110 அரங்குகளுடன் பொருநை நெல்லை புத்தகத் திருவிழா: பாளை. வ.உ.சி. மைதானத்தில் தொடக்கம்

பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் 110 அரங்குகளுடன் பொருநை நெல்லை புத்தகத் திருவிழா நேற்று தொடங்கியது.

திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில், பொருநை நெல்லை புத்தகத் திருவிழா-2022, பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் வரும் 27-ம் தேதி வரை 11 நாட்களுக்கு நடத்தப்படுகிறது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) சார்பில், 110-க்கும் மேற்பட்ட அரங்குகளில் முன்னணி புத்தகப் பதிப்பாளர்கள் புத்தகங்களை விற்பனைக்காக காட்சிப்படுத்தியுள்ளனர். கலை, இலக்கியம், சமூக நாவல்கள், வரலாற்று நாவல்கள், தன்னம்பிக்கை மற்றும் சுயமுன்னேற்றத்துக்கான புத்தகங்கள், போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள் போன்ற பல லட்சக்கணக்கான புத்தகங்கள் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீத தள்ளுபடி அளிக்கப்படுகிறது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நெகிழி இல்லா புத்தகத் திருவிழாவாக நடத்தப்படுகிறது. மேலும், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ‘நெல்லை நீர்வளம் - தூய பொருநை நெல்லைக்குப் பெருமை’ என்ற தலைப்பில் அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

புத்தகக் கண்காட்சி நடைபெறும் வ.உ.சி. மைதானத்தின் உள்விளையாட்டு அரங்கில் தொல்லியல்துறை சார்பில் பொருநை ஆற்றங்கரை நாகரிகத்தை விளக்கும் தொல்பொருட்கள் கண்காட்சி நடத்தப்படுகிறது. இங்கு கொற்கை, சிவகளை, ஆதிச்சநல்லூர் பகுதிகளில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் சேகரிக்கப்பட்ட தொல் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. மற்றொரு பகுதியில் வனத்துறை சார்பில் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது.

இப்புத்தகத் திருவிழாவை தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு தலைமை வகித்தார். எம்எல்ஏக்கள் அப்துல்வகாப், ரூபி மனோகரன், மாநகராட்சி மேயர் பி.எம். சரவணன், துணை மேயர் கே.ஆர். ராஜு, மாவட்ட ஊராட்சித் தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புத்தகக் கண்காட்சி நடைபெறும் நாட்களில் தினமும் நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள், கவியரங்கம், பட்டிமன்றம், தலைசிறந்த பேச்சாளர்களின் சிறப்புரைகள் நடைபெறுகின்றன. பாரம்பரிய உணவுகளை விற்பனை செய்ய உணவகங்களும் அமைக்கப் பட்டிருக்கின்றன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் பகல் நேரங்களில் புத்தகக் கண்காட்சியை பார்வையிடவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE