118 ஆண்டுகளாக தொடரும் மத நல்லிணக்கம்: இந்து, முஸ்லிம் மக்கள் பங்கேற்கும் பங்குனி உத்திர விழா

By கி.பார்த்திபன்

நாமக்கல்: ராசிபுரம் அருகே குருசாமிபாளையம் சிவசுப்ரமணியர் கோயில் பங்குனி உத்திர திருவிழாவில் மத நல்லிணக்கத்தைப் போற்றும் வகையில் நடைபெறும் இந்து, முஸ்லிம் மக்கள் சந்தனம் பூசிக் கொள்ளும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த குருசாமிபாளையம் சிவசுப்ரமணியர் கோயில் பங்குனி உத்திர தேர்த் திருவிழா கடந்த 9-ம் தேதி தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இந்து, முஸ்லிம் சமுதாய மக்கள் ஒன்று கூடி சந்தனம் பூசிக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். மத நல்லிணக்கத்துக்கு உதாரணமாக நடந்துவரும் இந்த நிகழ்ச்சி கடந்த 118 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதன்படி இன்று (திங்கள்கிழமை) இந்து, முஸ்லிம் சமுதாய பெரியவர்கள் சந்தனம் பூசிக் கொள்ளும் நிகழ்ச்சி செங்குந்தர் பாவடி அருகே நடைபெற்றது. ராசிபுரம் கிழக்கு தெரு பள்ளி வாசலைச் சேர்ந்த டி. கே.உஷேன் தலைமையில் முஸ்லிம் மக்கள் குருசாமிபாளையம் வந்தனர். தொடர்ந்து அங்குள்ள சிவசுப்ரமணியர் கோயிலில் இருந்து வெள்ளை கொடி ஏந்தி, மேளம் வாத்தியம் முழங்க வீடு மற்றும் கடைகளின் சுவர்களில் சந்தனத்தை பூசினர்.

பின்னர், செங்குந்தர் பாவடி மைதானத்தில் உள்ள சென்டா மரத்தில் (புளிய மரம்) வெள்ளைக் கொடியை ஏற்றினர். அப்போது, ஊர் பெரியதனக்காரர் ராஜேந்திரன் கைகளில் டி. கே. உஷேன் சந்தனம் பூசினார். பின்னர் அவருக்கு ராஜேந்திரன் சந்தனம் பூசினார். இதைத்தொடர்ந்து ஒருவருக்கு ஒருவர் பூ மாலையை மாற்றிக் கொண்டனர். பின்னர், பா்த்தியா ஓதிய முஸ்லிம்கள் அங்கிருந்த மக்களுக்கு நாட்டுச் சர்க்கரை மற்றும் பொட்டுக் கடலை வழங்கினர். இதைத்தொடர்ந்து இந்து மக்கள், முஸ்லிம் மக்களுக்கு விருந்து கொடுத்து உபசரித்தனர்.

இதுகுறித்து குருசாமிபாளையம் மக்கள் கூறுகையில், "குருசாமிபாளையம் பகுதியில், கைத்தறி நெசவு தொழிலில் ஏராளமானோர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த தொழிலுக்கு அச்சு கட்டி கொடுக்கும் தொழிலை முஸ்லிம்கள் செய்து வந்தனர். கடந்த, 100 ஆண்டுகளுக்கு முன் பிளேக் நோயால் கிராம மக்கள் மக்கள் பாதிபிற்குள்ளாகினர். அப்போது, முஸ்லிம் பெரியவர்கள், சென்டா மரம் என அழைக்கப்படும் புளிய மரத்தின் கீழ் நின்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாத்தியா ஓதி பொட்டுக் கடலை மற்றும் நாட்டு சர்க்கரை கொடுத்தனர். அதனால் நோய் குணமானதாக முன்னோர்கள் தெரிவித்தனர்.

பங்குனி உத்திரத் திருவிழாவிற்கு ஒரு வாரத்திற்கு முன் குருசாமிபாளையம் ஊர் பெரியவர்கள், ராசிபுரம் அச்சு கட்டித்தெரு கிழக்கு பள்ளிவாசலுக்கு தேங்காய் பழம் தட்டுடன் சென்று திருவிழாவுக்கு அழைப்பு விடுப்பர். அதையடுத்து அவர்கள் விழாவில் கலந்து கொண்டு மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் சந்தனம் பூசிக் கொள்வர். இந்த விழா 118 ஆண்டுகளாக நடைபெறுகிறது, என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE