திருச்சி: கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீனில் வெளிவந்திருக்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திருச்சியில் தினமும் தொண்டர்களின் கறி விருந்து அன்பில் திளைத்து வருகிறார்.
உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின்போது திமுக நிர்வாகியைத் தாக்கியது, கட்சியினருடன் சாலை மறியலில் ஈடுபட்டது உள்ளிட்ட வழக்குகளில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாருக்கு, திருச்சியில் 2 வாரங்கள் தங்கியிருந்து திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் 11-ம் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
வீடுகள், தோட்டங்களில் விருந்து: இதையடுத்து மார்ச் 13-ம் தேதி திருச்சி வந்த ஜெயக்குமார், மத்திய பேருந்து நிலையம் பகுதியிலுள்ள தனியார் ஓட்டலில் தங்கியிருந்து, காவல் நிலையம் சென்று கையெழுத்திட்டு வருகிறார். அவரை திருச்சி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் தங்களது வீடுகள், தோட்டம், அலுவலகம், சுற்றுலாத்தலம் என தினந்தோறும் ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்று கறி விருந்து அளித்து வருகின்றனர்.
இதன்படி இன்று சுப்பிரமணியபுரத்திலுள்ள தெற்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் குமார் சார்பில் விருந்தளிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற ஜெயக்குமாருக்கு பசவு பிரியாணி, தலைக்கறி, மூளை, ஈரல், குடல், ரத்தப் பொறியல், சிக்கன் மஞ்சூரியன், பிரட் அல்வா, வஞ்சிரம் மீன் மற்றும் சைவ உணவு வகைகள் விருந்தாக அளிக்கப்பட்டன.
அதிமுக, குடும்பப் பாசமுள்ள இயக்கம்: நிபந்தனை ஜாமீனுக்காக கையெழுத்திட வந்த இடத்தில் அதிமுகவினர் தினந்தோறும் அளிக்கக்கூடிய கறி விருந்துகளால் திக்குமுக்காடிப் போயுள்ள ஜெயக்குமார், அதுகுறித்து இந்து தமிழ் திசைக்கு அளித்த சிறப்புப் பேட்டி: "அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பழிவாங்கும் நோக்கத்துடன் சிறையில் அடைக்கப்பட்ட எனக்கு, சிறைக்குள் அடிப்படை வசதிகள் கூட அளிக்கப்படவில்லை. அங்கு நான் பட்ட கஷ்டத்தைக் கண்டு, திமுகவினர் ஆனந்தப்பட்டனர். ஆனால் சிறையில் இருந்து வெளியே வந்து திருச்சிக்கு வந்த பிறகு, இங்குள்ள கட்சியினர் என்மீது காட்டும் அன்பு ஆனந்தக் கண்ணீர் வடிக்க வைக்கிறது. அதிமுக ஒரு குடும்ப பாச உணர்வுள்ள இயக்கம் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள 9 தொகுதி நிர்வாகிகளும் போட்டி போட்டு என்னை அழைத்துச் சென்று விருந்தளித்து வருகின்றனர். பல நிர்வாகிகளுக்கு என்னால் மதிய விருந்துக்கு தேதி, நேரம் ஒதுக்கக் கூட முடியவில்லை. அவர்களிடம் மதிய விருந்துக்கு பதிலாக காலை, இரவு சிற்றுண்டி கொண்டு வந்து தருமாறு கூறியுள்ளேன். இப்படி ஒரு நெகிழ்ச்சியான நாட்களை நான் இதுவரைச் சந்தித்தில்லை. என் நீண்ட அரசியல் வாழ்க்கையிலும் சரி, திருமணம் உள்ளிட்ட சொந்த வாழ்க்கையிலும் சரி, இப்படியொரு தொடர்ச்சியான விருந்தளிப்பை நான் சந்தித்ததே இல்லை. திருமணமாகி புதுமாப்பிள்ளையாக இருந்தபோது கூட, இத்தனை விருந்துகளுக்கு நான் சென்றதில்லை. இது எதிர்பாராத ஒன்று. அந்தளவுக்கு கட்சியினர் என்மீது பாசம் செலுத்துகின்றனர்.
திருச்சி பிரியாணி சுவையோ..சுவை: உணவே மருந்து, மருந்தே உணவு என்ற கட்டுப்பாட்டை கடைபிடிப்பதாலும், ஏற்கெனவே ஆண்டின் அனைத்து நாட்களிலும் அசைவ உணவு சாப்பிடும் பழக்கம் உடையவன் என்பதாலும், இங்குள்ள நிர்வாகிகள் வீட்டுமுறைப்படி உணவு சமைத்து தருவதாலும், தினந்தோறும் கறிவிருந்து சாப்பிட்டாலும் எனக்கு வயிறு தொடர்பான எந்த உபாதையும் ஏற்படவில்லை. திருச்சி மக்கள் செய்யக்கூடிய அனைத்து உணவு வகைகளுமே நன்றாக உள்ளன. குறிப்பாக பிரியாணி மிகவும் சுவையாக இருக்கிறது. திரும்பத் திரும்ப சாப்பிடத் தூண்டுகிறது. சமையல் செய்த அண்டாவில், அடியிலுள்ள பிரியாணிக்கு தனி சுவை உண்டு. அதுதவிர தலைக்கறி, மூளை, ஈரல் போன்றவற்றின் சுவையும் சென்னையைக் காட்டிலும் வித்தியாசமாக உள்ளது. நன்றாக உள்ளது. இந்த நாட்களை என்வாழ்வில் எப்போதும் மறக்க மாட்டேன்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago