விருதுநகரில் இளம்பெண்ணை மிரட்டி சீரழித்த 8 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடையுங்கள்: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: "விருதுநகரில் இளம்பெண்ணை மிரட்டி சீரழித்த கொடியவர்கள் 8 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும்” என்று என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்து இட்ட பதிவில், 'விருதுநகரில் ஆயத்த ஆடை நிறுவனத்தில் பணியாற்றிய இளம்பெண்ணை மிரட்டி மாணவர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட 8 பேர் தொடர்ந்து 6 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என்று வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சி அளிக்கின்றன.

இளம்பெண்ணை சீரழித்த கொடியவர்களை காவல்துறையினர் கைது செய்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. ஆனால், இந்த நடவடிக்கைகள் போதுமானவை அல்ல. மனிதநேயமின்றி, மிருகங்களைப் போன்று செயல்பட்ட அனைவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும்.

விருதுநகர் பெண்ணை காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த ஒருவர், அதைப் படம்பிடித்து மிரட்டிதான் தொடர் கொடூரத்தை நிகழ்த்தியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண், ஒருவரிடம் நீதி கேட்டு சென்றபோது அவரும் இதே குற்றத்தை செய்துள்ளார்.

இவர்களை மன்னிக்கக் கூடாது. பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு, தங்களைப் பற்றிய விவரங்கள் வெளியில் வராமல், காவல்துறையை அணுகி நீதி பெறுவது குறித்த விழிப்புணர்வு இல்லாததுதான் அவர்கள் மீண்டும் மீண்டும் பாதிக்கப்பட காரணம். இது குறித்த பொது விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE