பன்னிரு திருமுறைகளை படித்தால் பண்புகள் வளரும்: உயர் நீதிமன்ற நீதிபதி டி.ராஜா

பன்னிரு திருமுறைகளைப் படித்தால் பண்புகள் வளரும் என உயர் நீதிமன்ற நீதிபதி டி.ராஜா பேசினார்.

மதுரையில் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி செ.பால்ராஜ் எழுதிய, ‘பன்னிரு திருமுறைகள் – ஆழ்வார்கள்’ எனும் ஆன்மிக நூல் அறிமுக விழா உலகத் தமிழ்ச்சங்கத்தில் நேற்று நடைபெற்றது. நூலாசிரியர் செ.பால்ராஜ் வரவேற்றார். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் நூலை வெளியிட்டார். அதை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஜி.ஆர். சுவாமிநாதன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

இதில் உயர் நீதிமன்ற நீதிபதி டி.ராஜா பேசியதாவது:

பன்னிரு திருமுறைகள் அவசியமா?, ஆழ்வார்கள் பற்றி படிக்கவேண்டுமா? என நினைக்கலாம். 7 முதல் 12-ம் நூற்றாண்டு வரை சிவனை பற்றி பன்னிரு திருமுறைகளில் பாடப்பட்டிருக்கின்றன. பன்னிரு திருமுறைகள், ஆழ்வார்கள் பற்றி படித்தால் பண்புகள் வளரும் என்றார்.

குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசும்போது, சட்டத் துறையில் தனது வாழ்க்கையை ஒப்படைத்த ஒருவர், ஆன்மிகத் தமிழுக்கு தன்னை அர்ப்பணித்துள்ளார். இன்றைய இளைய தலைமுறையினரும் இதனைக் கற்று சமய உலகத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த நூலை எழுதி உள்ளது பாராட்டுக்குரியது என்றார்.

நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பேசும்போது, நாயன்மார்களின் வரலாறு மற்றும் பெருமையை மிக எளிய நடையில் நூலாசிரியர் சித்தரித்துள்ளார். ஒரு சிறந்த புத்தகம் நமது அறிவை செம்மைப் படுத்தி உள்ளது. இப்புத்தகம் சிறந்த ஆன்மிக புத்தகமாகும் என்றார்.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேசுகையில், இறை நம்பிக்கை இல்லாமல் ஒழுக்க கோட்பாடுடன் வாழ்வது என்பது முடியாது. நமது நாட்டுக்குரிய பக்தி மார்க்கம், தர்மங்களின் அடிப்படையில்தான் ஒழுக்கக் கோட்பாடுடன் வாழ முடியும் என்றார்.

திருச்சி உருமு தனலட்சுமி கல்லூரிப் பேராசிரியை எ.விஜயசுந்தரி உள்ளிட்டோர் பேசினர். பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் நன்றி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE