சென்னை: மாநில அரசின் கல்விக்கான உரிமையில் தலையிடும், தமிழக மாணவர்களைக் கடுமையாக பாதிக்கும் பட்டப்படிப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "ஒன்றிய அரசு 21ம் தேதி திங்கள்கிழமை அன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் நிதியுதவியைப் பெறும் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் கலை அறிவியல் உள்ளிட்ட இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை 2022-23-ஆம் கல்வியாண்டு முதல் தேசிய தேர்வு முகமை நடத்தும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (CUET) மூலம் மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளது. இத்தேர்வினை மாநில பல்கலைக்கழகங்கள், தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் ஏற்கலாம் எனவும் அறிவித்துள்ளது.
தேசிய கல்விக் கொள்கையின் ஓர் அம்சமான நாடு தழுவிய ஒற்றை நுழைவுத் தேர்வு என்பது, சமூக, பொருளாதார, வேலைவாய்ப்பில் சமமற்ற வளர்ச்சியுள்ள நமது நாட்டில் அனைவருக்கும் சமமான வய்ப்பினை வழங்காது. மேலும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுமத்தின் (NCERT) பாட முறையிலான இத்தேர்வு, மாநிலப் பாட முறையில் பயின்ற லட்சக்கணக்கான மாணவர்களுக்கு சமமான வாய்ப்பினை வழங்காது.
இதனால், தமிழக மாணவர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். இதுவரை நுழைவுத் தேர்வு இல்லாமல் +2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் உயர் கல்விக்கு செல்லும் மாணவர்கள் அதில் சிறப்பாக பயின்று வெற்றிகரமாக பட்டம் பெற்று பயன்பெற்று வரும் நிலையில், அவர்கள் மீது நுழைவுத் தேர்வினை திணித்து தேவையற்ற பொருளாதார சுமையையும் மன அழுத்தத்தையும் ஏற்றும் வகையில் அமைந்த பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை தமிழக அரசு வன்மையாகக் கண்டிக்கிறது.
ஏழை, நடுத்தர மாணவர்கள், சமூக ரீதியில் பின்தங்கிய மாணவர்களின் நலனை அச்சுறுத்தும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு, நீட் (NEET) தேர்வு போன்றே தவறான நடைமுறையாகும். நீட் தேர்வை எதிர்த்து தமிழக சட்டசபையில் ஒரு மனதாக தீர்மானம் இயற்றி 12-ம் வகுப்பு தேர்வு அடிப்படையில் மருத்துவ சேர்க்கையை நடத்த தமிழக அரசு போராடி வரும் நிலையில், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல கலை, அறிவியல் உள்ளிட்ட இளநிலை பட்டப்படிப்பிற்கான சேர்க்கைக்கும் பொது நுழைவுத் தேர்வு அறிவித்திருப்பது இம்மாநில மாணவர் நலனுக்கு முற்றிலும் விரோதமானதாகும்.
ஏற்கெனவே, 2006-ல் திமுக ஆட்சியில் தொழிற்கல்வி படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு இருந்ததை ரத்து செய்து சட்டமியற்றியது. இந்திய குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் அந்த சட்டம் 2007ம் ஆண்டு மார்ச் 15-ம் தேதி நடைமுறைக்கு வந்தது. அச்சட்டத்தின்படி மேற்கண்ட தொழிற்கல்வி பிரிவுகளில் மாணவர்கள் +2 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கப்பட்டார்கள். எனவே, திமுக அரசு எப்போதும் நுழைவுத் தேர்வு முறையை எதிர்த்தே வந்துள்ளது.
கர்நாடக மாணவர் நவீன் மரணத்திற்கு நீட் மட்டுமே காரணமென கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார். அவர் மத்திய நுழைவுத் தேர்வுக்கு எதிராக சமூக நீதிக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுப்பியுள்ள உரிமைக் குரல் நாடெங்கும் எதிரோலிக்கத் தொடங்கியுள்ளது என தெரிவித்துள்ளதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இதனால் டெல்லி பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நெரு பல்கலைக்கழகம் போன்ற மத்திய பல்கலைக்கழகங்களில் தமிழக மாணவர்கள் சேர்க்கை பெருமளவில் குறையும் அபாயம் உள்ளது. மேலும், ஒரே நாடு ஒரே நுழைவுத் தேர்வு என்கிற முறையில் நடத்த இருக்கின்ற இத்தேர்வு பல்வேறு மாநில பாடத்திட்டங்களில் பயிலும் மணவர்களின் நலனுக்கு எதிரானதாகும்.
பள்ளியிறுதித் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படாமல், பொது நுழைவுத் தேர்வின் மூலமே மாணவர்கள் இளநிலையப் படிப்புகளில் சேரமுடியுமென்றால், அதனால் பயன்பெறப் போவது தனியார் பயிற்சி மையங்கள்தான். மாணவர்கள், ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று பட்டப்படிப்பில் சேர்க்கை பெறுவதற்கான தகுதியை எட்டிய பின்னரும், அப்பட்டப்படிப்பிற்கான சேர்க்கைக்கு மீண்டும் ஒரு நுழைவுத் தேர்வு அவசியம் என்பது கேலிக்கூத்தான நடவடிக்கையாகும். இச்செயல் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சீராக பள்ளிக் கல்வியை மேற்கொள்ளும் சிறந்த கல்விச் சூழலை சீர்குலைக்கும் என்பதில் ஐயமில்லை. எனவே, ஏழை - எளிய மாணவர்கள் உயர் கல்வி பெறுவதை தடுக்கும் செயலாகவே இதனை எடுத்துக் கொண்டு, அதனை வன்மையாக எதிர்க்க வேண்டும்.
அரசியலமைப்புச் சட்டத்தின் பொதுப்பட்டியலில் “கல்வி” இடம்பெற்றுள்ள நிலையில், புதிதாக கல்விக் கொள்கைகளை வகுக்கும் போதும், அதனை நடைமுறைப்படுத்தும் போதும், மாநில அரசு மற்றும் ஒன்றிய அரசின் பங்களிப்பு இருக்க வேண்டுமேயன்றி, அவ்லாறில்லாமல், ஒன்றிய அரசு, மாநில அரசின் நிலை மற்றும் நலன்களைக் கருத்திற்கொள்ளாமல், தன்னிச்சையாக முடிவு செய்துள்ளது ஏற்கத்தக்கது அல்ல. இது மாநில அரசின் கல்விக்கான உரிமையில் தலையிடும் நடவடிக்கையாகும். எனவே, பொதுப்பட்டியலில் இருக்கும் “கல்வி”யை மாநிலப் பட்டியலில் சேர்க்க வேண்டுமென்று மீண்டும் வலியுறுத்துகிறோம்.
எனவே, ஒன்றிய அரசின் இந்நடவடிக்கை தமிழக மாணவர்களின் உயர் கல்வி பெறும் உரிமையை கடுமையாக பாதிப்படையச் செய்யும் என்பதால், பட்டப்படிப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பினை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago