சென்னை: சிறுதானிய சாகுபடியையும், இயற்கை விவசாயத்தையும் ஊக்குவிக்க சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும், வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதன் நோக்கம் இன்னும் நிறைவேறவில்லை” என்று அவர் விமர்சித்துள்ளார்.
தமிழக வேளாண் பட்ஜெட் குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2022-23 ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் சிறுதானிய சாகுபடியையும், இயற்கை விவசாயத்தையும் ஊக்குவிக்க சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
உழவர் சந்தைகள் மேம்படுத்தப்படும்; புதிதாக திறக்கப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளும் வரவேற்கத்தக்கவையாகும். 2023 ஆம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்படும் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ள நிலையில், சிறுதானிய சாகுபடியை ஊக்குவிக்கவும், சந்தைப்படுத்துவதற்கும் சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று பாட்டாளி மக்கள் கட்சி அதன் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையில் அறிவித்திருந்தது.
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையிலும் சிறுதானிய சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் 20 மாவட்டங்கள் சிறுதானிய மண்டலங்களாக அறிவிக்கப்படும்; சிறுதானிய திருவிழாக்கள் நடத்தப்படும்; உழவர் சந்தைகளில் மாலை வேளைகளில் சிறுதானியங்களை விற்பனை செய்ய அனுமதிக்கப்படும்; சிறுதானியங்களை மதிப்புகூட்டி விற்பனை செய்ய ரூ.92 கோடி ஒதுக்கப்படும்; இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க ரூ.4 கோடி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது பயனளிக்கும்.
திண்டிவனம், தேனி, மனப்பாறையில் உணவுப் பூங்காக்கள் அமைக்கப்படும்; மதிப்புக் கூட்டப்பட்ட வேளாண் பொருட்களுக்கான தொழிற்பேட்டை திருவாரூர் மாவட்டத்தில் அமைக்கப்படும் என்பனவும் வரவேற்கத்தக்க திட்டங்கள் ஆகும். தமிழ்நாட்டில் 29 மாவட்டங்கள் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படக் கூடிய மாவட்டங்கள் என்று அடையாளம் காட்டியிருப்பது பயனுள்ளது ஆகும். அதேநேரத்தில் இந்த மாவட்டங்களில் காலநிலை மாற்றத்தை தாங்கி வளரும் பயிர்களை சாகுபடி செய்ய ஊக்குவிக்கப்படும் என்று அறிவிப்புடன் வேளாண்துறை ஒதுங்கிக் கொள்ளாமல், அம்மாவட்டங்களில் காலநிலை மாற்ற பாதிப்பை தணிப்பதற்கான நடவடிக்கைகளையும் பிற துறைகளுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும்.
வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்து ஏமாற்றத்தை அளித்தது, வேளாண் விளைபொருட்களின் கொள்முதல் விலைகளை உயர்த்தவும், கட்டமைப்புகளை மேம்படுத்தவும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான். கரும்புக்கு டன்னுக்கு கடந்த ஆண்டு ரூ.192.50 சிறப்பு ஊக்கத்தொகையாக வழங்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் ரூ.2.50 மட்டும் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதையும் சேர்த்து ஒரு டன்னுக்கு கொள்முதல் விலையாக ரூ.2950 மட்டுமே கிடைக்கும். சத்தீஸ்கரில் ரூ.3550, உத்தரப்பிரதேசத்தில் ரூ.3500 வழங்கப்படும் சூழலில், தமிழகத்தில் டன்னுக்கு ரூ.4000 வழங்கப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், இரண்டாவது நிதிநிலை அறிக்கையிலும் அதை நிறைவேற்றவில்லை. நெல்லுக்கு ரூ.2500 கொள்முதல் விலை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலையில், அது குறித்த எந்த அறிவிப்பும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை. இதனால், விளைபொருட்களின் கொள்முதல் விலை குறித்த கோரிக்கைகள் கனவாகவே தொடர்கின்றன.
ஒவ்வொரு ஆண்டும், நெல் கொள்முதல் நிலைய வளாகங்களில் பல்லாயிரக்கணக்கான மூட்டைகள் நெல் மழையில் நனைந்து வீணாகும் சூழலில், அதைத் தடுக்கும் வகையில் கட்டமைப்புகளை ஏற்படுத்த எந்த அறிவிப்பும் இடம் பெறாதது ஏமாற்றமளிக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஜூனூரில் தோட்டக்கலை கல்லூரி அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் வெளியான அறிவிப்பு இன்னும் செயல்படுத்தப்படாத நிலையில், இந்த நிதிநிலை அறிக்கையில் புதிய வேளாண் கல்வி நிலையங்கள் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இது வேளாண் வளர்ச்சியை கடுமையாக பாதிக்கும்.
தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் மற்றும் பாசனக் கட்டுமானங்களை பராமரிக்கவும், தூர் வாரவும் மட்டுமே ரூ.3,794 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. காவிரி - குண்டாறு இணைப்பு, தாமிரபரணி - நம்பியாறு இணைப்பு ஆகிய திட்டங்களுக்கும், புதிய பாசனத் திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கப்படவில்லை.
தமிழ்நாட்டில் இரண்டாவது ஆண்டாக வேளாண்மை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பதற்கு தமிழக அரசுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேநேரத்தில் வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதன் நோக்கம், வேளாண்துறைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்பதுதான். ஆனால், அந்த நோக்கம் இன்னும் நிறைவேறவில்லை. 2022-23 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையின் மொத்த மதிப்பே ரூ.33,007 கோடி தான்; இது கடந்த ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் மதிப்பான ரூ.34,220 கோடியை விட குறைவு ஆகும். இது கூட 10 துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்களின் மொத்த மதிப்பு தான். வேளாண்துறைக்கு மட்டுமான நிதி ஒதுக்கீடு வெறும் ரூ.9,368 கோடி மட்டுமே. இது போதுமானதல்ல.
தமிழ்நாட்டின் முதன்மைத் தொழில் விவசாயம் தான்; 60-%க்கும் கூடுதலான மக்களுக்கு விவசாயம் தான் வாழ்வாதாரம் ஆகும். அதைக் கருத்தில் கொண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையின் மதிப்பு அதிகரிக்கப்பட வேண்டும். தமிழகத்தின் பொது நிதிநிலை அறிக்கையின் மதிப்பில், வெறும் 10% அளவுக்கே வேளாண் நிதிநிலை அறிக்கையின் மதிப்பு இருக்கும் நிலையில், அடுத்த ஆண்டிலிருந்து இதை குறைந்தபட்சம் 25% அளவுக்காவது உயர்த்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
18 mins ago
தமிழகம்
10 mins ago
தமிழகம்
28 mins ago
தமிழகம்
32 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago