திமுக ஆட்சியில் அமளிப் பூங்காவாக மாறியிருக்கிறது தமிழகம்: ஜெயக்குமார் விமர்சனம்

திருச்சி: "அமைதிப் பூங்காவாக இருந்த தமிழகம், திமுக ஆட்சியில் அமளிப் பூங்காவாக மாறியுள்ளது" என்றார் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்.

உயர் நீதிமன்றம் விதித்த நிபந்தனையின்படி, திருச்சியில் தங்கியிருந்து கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் இன்று 2-வது முறையாக அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆஜராகி கையெழுத்திட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: "தேர்தலின்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அதிமுக முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் முன்னோடிகள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்து, அதிமுகவை ஒழித்துவிடலாம் என்ற இறுமாப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

ஆட்சிக்கு வந்து 9 மாதங்களாகியும் மக்களுக்கான எந்தவித அடிப்படைத் தேவைகளையும் நிறைவேற்றவில்லை. அதிமுக ஆட்சிக் காலத்தில் திருச்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு ரூ.1,000 கோடிக்கு அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டு தொடங்கப்பட்ட பணிகள் தற்போது நத்தை வேகத்திலேயே நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு கெட்டுவிட்டது. மக்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாத அரசாக உள்ளது. ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அமைதிப் பூங்காவாக திகழ்ந்த தமிழகம், தற்போது அமளிப் பூங்காவாக திகழ்கிறது. ஆட்சியில் உள்ளவர்கள் மக்களின் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும். ஆனால், கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்வதையே நோக்கமாக வைத்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், ஒரு பைசாவைக்கூட கைப்பற்றாத நிலையில், அதிமுகவின் பெயருக்கு கேடு விளைவிக்கும் நோக்கில் நகை, பணம் கைப்பற்றப்பட்டதாக விஷமத்தனமான பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். ஆனால், நாங்கள் நீதிமன்றத்தில் நீதியை நிலைநாட்டுவோம்.

இப்போது நடைபெறுவது கவுரவர்கள் ஆட்சி. இவர்கள் தற்காலிகமாக வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், இறுதி வெற்றி பாண்டவர்களுக்குத்தான் கிடைக்கும். சிறந்த முதல்வர் என்று தனக்குத் தானே மகுடம், பட்டம் சூட்டிக் கொள்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். சிறந்த முதல்வர் என்று கூறுவது இந்த நூற்றாண்டின் சிறந்த ஜோக்” என்றார். அப்போது, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மு.பரஞ்ஜோதி, வெல்லமண்டி என்.நடராஜன், எஸ்.வளர்மதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE