'இட ஒதுக்கீடு வழங்கவே சாதி கேட்கப்படுகிறது; தவறான பிரச்சாரம் வேண்டாம்' - வீரமணி

By செய்திப்பிரிவு

சென்னை: பள்ளிகளில் இட ஒதுக்கீடுக்காகத்தான் எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி பிரிவுகள் விவரம் கேட்கப்படுகிறது, எனவே பள்ளிகளில் சாதிகள் பற்றிய விவரம் கேட்கப்படுவதாக தவறானப் பிரச்சாரம் வேண்டாம் என திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் ஜாதி விவரக் கணக்கெடுப்பு நடத்துவது குறித்து நேற்று (13.3.2022) வெளியான செய்திக்கு பள்ளிக் கல்வித் துறை ஆணையர் திரு.நந்தகுமார் அவர்கள் நேற்றிரவு அளித்த ஒரு சுற்றறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.

அந்த சுற்றறிக்கையில், ''பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் பட்டியல் வகுப்பினரா, பிற்படுத்தப்பட்டவரா, சிறுபான்மையினரா, முன்னேறிய வகுப்பினரா என்று மட்டுமே கேட்கப்பட்டிருந்தது. சாதியைக் கேட்கவில்லை; சாதி சார்ந்த பிரிவுதான் கேட்கப்பட்டது. ஒரு மாணவர் எந்தப் பிரிவைச் சார்ந்தவர் என்பதுதான் தமிழ்நாடு அரசுக்குத் தேவை. மாணவர்கள் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் இருந்தால்தான், நலத்திட்டங்களைப் பயன்படுத்த முடியும். இது நீண்ட காலமாகப் பின்பற்றப்படும் நடைமுறை; புதிய செயலியில் இதை எளிதில் பதிவேற்ற முடியும்.

மாணவர் பள்ளியில் சேர்ந்தால், இந்த செயலியில் அவரது ஜாதி எங்குமே சேமிக்கப்படுவதில்லை; அவர் ஜாதி சார்ந்த பிரிவுதான் பதிவாகும். அவர்கள் இட ஒதுக்கீடு பெற இந்த அடிப்படைத் தகவல் தேவை'' என்று தெளிவுபடுத்தியுள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால், பள்ளிச் சான்றிதழில் சாதிப் பிரிவு குறிப்பது எஸ்.எஸ்.எல்.சி., சான்றிதழில் முன்பெல்லாம் சாதி பதிவாகும். அதுதான் கடைசிவரை இட ஒதுக்கீடு, உதவித் தொகை (ஸ்காலர்ஷிப்) பணித் தேர்வுகளின் இறுதிவரை எடுத்துக்கொள்ளப்படும் ஆவணம் ஆகும். பள்ளிச் சான்றிதழ்தான் சரியான ஆவணம்.

'பள்ளிகளில் ஜாதியைக் கேட்கலாமா?' சில மாணவர்கள், பெற்றோர்கள் ஜாதிகள் இல்லை - கூடாது என்று கூறுவோரே, ''பள்ளிகளில் ஜாதியைக் கேட்கலாமா?'' என்று ஒரு வழமையான கேள்வியை ஜாதி ஒழிப்பாளர்களாகவும், சமூகநீதிப் போராளிகளாகவும் உள்ளவர்களை நோக்கி அடிக்கடி கேட்பதுண்டு. அப்படி கேட்போர் இரு வகையினர்; ஒரு சாரார், சாதி ஒழிப்பு ஆர்வத்தினர் உண்மையாக; மற்றொரு சாரார், இட ஒதுக்கீடு எதிர்ப்பாளர்கள். அவர்கள் ஜாதியை மற்ற எல்லாவற்றிலும் கடைப்பிடித்துக்கொண்டே இப்படி ஏதோ பெரிய சாதி ஒழிப்பு வீரர்கள்போல வேடங்கட்டிக் கொண்டு கேட்பதுண்டு. அதற்குப் பதில் பெரியார் கூட கூறியுள்ளார். விஷக் கிருமிகளை ஒழிக்க மருந்தில் விஷம் சேர்க்கப்படவில்லையா? ''கொடிய நோய் ஒழிப்புக்கான மருந்தில் (ஆண்டி பயாடிக்) எப்படி கிருமிகளைக் கொல்ல விஷம் என்பதை அளவோடு கலந்துகொடுக்க அனுமதிக்கப்படுகிறதோ, அதுபோல'' என்பதே அப்பதில். அம்மை நோயை ஒழிப்பதற்கு அம்மைக் கிருமியையே நம் உடலில் செலுத்தி, அதனை எதிர்த்து அழிக்க அக்கிருமியே போர் வீரர்களாகும் உத்தி போன்ற ஆய்வு ஆகும் என்பதே சரியான விளக்கமான பதில். பள்ளிக் கல்வித் துறையின் இந்தக் கணக்கெடுப்புப் பதிவுக்கான முயற்சிகளில் ஜாதிப் பிரிவும் - உட்பிரிவும் இணைந்தால்தான் இட ஒதுக்கீட்டிற்குச் சரியான வாய்ப்பு ஏற்படும்;

அதற்காக கூச்சப்படவோ, தயக்கம் காட்டவோ அரசு பள்ளிக் கல்வித் துறை அஞ்சத் தேவையில்லை என்பதே நம்மைப் போன்ற சமூக நீதியாளர்களின் உறுதியான கருத்து.

இடஒதுக்கீட்டுக்காக சாதி பற்றிய விவரம் இன்று அவசியத் தேவை: காரணம், இட ஒதுக்கீடு தருவதில் இப்போது பல பிரிவுகளும், உட்பிரிவுகளும் உள்ளன. உதாரணமாக முன்பு எஸ்.சி., எஸ்.டி., ஒன்றாக இருந்தது; பிறகு உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தனியாகப் பிரிக்கப்பட்டது. அதுபோலவே, கருணாநிதி ஆட்சிக் காலத்தில் பிற்படுத்தப்பட்டவர்கள் (பி.சி.,), மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் (எம்.பி.சி.,) இட ஒதுக்கீடு, அத்துடன் அருந்ததியர் இட ஒதுக்கீடு, அண்மையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்நோக்கியுள்ள வன்னியர், மற்ற சில ஜாதிகளுக்கான இட ஒதுக்கீடு மற்றும் சிறுபான்மை இஸ்லாமியர் பிரிவு இட ஒதுக்கீடு என்று பல்வேறு பிரிவுகளின்கீழ் இட ஒதுக்கீடு தரவேண்டியுள்ளதால், ஜாதியும், உட்பிரிவும் கேட்டு பெற்றோர்களின் உறுதிமொழியுடன் சான்றிதழ் இணைப்பது அல்லது பதிவிடுதல் மிகவும் சரியான முறையாகும்! கேட்கப்படுவது ஜாதி அல்ல - சாதிப் பிரிவு: சில ஆண்டுகளுக்குப் பிறகு இதையே Base Line ஆக்கித், தனிப்பட்ட ஜாதியைக் கேட்காமல், அவர் சார்ந்த பிரிவு எஸ்.சி., எஸ்.டி., பி.சி., எம்.பி.சி., போன்று மட்டும் பிரிக்கும் நிலையை ஓர் இலக்காக வைத்து, அதை நோக்கி நகருவது கலப்பு மண இணையர்களுக்கு I.C. (Inter Caste Quota) கோட்டா ஒதுக்கீடு தந்து, உயர்த்துவது என்ற திட்டங்களை செயல்படுத்துவதற்கு முன்பு- இது இன்று அவசியத் தேவை.

சாதி இருக்கிறது என்பது யதார்த்தம் - நடைமுறை உண்மை. சாத் திருமண ஏற்பாடு விளம்பரங்களே தக்க சான்று; 'ஆவணி அவிட்டம்' - பூணூல் மாற்றுவது என்பது இருக்கிறதே! 'அவர்கள்' ஜாதியை விட்டுவிட்டார்களா?

தயக்கமில்லாமல் ஜாதி - தனிப்பிரிவு தேவையே!: எனவே, சாதி ஒழிப்பு இலக்கு என்றாலும், அது முழுமை அடைய, அனைவருக்கும் அனைத்தும் வழங்கிட, ஆதார சான்றுகளாக பள்ளிக் கல்விச் சான்று சரியான ஆவணம். மக்கள் தொகைக் கணக்கெடுப்பில்கூட, ஊதிப் பெருக்கப்பட்ட சாதிகள் எண்ணிக்கை வரும் அபாயம் உண்டு. ஆனால், இந்த முறையில், அதற்கு வழியேயில்லை. மொத்த எண்ணிக்கையைக்கூட துல்லியமாக கண்டறிய இது சிறந்த முறையாகவே கருதப்படும். எனவே தயக்கமில்லாமல் சாதி - தனிப்பிரிவு (அதாவது எஸ்.சி., எஸ்.டி., பி.சி., எம்.பி.சி., எஃப்.சி.,) இப்படி தர ஏற்பாடு செய்யுங்கள். பதிவு செய்யுங்கள்'' என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்