'தமிழகம் வரும் இலங்கை தமிழர்களுக்கு அரசு விடிவுகாலத்தை பெற்றுத்தரும்' - முதல்வர் ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

சென்னை: "இலங்கையில் இருந்து தமிழகம் வரும் இலங்கை தமிழர்கள் தொடர்பாக மத்திய அரசிடமும், அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களிடம் தொடர்புகொண்டு இதை எப்படி கையாள வேண்டும் எனப் பேசிக் கொண்டிருக்கின்றோம். எனவே அதற்கொரு விடிவுகாலத்தை இந்த தமிழக அரசு ஏற்படுத்தித் தரும்" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் 2022-23 பட்ஜெட் மீதான விவாதம் நடந்து வருகிறது. இன்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் பதிலளித்தனர். பின்னர் பல்வேறு தீர்மானங்கள் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டன.

பட்ஜெட் மீதான விவாதத்தின் இறுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "இன்று நிதித்துறை அமைச்சரும், வேளாண்துறை அமைச்சரும் பதிலுரை ஆற்றி, இந்த அவையில் இருக்கக்ககூடிய அனைவரது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் பெற்றிருக்கின்றனர். இந்த அரசு மிகச் சிறப்பாக பல திட்டங்களை, பல பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.

இன்று பல்வேறு மாநிலங்களில், வெளிநாடுகளில் பாராட்டப்படக்கூடிய அளவிற்கு இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதுதொடர்பாக வருகின்ற செயதிகளையெல்லாம் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்த அரசைப் பொருத்தவரை எவ்வளவு துறைகள் இருந்தாலும், முக்கியமான துறை நிதித்துறைதான்.

அந்த நிதித்துறை பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கக்கூடிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மிகச் சிறப்பான வகையில் தன்னிடம் உள்ள அனுபவங்களை எல்லாம் வைத்து, வெளிநாடுகளில் பெற்றிருக்கக்கூடிய நல்ல அம்சங்களையெல்லாம் மனதில் தேக்கி வைத்துக்கொண்டு அந்தப் பணியை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்.

வேளாண்துறை அமைச்சரும், வேங்கையின் மைந்தன் என்ற நிலையிலிருந்து இப்போது விவசாயிகளின் மைந்தனாக மாறி, அவரும் தன்னுடைய கடமையை சிறப்பாக நிறைவேற்றியிருக்கிறார். இது ஆண்டுதோறும் தொடர வேண்டும். எனக்கு அந்த நம்பிக்கை நிச்சயமாக உள்ளது. இருவருக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கை தமிழர்கள் இன்றைக்கு பல துன்பங்களுக்கு, துயரங்களுக்கு ஆளாகியிருக்கக் கூடிய சூழ்நிலையில், பரிதவித்துக் கொண்டிருக்கக்கூடிய அந்த தமிழர்கள், அண்மையில் தமிழகத்திற்கு வந்துகொண்டிருக்கக்கூடிய செய்திகளை எல்லாம் நானும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

அதுதொடர்பாக நேற்றே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, இதுதொடர்பாக மத்திய அரசிடமும், அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களிடம் தொடர்புகொண்டு இதை எப்படிக் கையாள வேண்டும் என்று நாங்கள் பேசிக் கொண்டிருக்கின்றோம். எனவே அதற்கொரு விடிவுகாலத்தை இந்த தமிழக அரசு ஏற்படுத்தித் தரும் என்ற நம்பிக்கையை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் பேரவைத் தலைவர் உள்ளிட்டோர் நான் மேற்கொள்ளவிருக்கும் துபாய் பயணத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் பலமுறை கூறியிருக்கிறேன், இந்தியாவில் நம்பர் 1 முதல்வர் என பாராட்டப்படுவது எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால் அதைவிட மகிழ்ச்சி இந்தியாவில் நம்பர் 1 மாநிலம் தமிழகம்தான் எனக் கூறும்படி வரவேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் பணியாற்றிக்கொண்டிருக்கிறோம். அதற்கு இன்று மாலை நான் மேற்கொள்ளவிருக்கும் துபாய், அபுதாபி பயணம் நிச்சயம் துணை நிற்கும்" என்று அவர் கூறினார்

இதைத் தொடர்ந்து தமிழக சட்டப் பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE