காரைக்கால் புறக்கணிக்கப்படவில்லை. ஆனால்... - தமிழிசை விளக்கம்

By வீ.தமிழன்பன்

காரைக்கால்: "காரைக்கால் பகுதி புறக்கணிக்கப்படவில்லை; ஆனால், சில திட்டங்கள் தாமதப்படுத்தப்படுவது எனக்கு தெரியவந்துள்ளது" என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

காரைக்கால் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நாக தியாகராஜன், மாவட்ட துணை ஆட்சியர்கள் ஆதர்ஷ் (வருவாய்), பாஸ்கரன் (பேரிடர் மேலாண்மை), முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நாரா சைதன்யா மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். திட்டப் பணிகள் குறித்து துணை ஆட்சியர் எம்.ஆதர்ஷ், ஆளுநரிடம் எடுத்துக் கூறினார்.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தராரஜன் கூறியது: "மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்சித் திட்டங்கள், அரசு பொது மருத்துவமனைக்கான தேவைகள், கரோனா 4 வது அலை வந்தால் அதற்கேற்ப தயார் நிலையில் உள்ளதா? பள்ளிகளில் உள்ள வசதிகள், சாலை வசதிகள், ரயில்வே திட்டப் பணிகள் உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டு, சில திட்டங்களை விரைவுப்படுத்த சொல்லப்பட்டுள்ளது.

என்னிடம் முன்வைக்கப்பட்ட சில கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படும். அரசுப் பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் மக்கள் விரும்பி வரும் வகையில் மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி சொல்லியுள்ளேன். துணை நிலை ஆளுநர் என்ற முறையில் எந்தெந்த வகையில் நிதி பெற்றுத் தர முடியுமோ, திட்டங்களை மேம்படுத்த முடியுமோ அதற்கேற்ற வகையில் செயல்படுகிறேன்.

காரைக்கால் பிராந்தியம் புறக்கணிக்கப்படவே இல்லை. கரோனா பரவல் காலத்தில் கூட இங்கு நேரடியாக வந்து அரசு பொது மருத்துவமனைக்கு சென்று பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டுள்ளேன். நேரடியாக வரவில்லை என்றாலும் காணொலிக் காட்சி மூலம் அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. அதனால் புறக்கணிப்பு என்பது நிச்சயம் இல்லை. ஆனால், சில திட்டங்கள் தாமதப்படுத்தப்பட்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது. அவற்றை விரைவுப்படுத்த கேட்டுக்கொண்டுளேன்" என்று ஆளுநர் தமிழிசை கூறினார்.

முன்னதாக பாஜக மற்றும் இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்து அமைப்புகளைச் சேர்ந்தோர், துணை நிலை ஆளுநரை சந்தித்து காரைக்கால் பொய்யாத மூர்த்தி விநாயகர் கோயில் முகப்பில் கட்டப்பட்டு வரும் முகப்பு மண்டபத்துக்கு, நகராட்சி மூலம் உரிய அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE