சென்னை: விதிகளை மீறி தனியார் நிறுவனத்துக்கு, ரூ.4,442 கோடி மதிப்பிலான திட்டத்தை மின் வாரியம் ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக சென்னையில் அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2019 டிசம்பர் மாதம் எண்ணூர் அனல் மின் நிலையத்தில் ரூ.4,442 கோடி மதிப்பிலான திட்டத்தை செயல்படுத்து தொடர்பாக, தனியார் நிறுவனத்துக்கு மின் வாரியம் முதல்கட்ட ஒதுக்கீடு கடிதம் கொடுத்துள்ளது.
ஆனால், அந்த நிறுவனம் ரூ.440 கோடி வங்கி உத்தரவாதம் கொடுக்க முடியாததால், அத்திட்டத்தை மின் வாரியம் ரத்து செய்தது.குறிப்பிட்ட அந்த நிறுவனம் ரூ.355 கோடி நஷ்டத்தில் இயங்கக் கூடிய நிறுவனமாகும். எந்த சொத்தும் இல்லாத நிறுவனம். கடந்த 5 ஆண்டுகளாக லாபம் ஈட்டவில்லை. முந்தைய திமுக ஆட்சியிலும் மேட்டூர் அனல் மின் நிலைய ஒப்பந்தம் அந்த நிறுவனத்துக்கே வழங்கப்பட்டது. சிஏஜி ஆய்வு செய்து, அந்த நிறுவனத்தால் ரூ.72 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் 2016-ல் தெரிவித்தது. இதுமட்டுமின்றி, மேட்டூர் அனல் மின் நிலைய 2-வது திட்டத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இருந்து ரூ.2,878 கோடி நஷ்டஈடு வசூல் செய்ய வேண்டும் என்றும் சிஏஜி கூறியது.
இந்த நிறுவனத்துக்குதான் தற்போது ரூ.4,442 கோடி மதிப்பிலான திட்டத்தை முறைகேடாக ஒதுக்கீடு செய்துள்ளனர். முந்தைய ஆண்டுகளில் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் நிராகரிக்கப்பட்ட பட்டியலில் வைக்கப்பட்ட தனியார் நிறுவனம், திடீரென புனிதமானது எப்படி? பாஜக தொடர்ந்து போராடும் இந்த திட்டத்தில் மத்திய அரசு பணம் இருப்பதால் சிஏஜி, செபிக்கு கடிதம் எழுதி, தனியார் நிறுவனம் குறித்து விசாரிக்குமாறு வலியுறுத்துவோம்.
இந்த முறைகேடுகளை முறியடிக்கும்வரை பாஜக தொடர்ந்து போராடும். உண்மையான கார்ப்பரேட் அரசு, திமுக அரசுதான். பிரதமர் மோடியைப் பற்றிப் பேச திமுகவினருக்கு எந்த தகுதியும் இல்லை. நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விரைவில் விலக்கு கிடைக்கும் என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். நீட் விலக்கு மசோதா ஏற்கெனவே குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட ஒன்று. இரண்டாம் முறை மசோதா சென்றுள்ள நிலையில், அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதுதான் ஆளுநரின் கடமை. அவரும் அதைத்தான் சொல்லியிருக்கிறார்.
இதில் புதிதாகக் கூற எதுவுமில்லை. இவ்வாறு அண்ணாமலை கூறினார். அமைச்சர் விளக்கம் இந்த விவகாரம் தொடர்பாக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த திட்டம் முந்தைய திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டாலும், கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் பணிகள் முடிவு பெறாமல் நிலுவையில் இருந்தன. திமுக அரசு அறிவித்த 500 மெகாவாட் மின் உற்பத்தி திட்டத்தை அப்படியே செயல்படுத்தாமல், திட்ட மதிப்பீட்டை உயர்த்தி, புதிய திட்டமாக செயல்படுத்த அதிமுக முடிவு செய்தது. எனினும், 18 சதவீத பணிகள் மட்டுமே நடைபெற்றன. எஞ்சிய பணிக்கான ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டு, 2018-ல் மீண்டும் டெண்டர் விடப்பட்டது. டெபாசிட் தொகையை 10 சதவீதம் குறைத்து, குறிப்பிட்ட நிறுவனத்துக்கு மின் வாரியம் சலுகைக் காட்டி உள்ளதாக தோற்றத்தை உருவாக்கி இருக்கின்றார்.
2020-ம் ஆண்டு மத்திய அரசின் சுற்றறிக்கையில் குறிப்பிட்ட 3 சதவீத வைப்புத் தொகைதான் நிர்ணயிக்கப்பட்டது. தமிழக அரசு வழிகாட்டி விதிமுறைகளில் 5 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அதிமுக அரசு 10 சதவீதம் என வைப்புத்தொகையை நிர்ணயித்தது. இந்தப் பிரச்சினையால்தான் கடந்த 2 ஆண்டுகளாக திட்டம் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வந்தது. 2019-ல் பணிகளை முடிக்கும் போது ரூ.4,442 கோடி செலவானது.
அப்போது என்ன மதிப்பீடுகள் செய்யப்பட்டதோ, 3 ஆண்டுகளுக்குப் பிறகும் தற்போது அதே மதிப்பீட்டில்தான் அவர்களுக்கு பணிகள் வழங்கப்பட்டுள்ளன. சட்டப்படி நடவடிக்கை எனவே, அண்ணாமலை தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து 24 மணி நேரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும். இல்லையெனில் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு செந்தில் பாலாஜி கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago