பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்பப் பெறுக: அன்புமணி ராமதாஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: சமையல் எரிவாயு விலை உயர்வை தாங்க முடியாது. இதனை திரும்பப் பெற வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ.50 உயர்த்தப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து சென்னையில் ஒரு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.965.50 ஆக அதிகரித்திருக்கிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை சமாளிக்க முடியாமல் தவித்து வரும் ஏழை மற்றும் நடுத்தர மக்களால் இதை தாங்க முடியாது.

சமையல் எரிவாயு விலை கடந்த ஓராண்டின் 9 தவணைகளில் ரூ.255 உயர்த்தப்பட்டிருக்கிறது. இது 36% உயர்வு ஆகும். மக்களின் வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவையான சமையல் எரிவாயு விலை ஓராண்டில் 36% உயர்த்தப்படுவது எந்த வகையிலும் நியாயமற்றது. இதை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

பெட்ரோல், டீசல் விலைகளும் 136 நாட்களுக்குப் பிறகு லிட்டருக்கு முறையே 76 காசுகளும், 77 காசுகளும் இன்று உயர்த்தப்பட்டுள்ளன. அடுத்தடுத்த நாட்களிலும் இதே அளவுக்கு விலை உயர்வு இருக்கும் என்றும், மொத்தமாக லிட்டருக்கு ரூ.25 வரை உயர்த்தப்படலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

பெட்ரோல் விலை ஏற்கனவே ரூ. 102.58 ஆகவும், டீசல் விலை ரூ.92.65 ஆகவும் உயர்ந்திருக்கும் நிலையில், விலை உயர்வு தொடர்வதை மக்களால் சமாளிக்க முடியாது. இதைக் கருத்தில் கொண்டு எரிபொருட்கள் மீதான கலால் வரியை குறைத்து, விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE