நகைக்கடன் தள்ளுபடியில் திமுக அரசின் நிலைபாடு என்ன? - தெளிவுபடுத்த தினகரன் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: "நகைக்கடன் தள்ளுபடியில் அரசின் நிலைபாடு என்ன என்பதை தெளிவாக அறிவிக்க வேண்டும்" என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நகைக்கடன் தள்ளுபடியில் உண்மை நிலை என்ன என்பது குறித்து திமுக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். 5 பவுன் வரை கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட அனைத்து நகைக்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்ற கவர்ச்சியாக அறிவித்த திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதனைச் செயல்படுத்தாமல் புதுப்புது நிபந்தனைகளைப் போட திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின்றன.

இதனால், 5 பவுன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி என்பதில் திமுக அரசு நம்பிக்கை துரோகத்தை அரங்கேற்ற திட்டமிட்டிருக்கிறதோ என்ற சந்தேகம் மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது.

எனவே, நகைக்கடன் தள்ளுபடியில் அரசின் நிலைபாடு என்ன என்பதை தெளிவாக அறிவிக்க வேண்டும். மேலும், தள்ளுபடி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் காத்திருப்போருக்கு 'நகையை மீட்காவிட்டால் ஏலம் விடப்படும்' என நோட்டீஸ் அனுப்புவதையும் உடனடியாக நிறுத்தவேண்டும்'' என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE