தாலிக்கு தங்கம் திட்டம் ரத்து கற்பனைக்கு எட்டாத பாதிப்புகளை ஏற்படுத்தும்: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: தாலிக்கு தங்கம் திட்டம் ரத்து கற்பனைக்கு எட்டாத பாதிப்புகளை ஏற்படுத்தி விடும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் ஆறாம் வகுப்பு முதல் அரசு பள்ளிகளில் படித்து பட்டப்படிப்பு/ பட்டயப்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் அவர்கள் படிப்பை முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 நிதியுதவி வழங்கப் படும் என்ற உன்னதமான திட்டத்தை அறிவித்துள்ளது தமிழக அரசு.

ஆனால், ஏழைப்பெண்களுக்கு தங்கத்தாலி உள்ளிட்ட திருமண உதவி திட்டத்தை ரத்து செய்திருக்கிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை, தமிழகத்தின் சராசரி உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதத்தை விட குறைவாக இருப்பது உண்மை தான். அந்த விகிதத்தை அதிகரிக்கும் வகையிலும், பெண்கள் அதிக எண்ணிக்கையில் உயர்கல்வி கற்பதை உறுதி செய்யும் வகையிலும் மாதம் ரூ.1000 வழங்குவது பாராட்டப்பட வேண்டியது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அதற்காக மாணவிகள் கொடுக்க வேண்டிய விலை மிக அதிகம்.

மாணவிகளுக்கு நிதி வழங்குவதற்காக, தமிழகத்தில் இதுவரை செயல்படுத்தப்பட்டு வந்த மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என்ற பெயரில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அதாவது திருமண நிதியுதவி திட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டது; இனி யாருக்கும் இத்திட்டத்தின்படி தாலியும், நிதியும் வழங்கப்படாது.

தமிழ்நாட்டில் மொத்தம் 5 வகையான திருமண நிதியுதவித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்தன. அவற்றில் ஈ.வே.ரா. மணியம்மையார், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, அன்னை தெரசா, டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் ஆகியோர் பெயரில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் சிறப்புப் பிரிவினருக்கான திட்டங்கள் ஆகும். அதை தொடருகின்றன. ஆனால், பொதுப்பிரிவினருக்கான மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் தான் ரத்து செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் பயனாளிகள் எண்ணிக்கை மிகவும் அதிகம் என்பதால், அதிக எண்ணிக்கையிலானவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டத்தின்படி, ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் திருமணத்திற்கு தமிழக அரசின் சார்பில் ஒரு பவுன் தங்கம் வழங்கப்படும்; அத்துடன் பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு ரூ.50 ஆயிரமும், மற்ற பெண்களுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும். அரசால் செயல்படுத்தப்படும் மேற்கண்ட 5 வகையான திருமண உதவித் திட்டங்களால் 2020-21 ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து 8,373 பெண்கள் பயனடைந்துள்ளனர். இவர்களில் ஏறக்குறைய ஒரு லட்சம் பேர் மூவலூர் இராமாமிர்தம் திருமண நிதியுதவித் திட்டத்தின்படி பயனடைந்தவர்கள் என்பதில் இருந்தே அத்திட்டத்தின் பயன்களையும், அது தொடர வேண்டியதன் தேவையையும் அறிந்து கொள்ளலாம்.

மூவலூர் இராமாமிர்தம் திருமண நிதியுதவித் திட்டப்படி தாலிக்கு தங்கம் மற்றும் நிதியுதவி பெறுவதற்கான முதல் நிபந்தனை, பயனாளியின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும் என்பதாகும். இத்திட்டத்தின்படி ரூ.40,000 மதிப்புள்ள தங்கக்காசு, ரூ.50,000 நிதி என மொத்தம் ரூ.90,000 மதிப்புள்ள உதவிகள் கிடைக்கின்றன. தினமும் ரூ.200வருவாய் ஈட்டும் குடும்பங்களுக்கு ரூ.90,000 மதிப்புள்ள உதவிகள் எவ்வளவு முக்கியம்? என்பதை சொல்லித் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. அவ்வளவு பயனுள்ள திட்டத்தை அரசு ரத்து செய்தால், ஏழைகள் மோசமான பாதிப்புக்கு உள்ளாவார்கள்.

‘‘அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’’ என்று கல்வி வழங்குவதன் சிறப்பை பாரதியார் கூறியிருப்பது உண்மை தான்.

ஆனால், ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.40 ஆயிரத்தைக் கடந்து விட்ட நிலையில், ஏழை பெற்றோர்கள் தங்களின் பெண் குழந்தைகளின் திருமணச் செலவுகளுக்காக ரத்தக் கண்ணீர் வடிக்க வேண்டியதாக உள்ளது. அவர்களுக்கு தாலிக்கு தங்கம் திட்டம் பேருதவியாக இருந்தது. இப்போது அத்திட்டம் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பல ஏழைக்குடும்பத்து பெண்களின் திருமணம் என்பதே கேள்விக்குரியதாகி விடக்கூடும். இது சமூகத்தில் நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.

மாணவிகளின் பட்டப்படிப்புக்கான நிதியுதவி திட்டம் அரசுக்கு நற்பெயரை பெற்றுத் தரும் என்பதில் ஐயமில்லை. ஆனால், ஏழைப் பெண்களுக்கான திருமண உதவித் திட்டம் நிறுத்தப்பட்டிருப்பது அரசுக்கு எந்த வகையிலும் அழகு சேர்க்காது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனையாகத் தான் கூறுகிறேன்... இப்படி ஒரு நிலை ஏற்படுவதை தவிர்க்க முயலுங்கள்.

ஆண்டுக்கு ரூ.3,33,251 கோடிக்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் அரசுக்கு திருமண நிதியுதவி திட்டத்திற்காக ரூ.750 கோடி நிதி ஒதுக்குவது பெரிய விஷயமல்ல. எனவே, தாலிக்கு தங்கம், ரூ.50,000 வரை நிதியுதவி உள்ளிட்ட உதவிகளை வழங்கக்கூடிய மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்