'தமிழகத்திலும் நிர்பயா சம்பவங்கள்' - விருதுநகர், வேலூர் சம்பவங்களை முன்வைத்து அரசு மீது அண்ணாமலை தாக்கு

By இ.மணிகண்டன்

விருதுநகர்: நிர்பயா சம்பவம் போல் தமிழகத்தில் நடக்காது என்று நாம் கூறிக்கொண்டிருந்த நிலை மாறி இன்று தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். விருதுநகரில் 22 வயது இளம்பெண் 8 மாதங்களாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் நீதி கேட்டு தமிழக பாஜக மகிளரணி சார்பில் இன்று விருதுநகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார்.

அப்போது விருதுநகர் பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்துப் பேசிய அண்ணாமலை, "நிர்பயா சம்பவம் நடந்தபோது, தமிழகத்தில் இதுபோன்ற சம்பவம் நடக்க வாய்ப்பே இல்லை என்று நாம் கூறிக் கொண்டிருந்தோம். ஆனால், இங்கு வேலூரில் அதுபோன்றதொரு சம்பவம் நடந்துள்ளது. விருதுநகர் சம்பவத்தில் சிபிசிஐடி விசாரணை நடக்கும் என சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்த வேளையில்தான் தொலைக்காட்சிகளில் வேலூர் சம்பவம் செய்தி வெளியாகிறது.

வேலூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி-க்கு அடையாளத்தை மறைத்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ரூ.40,000-ஐ பங்குபோட சாலையில் சண்டையிட்டபோது போலீஸார் விசாரித்துள்ளனர். அப்போதுதான் அந்தக் கயவர்களே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததை சொல்லியுள்ளனர். அதன் பின்னரே பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணையும் நடந்துள்ளது.

விருதுநகர், வேலூர் சம்பவங்களில் சிறாரும் ஈடுபட்டுள்ளனர். மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு இப்படித்தான் இருக்கிறது. விருதுநகர் சம்பவத்தில் கைதானவர்களில் திமுகவினரும் அடக்கம். தமிழகத்தில் கடந்த 10 மாதங்களாக பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழலே நிலவுகிறது.

அதுபோல் காவல்துறைக்கு சுதந்திரம் இல்லை. ஆளுங்கட்சியினரால் அவர்களின் கைகள் கட்டுப்பட்டுள்ளன. காவல்துறையை சீரமைக்கு ஓர் ஆணையத்தை முதல்வர் அமைக்கிறார். அதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி சிடி செல்வம் தலைமையாக அறிவிக்கப்படுகிறார். ஆனால், அண்மையில் சென்னை அசோக் நகரில் அவர் சென்ற வாகனத்தை நிறுத்தி தகராறு செய்த நபர்கள் அவருடைய பாதுகாவலரை வெட்டிவிட்டுச் சென்றுள்ளனர். இப்படித்தான் சட்டம் - ஒழுங்கு இருக்கிறது.

ஜம்மு - காஷ்மீரில் ஒரு சிறுமிக்கு நேர்ந்த கொடுமைக்கு குரல் கொடுத்த கனிமொழி, தனது தொகுதிக்கு பக்கத்தில் இருக்கும் விருதுநகரில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமையைப் பற்றி பட்டும்படாமல் பேசுகிறார்.

பாஜக இன்றைக்கு இங்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதால் நாளை தமிழகத்தில் ஆட்சி மாறப்போவதில்லை. ஆனால், தமிழகத்தில் பாஜக மட்டும்தான் அரசியலுக்காக, தேர்தலுக்காக மக்கள் பிரச்சினைகளைப் பேசாமல் நியாயத்துக்காக, உரிமைக்காக மக்களுக்கு குரல் கொடுக்கும் என்பதை நிரூபிக்க இந்த சுட்டெரிக்கும் வெயிலில் நாங்கள் பேசுகிறோம்" என்றார்.

துபாய் பயணம் குறித்து கேள்வி: "தமிழக முதல்வரின் கவனம் எல்லாம் துபாயில் தான் இருக்கிறது. இன்றைக்கு அவர் துபாய் செல்கிறார். இதற்கு முன்னர் அவர் குடும்பத்தினர் பலரும் சென்றுவந்தனர். இன்றைக்கும் முதல்வருடன் குடும்பத்தினர் செல்கின்றனர். அவர் எதற்காக அடிக்கடி துபாய் செல்கிறார் என்ற மர்மம் பற்றித் தெரிய வேண்டும்" என்று அண்ணாமலை வினவினார்.

சிவகாசி பட்டாசு தொழிலாளர்களின் பிரச்சினையைத் தீர்க்க பாஜக தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றும் அண்ணாமலை வாக்குறுதி அளித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE