தமிழகத்தில் கஞ்சா விற்பனையை தடுக்கும் நடவடிக்கையாக ஆந்திராவுக்கே சென்று கைது செய்கிறோம்: தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தகவல்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க ஆந்திராவுக்கே சென்று குற்றவாளிகளை கைது செய்துள்ளோம் என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.

வேலூர் சரக டிஐஜி அலுவலகத்தில் குற்றத் தடுப்பு நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நேற்று ஆய்வு செய்தார். இதில், டிஐஜிஆனி விஜயா, மாவட்ட எஸ்பிக்கள் ராஜேஷ் கண்ணன் (வேலூர்), பவன்குமார் (தி.மலை), தீபாசத்யன் (ராணிப்பேட்டை), பாலகிருஷ்ணன் (திருப்பத்தூர்), அதிகாரிகள் பங்கேற்றனர். பின்னர்‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் டிஜிபி கூறியதாவது:

‘‘தமிழகத்தில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு செம்மரம் வெட்டச் செல்லும் தொழிலாளர்களை தடுப்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். ஆந்திர மாநிலத்தில் இருந்துதமிழ்நாட்டுக்கு கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்பு நடவடிக்கை எடுத்துள்ளோம். இதுவரை 15-க்கும் மேற்பட்ட முறைஆந்திராவுக்கே சென்று குற்றவாளிகளை கைது செய்து கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளோம். இங்குபிடிப்பதை விட கஞ்சா அனுப்பி வைக்கும் இடத்துக்கே சென்று பிடிக்கிறோம். நாங்கள் கொடுத்த தகவலில் ரூ.1,500 கோடி மதிப்புள்ள கஞ்சாவை அம்மாநில காவல்துறையினர் அழித்தனர். இதற்காக ஆந்திர மாநில டிஜிபியுடன் தமிழககாவல் துறை சார்பில் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE