம்சங்களும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லாத பட்சத்தில், அத்திட்டத்தை செயல்படுத்த கர்நாடகம் அனுமதிக்காது என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

கர்நாடக சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக தமிழக அரசுக்கு கடுமையான எதிர்ப்பும், கண்டனமும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ‘‘காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு உரிய அனுமதிகளை வழங்கும்படி மத்திய அரசுக்கு கடுமையான அழுத்தங்களைத் தரப்படும். கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையில் இடம் பெற்றுள்ள அனைத்து அம்சங்களும் கர்நாடகத்தால் ஏற்றுக்கொள்ளும் வகையில் மாற்றப்படும் வரையிலும், கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டத்தில் கர்நாடகத்திற்கு கிடைக்கும் நீரின் அளவு தீர்மானிக்கப்படும் வரையிலும் கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டத்திற்கு கர்நாடகம் ஒப்புதல் அளிக்காது’’ என்று கர்நாடக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கர்நாடகத்தில் ஏற்கனவே 115 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்கும் அளவுக்கு காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே நான்கு அணைகள் கட்டப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமின்றி, காவிரி படுகையில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களை இணைத்து 40 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்கும் அளவுக்கு பாசனக் கட்டமைப்பை கர்நாடகம் உருவாக்கி வைத்திருக்கிறது. இவற்றுக்கு மேலும் காவிரி ஆற்றின் நீரை தேக்கி வைக்க மேகேதாது அணையை கட்ட வேண்டிய தேவை இல்லை. அதுமட்டுமின்றி, மேகேதாது அணை கட்டப்பட்டால் காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்காது. அதனால், மேகேதாது அணைக்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவிப்பதும், சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவதும் நியாயமானதே.

ஆனால், தமிழக அரசு அதன் சட்டப்பூர்வ உரிமை நிலைநாட்டிக் கொள்வதற்காக போராடுவதையும், தீர்மானம் நிறைவேற்றுவதையும் கர்நாடகம் கடுமையாக விமர்சிப்பதும், பதிலுக்கு தீர்மானம் நிறைவேற்றுவதும் ஏட்டிக்குப் போட்டியாகவும், லாவணி அரசியலாகவும் தான்
பார்க்கப்படும். காவிரி பிரச்சினையில் அறமும், உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புகளும் தமிழகத்தின் பக்கம் இருக்கும் நிலையில், காவிரிப் பிரச்சினையை ஊதிப் பெரிதாக்கி, அடுத்த சில மாதங்களில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியல் லாபம் பார்க்க வேண்டும் என்பதற்காக தமிழகத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதும், தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமலேயே மேகதாதுவில் அணை கட்டுவோம் என்பதும் அரசியலமைப்புச் சட்டத்தின்படியான கூட்டாட்சித் தத்துவத்திற்கு எந்த வகையிலும் வலு சேர்க்காது; ஜனநாயகத்தையும் வலுவிழக்கச் செய்து விடும். இந்த ஆபத்தான, அரசியல் விளையாட்டை கர்நாடகம் கைவிட வேண்டும்.

கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம் என்பது மகாநதி, கோதாவரி ஆகிய ஆறுகளில் இருந்து பயன்படுத்தப்படாமல் வீணாக கடலில் கலக்கும் சுமார் 1,800 டிஎம்சி, நீரை தமிழகம் போன்ற பற்றாக்குறை மாநிலங்கள் பயன்படுத்திக் கொள்வதற்கான திட்டமாகும். இதனால் கர்நாடகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது; மாறாக, கர்நாடகத்திற்கும் கூடுதல் தண்ணீர் கிடைக்கும். இந்த உண்மைகள் அனைத்தையும் மறைத்து விட்டு, கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த விட மாட்டோம் என்பதும், அத்திட்டத்தின் கடைசிப் பகுதியான காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தை தடுத்து நிறுத்துவோம் என்பதும் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாதவை. கோதாவரி-காவிரி ஆறுகள் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க வேண்டுமானால், மேகதாது அணைக்கு தமிழகம் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது தான் தமிழகத்திற்கு கர்நாடகம் சொல்ல வரும் செய்தி. இது அப்பட்டமான பிளாக்மெயில் ஆகும்.

மேகதாது விவகாரத்தில் மிகவும் கவலையளிக்கும் அம்சம் என்னவென்றால், இந்த விஷயத்தில் மத்திய அரசு கடைபிடித்து வரும் மவுனம் தான். காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்க முடியாது. இந்த உண்மையை, மத்திய நீர்வளத்துறை அமைச்சராக இருந்த உமாபாரதி கூறியதைப் போன்று இப்போது பதவியில் இருக்கும் கஜேந்திர ஷெகாவத் கூறி விட்டால், மேகேதாது சிக்கல் முடிவுக்கு வந்து விடும்.

ஆனால், அதை வெளிப்படையாக கூற மறுக்கும் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத், கர்நாடகத்திற்கு செல்லும் போதெல்லாம் அம்மாநிலத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பது தான் சிக்கலை தீவிரமாக்குகிறது. மேகதாது விவகாரத்தில்
மத்திய அரசு வெறும் பார்வையாளராக இருக்கக் கூடாது. தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணை கட்ட முடியாது என்ற உண்மையை மத்திய அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, மேகதாது சர்ச்சை தொடர்பாக

தமிழகத்தை விமர்சித்து தீர்மானம் நிறைவேற்றியதற்காக கர்நாடகத்தை மத்திய அரசு கடுமையாக கண்டிக்க வேண்டும்." என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

15 mins ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்