சென்னை: மேகேதாட்டுவில் புதிய அணை கட்ட நிதி ஒதுக்கியுள்ள கர்நாடக அரசைக் கண்டித்து, தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காவிரி உட்பட மாநில உரிமைகளில் அனைவரும் ஒன்றுபட்டு நின்று வெற்றி பெறுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத் துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில், காவிரியின் குறுக்கே மேகேதாட்டு வில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று தீர்மானம் கொண்டு வரப் பட்டது. தீர்மானத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முன்மொழிந்தார். அதில் கூறி யிருப்பதாவது:
காவிரி நடுவர் மன்றம் 2007-ம் ஆண்டு பிப்.5-ம் தேதி அளித்த இறுதித் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றம் 2018 பிப் 16-ம் தேதி அளித்த தீர்ப்பை மதிக்காமலும் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதலை பெறாமலும், மத்திய அரசின் எந்தவித அனுமதியை பெறாமலும் தன்னிச்சையாக காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட நிதி ஒதுக்குவதை எவ்வகையிலும் ஏற்க முடியாது. எனவே, கர்நாடக அரசின் செயலுக்கு பேரவை கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. கர்நாடகாவின் மேகேதாட்டு அணை திட்டத்துக்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உட்பட எந்த அனுமதியும் அளிக்கக் கூடாது என மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படுகிறது.
காவிரி நதிநீர்ப் பிரச்சினை ஒரு நீண்டகால பிரச்சினையாகும். இதற்கு தீர்வாக கடந்த 2018 பிப்.16-ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு செயலாக்கப்பட்டு வருகிறது. இப்பிரச்சினை இரு மாநிலங்களின் உணர்வுபூர்வமான பிரச்சினையாகும். எனவே, கர்நாடக அரசு மேகேதாட்டுவிலோ, வேறு எந்த இடத்திலோ அணை அல்லது எந்தவித புதிய நீர்த்தேக்க திட்டத்தையும் மற்ற படுகை மாநிலங்கள், மத்திய அரசின் ஓப்புதல் இல்லாமல் மேற்கொள்ளக் கூடாது என கர்நாடக அரசை அறிவுறுத்தும்படி மத்திய அரசை பேரவை கேட்டுக் கொள்கிறது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்த காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்படாத நிலையில், மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை பரிசீலிக்கவோ, அதற்கு அனுமதி அளிக்கவோ கூடாது என ஆணையத்தை பேரவை கேட்டுக் கொள்கிறது.
கர்நாடக அரசின் இந்த முயற்சியை முறியடித்து, தமிழக விவசாயிகளின் நலனை பாதுகாக்க அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கை களுக்கும் பேரவை தனது ஆதரவை ஒருமனதாக தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு தீர்மானத்தில் கூறப் பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தை உறுப்பினர் கள் அனைவரும் முழுமனதுடன் ஆதரிக்க வேண்டும் என்று அமைச்சர் துரைமுருகன் கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து, தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் பேசினர். செல்வப் பெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மூர்த்தி (பாமக), வி.பி.நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), சிந்தனைச் செல்வன் (விடுதலை சிறுத்தைகள்), சதன் திருமலைக்குமார் (மதிமுக), ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொமதேக), அப்துல் சமது (மனிதநேய மக்கள் கட்சி), ஜெகன் மூர்த்தி (புரட்சி பாரதம்), தி.வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி) ஆகியோர் தீர்மானத்தை ஆதரித்து பேசினர்.
பேரவை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசும்போது, ‘‘மேகேதாட்டு அணைக்கு எதிரான தமிழக அரசின் தீர்மானத்துக்கு ஆதரவு அளிக்கிறோம். பாஜக சார்பிலும் மத்திய அரசிடம் அனு மதி தரக்கூடாது என்று வலியுறுத்து வோம்’’ என்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பேசும்போது, அதிமுக ஆட்சியில் காவிரி நீர் பிரச்சினையை தீர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கை களை குறிப்பிட்டு இறுதியாக, நீர்வளத்துறை அமைச்சர் கொண்டுவந்த தீர்மானத்தை ஒருமனதாக அதிமுக ஆதரிப்பதாக தெரி வித்தார்.
இதையடுத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: மேகேதாட்டு தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் தீர்மானத்தை கொண்டுவந்து, கட்சி, அரசியல் பேதமின்றி ஏகமனதாக நிறைவேற்ற வேண்டும் என்ற அடிப்படையில் முன்மொழிந்துள் ளார். அனைத்து கட்சிகளும் ஓரணியில் நின்று இந்த தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்ற, இந்த அரசுக்கு ஆதரவு அளித்ததற்கு முதலில் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மேகேதாட்டு அணையை கர்நாடக அரசு கட்ட மத்திய அரசு அனுமதி தருவதை நிச்சயம் நாங்கள் ஏற்க மாட்டோம். அதை எக்காரணம் கொண்டும் ஒப்புக்கொள்ள மாட்டோம் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். நடுவர் மன்ற தீர்ப்புக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கும் எதிராக கர்நாடக அரசு மேற்கொள்ளத் துடிக்கும் இந்த முயற்சியை தமிழக அரசு நிச்சயம் தடுக்கும். அணைக்கு அனுமதி அளிக்கக் கூடாது என மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதிலும், சட்டரீதியான நடவடிக்கைகளிலும் அரசு உறுதியாக இருக்கும். அதில் எந்தவித பாகுபாடும் பார்க்க மாட்டோம்.
அணை கட்டும் முயற்சிகளை இந்த அரசு எல்லா வடிவிலும் எதிர்க்கும். தமிழகத்தின் காவிரி உரிமையை தமிழக உழவர்களின் நலனை இந்த அரசு நிச்சயம் பாதுகாக்கும். தமிழக உரிமையில் அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம். நிச்சயம் வெற்றி பெறுவோம்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.
இதையடுத்து, அமைச்சர் முன்மொழிந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
39 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago