சென்னை: விலைவீழ்ச்சியால் தக்காளி அழுகிவருவதால் குளிர் கிடங்குகள், கொள்முதல் விலை நிர்ணயம் தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டு சந்தைகளில் தக்காளி விலை கடும் வீழ்ச்சியடைந்திருப்பதால், மேற்கு மாவட்டங்களில் ஒரு லட்சத்திற்கும் கூடுதலான ஏக்கர்களில் பயிரிடப்பட்டுள்ள தக்காளிகளை விவசாயிகள் அறுவடை செய்யாமல் அப்படியே வயலில் அழுக விட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. விவசாயிகள் வளர்த்த பயிர்களை அவர்களே அழுக விடுவதை விட வேதனை வேறு எதுவும் இல்லை.
தமிழ்நாட்டில் மொத்தவிலை சந்தைகளில் தக்காளி கொள்முதல் விலை கிலோ ரூ. 3 என்ற விலைக்கு சரிந்து விட்டது. சில்லறை விற்பனைக் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.12க்கு விற்கப்படுகிறது. மொத்தவிலை சந்தையில் 14 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளியை 45 ரூபாய்க்கு விற்பனை செய்வதற்கு, கமிஷன் மற்றும் போக்குவரத்து செலவாக மட்டும் ரூ.40 செலுத்த வேண்டும். அத்துடன் தக்காளி பறிப்பதற்காக பணியாளர்களுக்கு ஊதியமாக ஒரு நாளைக்கு ரூ.300 வழங்க வேண்டியுள்ளது. இந்த செலவுகளை கூட தக்காளி விற்பனை மூலம் கிடைக்கும் தொகையைக் கொண்டு ஈடு செய்ய முடியவில்லை என்பதால், தக்காளியை பறிக்காமல் விட்டு விடுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த நவம்பர் - டிசம்பர் மாதங்களில் கடுமையான மழை பெய்த போது தமிழகத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.160க்கு விற்பனை செய்யப்பட்டது. அப்போதும் உழவர்களுக்கு ஒரு கிலோ தக்காளிக்கு ரூ.35க்கு மேல் கிடைக்கவில்லை. இடைத்தரகர்கள் தான் பயனடைந்தார்கள். இப்போதும் ஒரு கிலோ தக்காளியை பறித்து சந்தைக்கு கொண்டு செல்வதற்கு ரூ.4 வரை செலவாகும் நிலையில், அதற்கான விலையாக ரூ.3 மட்டுமே கிடைக்கிறது. தக்காளி விளைச்சல் அதிகரித்தாலும், குறைந்தாலும் அதனால் பாதிக்கப்படுவது விவசாயிகள் தான் என்பதை இந்த புள்ளிவிவரங்கள் தெளிவாக விளக்குகின்றன.
» ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை: ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓபிஎஸ் முதன்முறையாக ஆஜர்
» ரூ.2.10 கோடி ஊழல் செய்த அதிகாரிக்கு பணியிடமாற்றம் மட்டும்தான் தண்டனையா? - அன்புமணி கண்டனம்
தக்காளி விலை வீழ்ச்சியால், விளைந்த தக்காளியை பறிக்காமல் வயலிலேயே அழுக விட்டதன் மூலம் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தக்காளி விவசாயிகள் அவர்களின் முதலீட்டை முற்றிலுமாக இழந்து, கடனாளியாகியுள்ளனர். அவர்கள் அடுத்த முறை தக்காளி சாகுபடி செய்ய அதிக வட்டிக்கு மீண்டும் கடன் வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை. பிற மாவட்டங்களைச் சேர்ந்த தக்காளி விவசாயிகளும் இதேபோன்ற அவல நிலையில் தான் உள்ளனர்.
தக்காளியை விளைவிக்கும் விவசாயிகளுக்கு மட்டும் தான் இத்தகைய இழப்பு ஏற்படுகிறது. அதை வாங்கி விற்கும் வணிகர்கள், இடைத்தரகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் லாபம் கிடைக்கிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. அனைத்து காய்கறிகளுக்கும் கொள்முதல் விலை நிர்ணயிப்பதன் மூலம் தான் காய்கறிகளை பயிரிடும் விவசாயிகளுக்கு லாபம் கிடைப்பதை உறுதி செய்ய முடியும். 2020-ஆம் ஆண்டில் கேரளத்தில் தக்காளி, வாழை, பாகற்காய், உருளைக்கிழங்கு போன்ற 16 வகை காய்கறிகளுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையை அம்மாநில அரசு நிர்ணயித்துள்ளது.
இதன் மூலம் அந்த காய்கறிகளை பயிரிடுவோருக்கு அனைத்து செலவுகளும் போக 20% லாபம் கிடைக்க வகை செய்யப்பட்டிருக்கிறது. இதைவிட சிறப்பான திட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி கடந்த பல ஆண்டுகளாக பரிந்துரைத்து வருகிறது.
அனைத்து வகையான வேளாண் விளைபொருட்களுக்கும் கொள்முதல் விலையை நிர்ணயிப்பதற்காக வேளாண் விளைபொருட்கள் விலை நிர்ணய ஆணையம், அவற்றை அரசே கொள்முதல் செய்வதற்கு வேளாண் விளைபொருள் கொள்முதல் வாரியம் ஆகிய அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வரும் திட்டம் . உணவு தானியங்கள் தவிர அனைத்து வகை காய்கனிகளையும் அரசே கொள்முதல் செய்யும் போது, உழவர்களுக்கு நியாயமான கொள்முதல் விலை கிடைப்பதும், பொதுமக்களுக்கு குறைந்த விலையில் காய்கனிகள் கிடைப்பதும் உறுதி செய்யப்படும்.
தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் தான் மிக அதிக பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. தக்காளி விலை வீழ்ச்சியடைவதையும், உயர்வதையும் தடுக்க இந்த மாவட்டங்களில் குளிர்பதனக் கிடங்குகளை அமைக்க வேண்டும்; தக்காளியிலிருந்து சாஸ் உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரிப்பதற்கான சிறப்பு மண்டலங்களை அமைக்க வேண்டும் என்றும் பாமக வலியுறுத்தி வருகிறது. ஆனால், கடந்த காலங்களிலும், நிகழ்காலத்திலும் தமிழக ஆட்சியாளர்கள் இந்த யோசனையை செயல்படுத்த தவறி விட்டது தான் தக்காளி விவசாயிகளின் இன்றைய அவலை நிலைக்கு காரணமாகும்.
தமிழ்நாட்டில் தக்காளி விவசாயிகள் பாதிக்கப்படுவது இதுவே கடைசி முறையாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் நிலையில், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம், சிறப்பு மண்டலங்களையும், குளிர்பதன கிடங்குகளையும் அமைக்கும் திட்டம் ஆகியவற்றை தமிழக அரசு விரைந்து செயல்படுத்துவதற்கான அறிவிப்பை வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் பதிலுரையில் அறிவிக்க வேண்டும். தக்காளி விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டையும் வழங்க வேண்டும்.'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
48 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago