அரியலூர் | தனியார் சிமென்ட் ஆலைகள் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும்: அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

By செய்திப்பிரிவு

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிமென்ட் ஆலைகள் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது.

முகாமுக்கு, சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் தொல்.திருமாவளவன், ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி, எம்எல்ஏக்கள் அரியலூர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், முகாமை தொடங்கிவைத்து, முதற்கட்டமாக 63 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

அப்போது, அவர் பேசும்போது, ‘‘அரியலூர் மாவட்டத்தில் 6 பெரிய சிமென்ட் ஆலைகள் இருந்தாலும் அரியலூர் மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை என்ற ஏக்கம் உள்ளது. சிமெண்ட் ஆலை அதிகாரிகளை சந்திக்கும் போது எல்லாம் தொடர்ந்து நான் கோரிக்கை வைக்கிறேன். இங்குள்ள நிறுவனங்கள் பொருளீட்டுவது இந்த அரியலூர் மண்ணிலிருந்து தான். ஈட்டுகின்ற பொருளுக்கு ஈடு செய்யாவிட்டாலும், இந்த பகுதியிலுள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க முன்வர வேண்டும்.

அதேபோல, ஆண்டுதோறும் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல், ஐ.டி.ஐ, பாலிடெக்னிக் மாணவர்களுக்கு இங்குள்ள சிமென்ட் ஆலைகள் பயிற்சி கொடுக்க முன்வர வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பொ.சந்திரசேகர், ஒன்றியக் குழுத் தலைவர் அசோகசக்கரவர்த்தி, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இணை இயக்குநர் தேவேந்திரன், கோட்டாட்சியர் ஏழுமலை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (பொ) மூ.வினோத்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முகாமில், 72 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. 1,968 வேலை நாடுநர்கள் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE