தமிழக வேளாண் பட்ஜெட்: தென்னை விவசாயிகள் ஏமாற்றம்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் மட்டும் 88,400 ஏக்கர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தென்னை சாகுபடி மற்றும் தேங்காய் உற்பத்தியில் கோவை மாவட்டம் முதலிடம் வகிக்கிறது.

தென்னை சார்ந்த தொழில்கள்அதிக அளவில் பொள்ளாச்சியில் நடைபெறுவதால், பொள்ளாச்சியை தென்னை பொருட்கள் ஏற்றுமதிசிறப்பு வாய்ந்த நகரமாக அறிவித்து,தென்னை சாகுபடி மேம்பாட்டுக்காக தென்னை வளர்ச்சி வாரியத்தையும் மத்திய அரசு அமைத்தது.

ஆனால் இதன் தலைமையிடம் கொச்சியிலும், மண்டல அலுவலகம் சென்னையிலும் உள்ளது. தென்னை சாகுபடி பரப்பு அதிகமுள்ள பொள்ளாச்சியில் தென்னை வளர்ச்சி வாரியம் அலுவலகம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இந்த ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில், இந்த அறிவிப்பு வெளியாகாததால், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து திருமூர்த்தி நீர்த்தேக்க திட்டக்குழு தலைவர் பரமசிவம் கூறியதாவது: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தென்னை சாகுபடி அதிகளவில் நடைபெற்று வருகிறது. தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல், வறட்சி, தென்னை பொருட்களுக்கு நிலையான வருமானம்இல்லாமை போன்ற காரணங்களால், விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதற்கு தீர்வுகாணவும், லட்சக்கணக்கான தென்னை விவசாயிகள், தென்னைசார்ந்த தொழிலில் ஈடுபடுவோரின் வாழ்வாதாரத்தை காக்கவும், வேளாண் நிதிநிலை அறிக்கையில்தென்னை நலவாரியம் அமைக்கப்படுவது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்தோம். இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகாதது, ஏமாற்றம் அளிக்கிறது.

அதேபோல பிஏபி பாசனக் கால்வாய்களை தூர்வார நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. தலைமை செயலரின் தலைமையில் விவசாயிகளின் குறைகளை நிவர்த்தி செய்ய உயர்மட்ட குழு அமைக்கப்படும் என அறிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது. நிதிநிலை அறிக்கையின் மீது நடைபெறும் விவாதத்தின்போது இதுகுறித்து நல்ல முடிவை அரசு அறிவிக்க வேண்டும், என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE