சென்னை: "விருதுநகரில் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு, விரைந்து தண்டனை பெற்றுத் தருவதில் நாட்டிற்கே முன்மாதிரி வழக்காக இருக்கும்" என்று முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் புதன்கிழமை சட்டம் - ஒழுங்குப் பிரச்சினை குறித்த கேள்விக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார். அப்போது அவர் பேசியது: எதிர்க்கட்சித் தலைவர் ஜீரோ ஹவர் நேரத்தைப் பயன்படுத்தி, சில பிரச்சினைகளை, சட்டம் - ஒழுங்குப் பிரச்சினைகள் குறித்து சில செய்திகளை இங்கே எடுத்துக் கூறியிருக்கிறார்கள். அதற்குரிய விளக்கத்தை நான் இங்கே தெரிவிக்க விரும்புகிறேன்.
வேலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரைக்கும், எதிர்க்கட்சித் தலைவர் ஒரு பிரச்சினையை இங்கே எடுத்துக் கூறியிருக்கிறார். வேலூர் மாவட்டம், சத்துவாச்சேரி இந்திரா நகரைச் சேர்ந்த ராமன் என்பவர் கடந்த 17ம் தேதி அன்று சத்துவாச்சேரி காவல் நிலையத்தில் அளித்த புகாரில் வ.உ.சி. நகரைச் சேர்ந்த பாலா (எ) பரத், மணிகண்டன் உள்ளிட்ட சிலர் தன்னை குடிபோதையில் தாக்கியதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரியுள்ளார். இப்புகார் தொடர்பாக காவல் துறையினர், பரத், மணிகண்டன் உள்ளிட்ட மூன்று பேரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், வியாழக்கிழமை அன்று அதிகாலை கேலக்சி திரையரங்கம் அருகே ஒரு ஆண் மற்றும் பெண் ஆகியோர் சி.எம்.சி. மருத்துவமனைக்குச் செல்ல வேண்டுமென ஆட்டோவில் ஏறிய போது, அவர்களைத் தனியிடத்திற்கு அழைத்துச்சென்று பரத், சந்தோஷ், மணிகண்டன் உள்ளிட்ட ஐவர் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவருடன் இருந்த ஆண் நபரை ஏ.டி.எம்.-க்கு அழைத்துச்சென்று, சுமார் 40 ஆயிரம் ரூபாயைப் பறித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
விசாரணையில் பாதிக்கப்பட்ட பெண் சி.எம்.சி. மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிகிறார். அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும், ஆண் நபர் அதே மருத்துவமனையில் பணிபுரியும் நாக்பூரைச் சேர்ந்த பிரனீத் ராஜ் கஷ்யப் என்பதும் தெரிய வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் அவரது சொந்த மாநிலத்திற்குச் சென்றுள்ள நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) இணையவழி வாயிலாக அளித்த புகாரில், வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் குற்ற எண் 127/2022, இ.த.ச. பிரிவுகள் 147, 148, 342, 365, 368, 376 (D), 376 (E), 395, 397, 506 (ii) உடன் இணைந்த பிரிவு 4-தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, பரத் உள்ளிட்ட நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அடுத்து, ஓய்வுபெற்ற நீதியரசர் காரில் சென்று கொண்டிருந்தபோது நடந்த ஒரு சம்பவத்தையும் இங்கே குறிப்பிட்டிருக்கிறார்கள். 4-வது காவல் ஆணையத்தின் தலைவரும், ஓய்வுபெற்ற உயர் நீதிபதியுமான சி.டி. செல்வம் செவ்வாய் கிழமை தனது காரில் தனி பாதுகாவலர், தலைமைக் காவலர் சக்திவேல் என்பவரோடு அசோக் நகர், நூறடி சாலையில் உள்ள கே.கே. நகர் காவல் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார்கள்.
அவருடைய வாகனம் அப்பகுதியிலுள்ள போக்குவரத்து சிக்னல் அருகே நின்றபோது இருசக்கர வாகனத்தில் சென்ற அடையாளம் தெரியாத 3 நபர்கள், ஆணையத் தலைவரின் வாகனத்தின்முன்பு தங்களது வாகனத்தை நிறுத்தியிருக்கிறார்கள். தனி பாதுகாவலர் சக்திவேல் அவர்கள் வாகனத்தை நகர்த்தக் கூறியிருக்கிறார். அந்த நபர்கள் தனி பாதுகாவலரிடம் வாக்குவாதத்திலே ஈடுபட்டு, அவர்களுக்குள் ஒருவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரைத் தாக்கிவிட்டு, இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றிருக்கிறார்கள். இதில் காயமுற்ற தனி பாதுகாவலர் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார்; நலமுடன் இருக்கிறார்.
இச்சம்பவம் குறித்து கே.கே.நகர் காவல் நிலையத்தில் குற்ற எண் 127/2022, இ.த.ச. பிரிவுகள் 341, 294-பி, 324, 307, 506 (ii) அதன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சென்னை மாநகர ஆணையருக்கு நான் அறிவுறுத்தியிருக்கிறேன். இதுசம்பந்தமாக, நானே ஓய்வு பெற்ற நீதியரசர் திரு. பி.டி. செல்வத்திடம் தொலைபேசியிலே தொடர்பு கொண்டு, விவரங்களை எல்லாம் கேட்டிருக்கிறேன்.
விருதுநகர் பாலியல் வன்கொடுமை சம்பவம்: விருதுநகரைப் பற்றி ஒரு பிரச்சினையைச் சொல்லியிருக்கிறார். விருதுநகரிலே 22 வயது பெண்ணிடமிருந்து பாலியல் வன்முறை புகார் வந்தவுடன், வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 24 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். மீதியுள்ள 4 பேர் சிறார் நீதிமன்றத்தின் கூர்நோக்கு இல்லத்திலே அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த வழக்கில் குற்றவாளிகள் விரைந்து தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்காக, தற்போது வழக்கு, மாநில குற்றப் புலனாய்வு பிரிவு-சி.பி.சி.ஐ.டி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. சி.பி.சி.ஐ.டி கண்காணிப்பாளர் முத்தரசி சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
60 நாட்களுக்குள் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, இந்த வழக்கு தனி நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்படும். விரைந்து குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தரப்படும். அதுவும் அதிகபட்ச தண்டனை பெறப்படும் என்பதை ஆணித்தரமாக, உறுதிபட இந்த மன்றத்திலே நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த பாலியல் வன்முறை வழக்கினை ஒரு “மாடல் வழக்காக” நேரடியாகக் கண்காணிக்குமாறு காவல் துறைத் தலைவருக்கு (DGP) நான் உத்தரவிட்டுள்ளேன். நிச்சயம், பொள்ளாச்சி பாலியல் வழக்குபோல் இல்லாமல், வண்ணாரப்பேட்டை 13 வயது சிறுமி பாலியல் வன்முறை வழக்குபோல் இல்லாமல், இந்த வழக்கு நிச்சயம் முறையாக நடத்தப்படும்.
இந்த அரசு எப்படி தண்டனை வாங்கிக் கொடுக்கிறது; இந்த மாநிலத்திற்ககாக மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்தியாவிற்கே இந்த வழக்கு “விரைந்து தண்டனை பெற்றுத் தருவதில்” ஒரு முன்னணி வழக்காக மட்டுமல்லாமல், இதுபோன்று தவறு செய்யக்கூடியவர்களுக்கு ஒரு பாடமாகவும் இருக்கப் போகிறது. பொறுத்திருந்து பாருங்கள். இதை எதிர்க்கட்சித் தலைவருக்கும் இங்கே இருக்கக்கூடிய எல்லா உறுப்பினர்களுக்கும் நான் இதை உறுதியோடு தெரிவித்துக்கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
34 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago