சேலம்: 3 பேரூராட்சிகளில் மறைமுகத் தேர்தலின்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகளை தாக்கல் செய்ய உத்தரவு

சேலம் மாவட்டத்தில் உள்ள 3 பேரூராட்சிகளில் மறைமுகத்தேர்தலின்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ மற்றும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள வனவாசி, நங்கவள்ளி, பேளூர், காடையாம்பட்டி ஆகிய பேரூராட்சிகளில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலுக்கான மறைமுகத் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதை எதிர்த்து அதிமுக கவுன்சிலர்கள் உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக 4 வழக்குகளைத் தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகள் மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.

அப்போது மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் காடையாம்பட்டி பேரூராட்சிக் கான மறைமுகத் தேர்தலில் போதிய எண்ணிக்கையில் உறுப்பினர்கள் கலந்துகொள்ள வில்லை என்பதால் அந்த தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. மற்ற 3 பேரூராட்சிகளில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டதால் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த 4 பேரூராட்சிகளுக்கும் வரும் 26-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், காடையாம்பட்டி பேரூராட்சிக் கான மறைமுகத் தேர்தலை நடத்தலாம் எனவும், அதற்கு போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டு அந்த வழக்கை முடித்து வைத்தனர்.

மற்ற 3 பேரூராட்சிகளில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்பட என்ன காரணம் என்பதை மாநில தேர்தல் ஆணையம் விளக்கவும், கடந்த மார்ச் 4 அன்று மறைமுகத்தேர்தல் நடந்தபோது பதிவு செய்யப்பட்ட வீடியோ மற்றும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை தாக்கல் செய்ய வேண்டும், என உத்தரவிட்டு விசாரணையை வரும் மார்ச் 28-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE