கோவை: அவுட்காய் எனப்படும் நாட்டு வெடிகுண்டைக் கடித்ததால் வாய் சிதைந்து, 3 வாரங்களுக்கு மேல் உணவு உட்கொள்ள முடியாமல் இளம் பெண் யானை உயிரிழந்த கோவை சம்பவம் வன உயிரின ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கோவை மாவட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்துக்குட்பட்ட முள்ளாங்காடு தாணிக்கண்டி வனப்பகுதியில் உடல் நலக்குறை காரணமாக பெண் யானை ஒன்று அவதிப்பட்டு வந்ததை, ரோந்து சென்ற வனத்துறை பணியாளர்கள் கண்டறிந்தனர். அதுகுறித்து மாவட்ட வன அலுவலர் மற்றும் கால்நடை மருத்துவ அலுவலருக்கு தகவல் அளிக்கப்பட்டது. கால்நடை மருத்துவர்கள், வனப்பணியாளர்கள் நேற்று (மார்ச் 23) யானைக்கு மயக்க ஊசி செலுத்தி, யானையைப் பிடித்து சிகிச்சை அளித்தனர்.
யானை உயிரிழப்பு: அப்போது, அந்த யானையின் வாய் பகுதி கடுமையாக பாதிப்பட்டிருந்தது. அதன் நாக்கு 90 சதவீதம் அறுபட்ட நிலையில் இருந்தது. இதனால் யானைக்கு வலி நிவாரணி மற்றும் நோய் எதிர்ப்பு திறன் மருந்துகள் கொடுத்து தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (வியாழக்கிழமை) அந்த பெண் யானை பரிதாபமாக உயிரிழந்தது. இதையடுத்து அந்த யானைக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அதன் உடல் அங்கேயே புதைக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக வனக்கால்நடை மருத்துவர், அலுவலர் சுகுமார் கூறும்போது, “உயிரிழந்த யானைக்கு 10 வயது இருக்கும். யானையின் கீழ்தாடையின் முன்பகுதி உடைந்திருந்தது. நாக்கு பகுதி சிதைந்து போயிருந்தது. வயிற்று பகுதி முதல் ஆசனவாய் வரை எந்த உணவுப் பொருளும் அதன் உடலில் இல்லை. கடந்த மூன்று வாரங்களாக யானை எதுவும் சாப்பிடாமல் இருந்துள்ளது. தண்ணீரும் அருந்தவில்லை. இதனால், உடல்மெலிந்து யானை உயிரிழந்துள்ளது. அவுட்காய் போன்ற வெடிபொருளைக் கடித்ததன் காரணமாகவே கீழ்தாடையின் முன்பகுதி உடைந்துள்ளது” என்றார்.
மாவட்ட வன அலுவலர் டி.கே.அசோக்குமார் கூறும்போது, "அவுட்காய் கடித்து யானை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வன உயிரின வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. எந்தப் பகுதியில் இருந்து அந்த யானை வந்தது. அந்த யானையை இதற்கு முன்பு எங்கே வனப்பணியாளர்கள், பொதுமக்கள் பார்த்தார்கள் என்பது குறித்தும் தகவல் சேகரித்து வருகிறோம்”என்றார்.
கடும் நடவடிக்கை தேவை: வன உயிரின ஆர்வலர்கள் கூறும்போது, “காட்டுப் பன்றிகளை வேட்டையாட வைக்கப்படும் அவுட்காய் எனப்படும் நாட்டு வெடிகுண்டு வெடித்து வன உயிரினங்கள் உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது. இதில் இளம் வயது பெண் யானை ஒன்று சிக்கி உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது. அவுட்காய் தயாரித்து, அதை வேட்டையாட பயன்படுத்துபவர்களை வனத்துறையினர், காவல்துறையினர் இணைந்து கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
17 mins ago
தமிழகம்
27 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago