பாகாயம் காவல் துறையினரை கண்டித்து வேலூர் சிறையில் முருகன் திடீர் போராட்டம்: சிறை அதிகாரிகள் சமாதானம் செய்தனர்

By செய்திப்பிரிவு

பாகாயம் காவல் துறையினர் தன் மீதான வழக்கை காலதாமதம் செய்வதற்காக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இருப்பதாகக்கூறி முருகன் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகன், வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் உயர் பாதுகாப்பு தொகுதியில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது அறையில் கடந்த 2019-ம் ஆண்டு நடத்தப்பட்ட திடீர் சோதனையில் சிம்கார்டு, செல்போன் சார்ஜர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பான வழக்கும், சிறையில் இருந்தபடி சிறப்பு சலுகையை பயன்படுத்தி வாட்ஸ்-அப் வீடியோ அழைப்பு மூலம் வெளிநாடுகளில் உள்ள உறவினர்களிடம் பேசிய வழக்கும் பாகாயம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு வழக்கின் விசார ணையும் வேலூர் முதலாவது மாஜிஸ்திரேட் முகிலாம்பிகை முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், முருகனின் மனைவி நளினி பரோலில் விடுவிக்கப்பட்டு காட்பாடியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். இதையடுத்து, முருகனும் பரோல் கோரியுள்ள நிலையில் நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கின் காரணமாக முடிவு எடுக்கப்படாமல் உள்ளது. எனவே, இரண்டு வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. அதேநேரம், வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் முருகனின் அறையில் நடத்தப்பட்ட திடீர் சோதனை ஒன்றில் பெண் அதிகாரி ஒருவரிடம், முருகன் அறுவறுக்கத்தக்க வகையில் நடந்துகொண்டதாக கூறி ஒரு வழக்கு பாகாயம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை இதுவரை நடைபெறாமல் உள்ளது.

இந்நிலையில், ஆண்கள் மத்திய சிறையில் நேற்று காலை வழங்கப்பட்ட உணவை சாப்பிடாமல் முருகன் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்த தகவலின்பேரில் சிறை அதிகாரிகள், முருகனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பாகாயம் காவல் துறையினர் தன் மீதான ஒரு வழக்கில் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் காலம் கடத்துகின்றனர். இதனால், தனது பரோல் மனு தள்ளிப்போகிறது என தெரிவித்துள்ளார். அவரை, அதிகாரிகள் சமாதானம் செய்ததுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து காலை உணவை சாப்பிட வைத்தனர்.

‘‘முருகனின் அறையில் சிம் கார்டு பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. வாட்ஸ்-அப் அழைப்பு வழக்கின் விசாரணை மட்டும் நடைபெற்று வருவதால் இதிலும் ஜாமீன் பெற வேண்டியுள்ளது. மூன்றாவது வழக்கிலும் ஜாமீன் கிடைத்தால் மட்டுமே முருகனின் பரோல் மனு மீது இறுதி முடிவு எடுக்கப்படும்’’ என சிறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக காவல் துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘நிலுவை வழக்கின் நிலை குறித்தும், முருகனின் கோரிக்கை குறித்தும் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, முருகன் மீதான நிலுவை வழக்கின் குற்றப்பத்திரிகை மாஜிஸ்திரேட்டிடம் இன்று (செவ்வாய்க்கிழமை) தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு தொடர்பாக பதிவு எண் வெளியிடப்பட்டு விரைவில் விசாரணையும் நடைபெறும்’’ என தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE