சென்னை: கல்விக்கான திட்டங்கள் வரவேற்கத்தக்கவை: அதிகரிக்கும் கடன்சுமை கவலையளிக்கிறது என்று தமிழக அரசின் பட்ஜெட் குறித்து பாமக நிறுவனர் ச.ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழக அரசின் 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்திருக்கிறார். நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள சில திட்டங்கள் வரவேற்கத்தக்கவையாக இருந்தாலும் கூட, தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதற்கான சிறப்புத் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது.
பள்ளிக்கல்வித் துறை மற்றும் உயர்கல்வித் துறைக்காக அறிவிக்கப்பட்டுள்ள சில திட்டங்கள் மிகவும் வரவேற்கத்தக்கவையாகும். பள்ளிக்கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.32,599 கோடியிலிருந்து, ரூ.36,895 கோடியாக உயர்த்தப்பட்டிருப்பதும், அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக 5 ஆண்டுகளில் ரூ.7,000 கோடியில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப் படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதும் பயனளிக்கக் கூடியவை ஆகும். தனியார் பள்ளிகளில் பயின்று வந்த மாணவர்கள், அரசு பள்ளிகளுக்கு மாறி வரும் நிலையில், இது மிகவும் சரியான நடவடிக்கையாகும்.
ஒலிம்பிக் போட்டிகளுக்கு இளைஞர்களை தயார் செய்ய ரூ.25 கோடியில் சிறப்புத் திட்டம், வட சென்னை உள்ளிட்ட பல இடங்களில் விளையாட்டு வளாகம் அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளும் விளையாட்டு வளர்ச்சிக்கு வழிவகுக்கும். உயர்கல்வித் துறை சார்பில் அறிவுசார் நகரம் அமைக்கப்படும்; அதில் உலகப்புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களின் கிளைகள் அமைக்கப்படும்; அரசு கல்லூரிகள் ஐந்து ஆண்டுகளில் ரூ.1000 கோடியில் மேம்படுத்தப்படும் என்பன போன்ற அறிவிப்புகளும் வரவேற்கத்தக்கவை.
» தமிழக பட்ஜெட் 2022-23: வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள், வரையாடு பாதுகாப்புத் திட்டம் அறிவிப்பு
பெண்கள் குறைந்தபட்சம் பட்டப்படிப்பு படிப்பதை உறுதி செய்யும் வகையில், கல்லூரிகளில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 உதவி வழங்கப்படும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிழல் நிதிநிலை அறிக்கையில் அறிவித்திருந்தோம். அதே திட்டம் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையிலும் இடம்பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக மூவலூர் ராமாமிர்தம்மாள் திருமண உதவி திட்டத்தை ரத்து செய்தது ஏற்கத்தக்கதல்ல. ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு நிதி மற்றும் தங்கம் வழங்கும் அந்தத் திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டும்.
அதேநேரத்தில், சுகாதாரத் துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.18,933 கோடியிலிருந்து ரூ.17,901 கோடியாகவும், பொது விநியோகத் திட்டத்திற்கான மானியம் ரூ.8437 கோடியிலிருந்து ரூ.7500 கோடியாகவும் குறைக்கப்பட்டிருப்பது மக்களை கடுமையாகப் பாதிக்கும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு 2021-22ஆம் ஆண்டில் மத்திய, மாநில அரசுகளின் சார்பில் ரூ.10,025 கோடி செலவழிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் ஆண்டிற்கு மாநில அரசின் பங்காக ரூ.2,800 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பது போதுமானதல்ல. இத்திட்டத்தின்படி வேலை வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கை 150-ஆக உயர்த்தப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான அறிவிப்பு வெளியிடப்படாதது ஏமாற்றமளிக்கிறது.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி, மின் கட்டணத்தை மாதம் ஒருமுறை வசூலித்தல், தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு மட்டுமே வேலை வழங்குவதற்காக சட்டத்தை நிறைவேற்றுதல் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து எந்த அறிவிப்பும் இடம் பெறாதது வருத்தம் அளிக்கிறது. அரசுத்துறைகளில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும், 2 லட்சம் புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்படும் என்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவது உள்ளிட்ட வேலைவாய்ப்பு பெருக்கத்திற்காக எந்தத் திட்டமும் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்படாதது ஏமாற்றம் தருகிறது.
தமிழகத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பை நடப்பு பத்தாண்டின் நிறைவில் ரூ. 75 லட்சம் கோடியாக உயர்த்த தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், அதற்கான செயல்திட்டம் எதுவும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை. தமிழகத்தின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்வதற்கான அறிகுறிகள் தென்படாததும் கவலையளிக்கிறது. 2022-23-ஆம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.36,375 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், அது ரூ.52781 கோடியாக உயர்ந்துள்ளது. நடப்பாண்டில் நிதிப்பற்றாக்குறை 4.33% ஆக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், 4.61%ஆக அதிகரித்துள்ளது. 2022-23ஆம் ஆண்டில் நிதிப்பற்றாக்குறை 3.49% என கணிக்கப்பட்டிருந்த நிலையில், 3.80%ஆக அதிகரித்திருக்கிறது. இதை பொருளாதார மீட்சிக்கான அறிகுறியாக கருதமுடியாது.
தமிழக அரசு 2022-23 ஆம் ஆண்டில் ரூ.81,371 கோடி மட்டுமே கடன் வாங்க வேண்டியிருக்கும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது நிகரக் கடன் மதிப்பு ரூ.90,116 கோடியாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி 2023-ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் தமிழக அரசின் கடன் ரூ.6 லட்சத்து 53,348 கோடியாக அதிகரிக்கும் என்பதும் கவலையளிக்கிறது. தமிழக பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்த சிறப்புத் திட்டங்களை வகுத்து செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
தமிழகம்
27 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago