சென்னை: அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, முந்தைய அரசின் திட்டங்களை முடக்குவதற்குப் பெயர் போன அரசு அதிமுகதான் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.
சட்டமன்றப் பேரவையில், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உரைக்கு இடையில் முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்துப் பேசினார். அப்போது அவர் பேசியது: "அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு, தாலிக்குத் தங்கம் வழங்கக்கூடிய திட்டத்தை நிறுத்தியதாக ஒரு கருத்தை நம்முடைய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இங்கே பதிவு செய்திருக்கின்றார். அ.தி.மு.க. தொடங்கிய திட்டங்களை, ஏதோ திமுக அரசு அமைந்ததும் நிறுத்தி விடுவதைப்போல ஒரு போலித் தோற்றத்தை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இங்கே தனது உரையிலே உருவாக்கியிருக்கிறார்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, முந்தைய அரசு திட்டங்களை முடக்குவதற்குப் பெயர் போன அரசு; அது உங்களுடைய அரசு. இது கடந்த காலங்களில், பல நேரங்களில் நிரூபணமாகியிருக்கக்கூடிய உண்மை. ஊடகத்தினர், பொது மக்கள் என அனைவரும் இதை நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள். கருணாநிதி தலைமையிலான தி.மு.க. ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் மாபெரும் சட்டமன்ற-தலைமைச் செயலக வளாகம் கட்டப்பட்டு, அன்றைக்குப் பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கால் அது திறந்து வைக்கப்பட்டது. அந்த இடத்தில் தான், சட்டமன்றமும் நடந்திருக்கிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதற்குப் பிறகு, சட்டமன்றம் நடைபெற்ற அந்த இடத்தை மருத்துவமனையாக மாற்றியது யார்?
பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழா நினைவாக, ரூ.170 கோடி மதிப்பீட்டில், 8 மாடிகள் கொண்ட ஒரு பெரிய மாளிகையை, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை தி.மு.க. ஆட்சி கட்டியது. அந்த மாபெரும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்ற நினைத்ததும், அதைப் பாழடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டதும் யார்? அங்கிருந்த அண்ணாவினுடைய சிலைக்குக் கீழே கல்வெட்டு இருக்கும். அந்தக் கல்வெட்டில் முதலமைச்சர் கருணநிதியின் பெயர் இருந்தது. அந்தப் பெயரையே எடுத்த ஆட்சி எது?
» தமிழகத்தில் இன்று 44 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 16 பேர்: 74 பேர் குணமடைந்தனர்
» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 5, 6-வது அணு உலைகள் கட்டுமானப் பணி தீவிரம்
கலைஞர் காப்பீட்டுத் திட்டத்திலே, கலைஞர் வீடு வழங்கக் கூடிய திட்டத்திலே இருந்த கலைஞர் பெயரை நீக்கியது யார்? செம்மொழிப் பூங்காவிலே, கருணாநிதியின் பெயரை மறைப்பதற்காக செடி, கொடிகளை கொண்டு போய் வைத்து, அதை முழுமையாக மூடி மறைத்தது யார்? கடற்கரைப் பூங்காவில் இருந்த கருணாநிதி பெயரை எடுத்தது யார்?
இராணி மேரிக் கல்லூரியை இடித்து, அங்கிருந்த கல்லூரியை அப்புறப்படுத்த நினைத்தது உங்களுடைய ஆட்சி. அதை இடிக்கக்கூடாது, அந்தக் கல்லூரி பழமையான கல்லூரி, நூற்றாண்டுகளைக் கண்டிருக்கக்கூடிய வரலாற்றுச் சிறப்புக்குரிய கல்லூரி என்று நாங்கள் அன்றைக்குத் தி.மு.க. சார்பில் குரல் கொடுத்தோம். அதற்காகச் சிறைபிடிக்கப்பட்டு, சிறைக்குப் போய் பல நாட்கள் இருந்து வந்திருக்கிறோம். அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு, அந்தக் கல்லூரி வளாகத்தில் ஒரு கட்டடம் கட்டப்பட்டு, கலைஞர் மாளிகை என்று பெயர் சூட்டப்பட்டது. நீங்கள் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு, அந்த கலைஞர் மாளிகையில் இருந்த கலைஞர் பெயரை நீக்கியது தான் உங்களுடைய சாதனை.
ஆகவே, கருணாநிதி கொண்டு வந்தார் என்பதற்காகவே சமத்துவபுரங்கள் எல்லாம் பழுதுபார்க்கப்படாமல், அவற்றைப் பேணிப் பாதுகாக்க முடியாத அளவிற்கு, பாழடித்தது யார்? உழவர் சந்தைகளை மேலும் மேலும் வலுப்படுத்தக் கூடாது என்று அதை இடித்து மூடியது யார்? தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் 2009 ம் ஆண்டு தொடங்கப்பட்ட உடன்குடி பவர் கார்ப்பரேஷன் லிமிடெட்-ஐ முடக்கியது யார்? நமக்கு நாமே திட்டம், அண்ணா மறுமலர்ச்சி திட்டம், வருமுன் காப்போம் திட்டம் போன்ற இந்தத் திட்டங்களையெல்லாம் உங்கள் ஆட்சியில் முடக்கினீர்கள். அதை நீங்கள் மறந்துவிடக்கூடாது.
இன்னொன்று, முக்கியமான விஷயம்; இங்கே மதுரவாயல்-சென்னை துறைமுகம் உயர் மட்டச் சாலைத் திட்டம் குறித்தும் பேசினார்கள். அந்தத் திட்டத்தை முடக்கியது யார்? சமச்சீர் கல்விப் பாடப்புத்தகத்தில் கருணாநிதி எழுதிய செம்மொழி வாழ்த்துப் பாடலையும், 7 ம் வகுப்புப் பாடத் திட்டத்திலே நாடகக் கலை குறித்த பாடத்தில் கருணாநிதியின் பெயரையும் ஸ்டிக்கரை வைத்து மறைத்தது யார்?
இப்படி வரிசையாக என்னால் சொல்ல முடியும். அதற்காக, பழிவாங்குவதற்காக நாங்கள் செய்கிறோம் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். நல்ல திட்டங்கள் எதுவாக இருந்தாலும், முறையான திட்டங்கள் எதுவாக இருந்தாலும், அதை நிறைவேற்றுகிற ஆட்சிதான், கருணாநிதி உருவாக்கித் தந்திருக்கக்கூடிய எங்கள் தலைமையில் நடைபெறக்கூடிய இந்த ஆட்சி என்பதை நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்" என்று அவர் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago