கடையநல்லூர் அருகே 2-வது நாளாக மேற்குத் தொடர்ச்சி மலையில் காட்டுத் தீ

By செய்திப்பிரிவு

கடையநல்லூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் ஏற்பட்ட தீயை அணைக்க 2-வது நாளாக வனத் துறையினர் போராடி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் ஏராளமான அரியவகை மூலிகைகள், மரங்கள் உள்ளன. வனப்பகுதியில் யானை, மான், மிளா, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் வசிக்கின்றன. கடந்த ஒரு மாதமாக போதிய மழையின்றி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், புற்கள் காய்ந்தும், மரங்களில் இலைகள் உதிர்ந்தும் சருகுகள் பரவிக் கிடக்கின்றன.

இந்நிலையில், நேற்று முன்தினம் மேற்குத் தொடர்ச்சி மலையில் கடையநல்லூர் வனச்சரகம் வெள்ளக்கல்தேரி பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டது. கோடை வெப்பம் காரணமாக காய்ந்த சருகுகளில் தீ மளமள வென வேகமாக பரவியது. கடையநல்லூர் வனச்சரகர் சுரேஷ் மேற்பார்வையில் தீயை அணைக்க 30-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் விரைந்தனர். உடனடியாக சமூக வலைதளங்கள் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து 15-க்கும் மேற்பட்ட தன்னார் வலர்களும் வனத்துறையினருடன் தீயை அணைக்க விரைந்தனர்.

தீயணைப்புத் துறை வாகனம் செல்ல முடியாத காட்டுப் பகுதி என்பதால், மரக்கிளைகளை வெட்டி அவற்றைக் கொண்டு அடித்து தீ பரவாமல் கட்டுப்படுத்தினர். நேற்று அருகில் உள்ள வடகரை பகுதியில் தீ பரவியது. இரண்டாவது நாளாக வனத்துறையினர் தன்னார்வலர் களுடன் இணைந்து இரவு, பகலாக பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் ஏராளமான தாவரங்கள் எரிந்து சாம்பலானதாகக் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE