கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரபிக் கடலில் ஞாயிற்றுக்கிழமை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் ஈரப்பதத்தை வங்கக் கடல் பகுதி உறிஞ்சியதால், ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. அதே போல், மீண்டும் வங்கக் கடல் ஈரப்பத்தை உறிஞ்சினால் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதுவும், கடலோர மாவட்டங்களில் மட்டுமே பெய்யக் கூடும், உள் மாவட்டங்களில் பெய்ய வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி வரை பதிவான மழை நிலவரப்படி திருவள்ளூரில் 4 செ.மீ., கோவை மாவட்டம் வால்பாறை, சின்னகலார், திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம், நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 3 செ.மீ., நீலகிரி மாவட்டம் தேவலா, வேலூர் மாவட்டம் சோளிங்கரில் 2 செ.மீ. மழை பெய்தது.

தமிழகத்தில் அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் 102.2 டிகிரி வெயில் பதிவாகியது. திருச்சியில் 101.66டிகிரி, நாகப்பட்டினத்தில் 100.76 டிகிரி, சென்னையில் 99.68 டிகிரி, வேலூரில் 95 டிகிரி பதிவாகியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE