கேரளாவின் சதியை முறியடித்து பெரியாறு அணையில் 152 அடி தண்ணீரை தேக்க வேண்டும்: பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்

அனைத்து சட்ட உரிமைகளும் கிடைத்த பிறகும் பெரியாறு அணையில் 152 அடி தண்ணீரை தேக்க இடையூறாக உள்ள கேரளாவின் சதிச் செயலை தமிழக அரசு முறியடிக்க வேண்டும் என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தி உள்ளார்.

பெரியாறு அணை உரிமையை மீட்டெடுக்க வலியுறுத்தி 6 மாவட்ட பாசன விவசாய சங்கத்தினர் மதுரை பழங்காநத்தத்தில் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர். இதற்கு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை வகித்து பேசியதாவது:

பெரியாறு அணையில் 142 அடி தண்ணீரை தேக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதன்படி பலமுறை தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் 152 அடி தண்ணீரை தேக்க பேபி அணையை வலுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளவும் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 999 ஆண்டு ஒப்பந்தமும் நம்மிடம் உள்ளது. இவ்வாறு அனைத்து சட்ட உரிமைகளும் நம்மிடம் உள்ளபோதும் கேரளா தொடர்ந்து சதி செய்து பணிகளை தடுக்கிறது.

தமிழக அரசு வேகம், விவேகத்துடன் செயல்பட்டு கேரளாவின் சதியை முறியடித்து 152 அடி தண்ணீரை தேக்கி சாதிக்க வேண்டும். அப்போதுதான் 6 மாவட்ட விவசாயம், குடிநீர் உரிமை பாதுகாக்கப்படும். கேரளாவின் சதி வெற்றி பெற்றால் 6 மாவட்டங்கள் மயான பூமியாக மாறிவிடும்.

இந்த நிலையை தவிர்க்க பெரியாறு, வைகை பாசன விவசாயிகளுடன் இணைந்து எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக உள்ளோம். தமிழக அரசு மிகுந்த விழிப்புடன் கேரளாவை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும் என்றார்.

இதில் விவசாய சங்க நிர்வாகிகள் அப்பாஸ், எம்.முத்துராமலிங்கம், எஸ்.ஆதிமூலம், ஆர்.உதயகுமார், பொன்.மணிகண்டன், முன்னாள் எம்எல்ஏ. பி.வி.கதிரவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE