ரவுடி வெள்ளைக்காளியை என்கவுண்டரில் கொல்ல சதி: உயர் நீதிமன்ற கிளையில் மனைவி வழக்கு

By செய்திப்பிரிவு

ரவுடி வெள்ளைக்காளியை என்கவுண்டரில் கொல்லக் கூடாது என உத்தரவிடக்கோரிய வழக்கில் டிஜிபி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை காமராஜபுரத்தை சேர்ந்தவர் வெள்ளை காளி (எ) காளிமுத்து. இவரது மனைவி திவ்யா, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

எனுது கணவரின் சகோதரர் சின்னமுனுசு, 2004-ல் வி.கே.குருசாமியின் ஆட்களால் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து இரு குடும்பங்களுக்கு இடையே பல்வேறு மோதல் சம்பவங்கள் நடந்தன. இது தொடர்பாக போலீஸார் இரு தரப்பினர் மீதும் பல வழக்குகளை பதிவு செய்தனர். பல வழக்குகளில் எனது கணவரை போலீஸார் பொய்யாக சேர்த்தனர்.

குற்றாலத்தில் 2020-ல் சந்தேகத்தின் பேரில் எனது கணவரை கைது செய்து அவரது வலது காலை இரும்புக் கம்பியால் தாக்கி உடைத்தனர். எனது கணவர் கடந்த ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக விசாரணைக் கைதியாக திருச்சி சிறையில் இருந்து வருகிறார்.

கணவரை வழக்கு விசாரணைக்காக அடிக்கடி திருச்சியிலிருந்து மதுரை நீதிமன்றங்களுக்கு போலீஸார் அழைத்து வருகின்றனர். கடந்த முறை திருமங்கலம் நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தபோது உன்னை (கணவரை) என்கவுண்டரில் கொலை செய்தால் ரூ.50 லட்சம் தருவதாக வி.கே.குருசாமி தெரிவித்ததாக பொன்மலை காவல் ஆய்வாளர் என் கணவரிடம் கூறியுள்ளார்.

இது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எனது கணவரை போலி என்கவுண்டர் செய்யக்கூடாது என உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக டிஜிபி, திருச்சி, மதுரை மாநகர் காவல் ஆணையர்கள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஏப்.11-ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE