தகுதி உள்ளோருக்கும் முதியோர் ஓய்வூதிய உதவித் தொகை நிறுத்தம்: உதயகுமார் குற்றச்சாட்டு

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: "தகுதி உள்ளவர்களுக்கும் முதியோர் ஒய்வூதிய உதவித் தொகை நிறுத்தப்பட்டுள்ளது" என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியது: "ஏழை, எளிய சாமானிய மற்றும் ஆதரவற்றோர்களுக்காக முதியோர் ஓய்வூதிய உதவித் தொகைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது . இதில், இலங்கை தமிழர்கள் உட்பட 9 பிரிவினருக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது .

ஆரம்பத்தில் ரூ.200 வழங்கப்பட்டு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த 2011-ம் ஆண்டு ரூ.500 ஆக வழங்கப்பட்டு வந்த முதியோர் ஓய்வூதிய உதவித் தொகையை ரூ.1000 ஆக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது ஆட்சிக் காலத்தில் உயர்த்தி வழங்கினார்.

தற்போது ஆட்சியில் உள்ள திமுக அரசு தகுதியுள்ள ஏழை, எளிய மக்கள் பெற்று வந்த முதியோர் உதவித் தொகையை காரணம் இல்லாமல் நிறுத்தி வருகிறது. கடந்த 10 வருடங்களாக உதவித் தொகை பெற்று வந்தவர்களுக்கு, தற்போது உதவித் தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, கடந்த திமுக தேர்தல் அறிக்கையில், முதியோர் உதவித் தொகையை உயர்த்தி வழங்குவோம் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு, தற்போது அதனை ரத்து செய்திருப்பது மிகவும் கவலையளிப்பதாக உள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE