சித்திரை பொருட்காட்சி தமுக்கத்திலேயே நடத்த முடிவு: ரகசியம் காக்கும் மாவட்ட நிர்வாகம்

By செய்திப்பிரிவு

மதுரையில் சித்திரைத் திருவிழாவின்போது தமுக்கம் மைதானத்தில் நடைபெறும் அரசு பொருட்காட்சி இந்த ஆண்டு மாட்டுத்தாவணிக்கு மாற்ற ஏற்பாடு நடந்த நிலையில் அதிமுகவின் எதிர்ப்பால் தற்போது மீண்டும் தமுக்கத்திலே நடத்த முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மதுரை சித்திரைத் திருவிழா ஏப்ரல் 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இத்திருவிழாவுக்கு வரும் லட்சக்கணக்கான மக்கள் பொழுதுபோக்குக்காகவும், அரசு நலத்திட்டங்களை தெரிந்து கொள்வதற்காகவும் தமுக்கம் மைதானத்தில் ஆண்டுதோறும் சித்திரைப் பொருட்காட்சி செய்தி-மக்கள் தொடர்பு துறை சார்பில் நடத்தப்படும்.

தமுக்கம் மைதானத்தில் தற்போது மாநகராட்சி சார்பில் ரூ.45.5 கோடியில் வர்த்தக மையம் அமைக்கப்படுகிறது. இதைக் கட்டும் பணி முடிவடையாததால் இந்த ஆண்டு சித்திரைப் பொருட்காட்சியை மாட்டுத்தாவணி அருகே உள்ள மாநகராட்சி இடத்துக்கு மாற்ற ஏற்பாடு நடந்தது. இது குறித்து `இந்து தமிழ்' நாளிதழில் விரிவான செய்தி வெளியானது.

இதைத் தொடர்ந்து மாட்டுத்தாவணிக்கு பொருட்காட்சியை இடம் மாற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எதிர்ப்பு தெரிவித்தார். பொருட்காட்சியை அங்கே மாற்றுவதால் திருவிழாவுக்கு வரும் மக்கள் அங்கு வர மாட்டார்கள், அங்கு வரும் வாகனங்களால் விபத்துகள், நெரிசல் ஏற்படும் எனவும், அதனால் பொருட்காட்சியை தமுக்கம் மைதானத்திலேயே நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அதனால், தற்போது மாநகராட்சி நிர்வாகம் மாட்டுத்தாவணிக்கு சித்திரைப் பொருட்காட்சியை மாற்றும் திட்டத்தை கைவிட்டு, தமுக்கம் மைதானத்திலேயே நடத்த முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, ‘‘தமுக்கம், மாட்டுத்தாவணி உட்பட 3 இடங்களை தேர்வு செய்துள்ளோம். பொருட்காட்சி இடத்தை தேர்வு செய்ய சென்னையில் இருந்து அதிகாரிகள் வருகிறார்கள். அவர்கள் ஆலோசனையின்பேரில் பொருட்காட்சி நடக்கும் இடம் அறிவிக்கப்படும்’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE