கரோனாவை முழுமையாகக் கட்டுப்படுத்திய மாநிலமாக தமிழகம் விளங்குகிறது: முதல்வர் ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

சென்னை: இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவிலேயே கரோனாவை இன்றைக்கு முழுமையாகக் கட்டுப்படுத்தியிருக்கும் மாநிலமாகத் தமிழகம் விளங்கிக் கொண்டிருக்கிறது என்று கட்சி நிர்வாகி திருமண விழாவில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், கட்சி நிர்வாகி புழல் எம்.நாராயணன் இல்ல திருமண விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு தலைமையேற்று திருமணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்திவைத்தார்.

பின்னர் முதல்வர் பேசுகையில், "அண்மையில் நடைபெற்றிருக்கும் உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலில் ஒரு மிகப்பெரிய வெற்றியை, வரலாற்றில் பதிவாக வேண்டிய ஒரு மிகப்பெரிய வெற்றியை, இதுவரையில் நாம் இப்படிப்பட்ட வெற்றியைப் பார்த்ததில்லை. 100-க்கு 99 சதவீதம் இந்த உள்ளாட்சித் தேர்தலில் நாம் ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறோம். எனவே வெற்றி பெற்றிருக்கும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இதை மனதில் வைத்துக் கொண்டு தங்களுடைய கடமையை நிறைவேற்றிட வேண்டும். நம்மீது மக்களுக்கு எந்த அளவிற்கு நம்பிக்கை இருக்கிறது என்பதற்கு இந்த வெற்றிதான் நமக்கு சாட்சியாக அமைந்திருக்கிறது.

நாம் எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி, தொடர்ந்து மக்களுக்காக பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். பாடுபட்டுக் கொண்டிருக்கும், கடமையை நிறைவேற்றி கொண்டிருக்கிறோம். கடந்த காலத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலை நடத்தாத காரணத்தால்தான் மக்கள் பல துன்பங்களுக்கும், இன்னல்களுக்கும் ஆளாக்கப்பட்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அதனால்தான் நாம் எதிர்க்கட்சியாக இருந்த நேரத்தில் கிராமம் கிராமமாக சென்றோம். கிராமசபைக் கூட்டங்களை நடத்தினோம். மக்கள் சபைக் கூட்டங்களை நடத்தினோம். தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படக் கூடாது என்று தமிழகம் முழுவதும் இருக்கும் எல்லா மாவட்டத்திற்கும் சென்று, எல்லா கிராமப் பகுதிகளுக்கும் சென்று நீர்நிலைகளைத் தூர்வாரினோம்.

எதிர்க்கட்சியாக இருந்திருந்தாலும் திமுகதான் ஆட்சியில் இருக்கிறது என்று மக்கள் உணரும் வகையில் நாம் அந்தப் பணியை தொடர்ந்து நிறைவேற்றினோம். புயல் - வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது முதலில் ஓடிச் சென்று மக்களுக்கு பணியாற்றக்கூடியவன்தான் திமுக தொண்டன்.இவ்வாறு மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றக்கூடிய காரணத்தால்தான் நம்மீது சொல்லப்படும் பொய்ப் பிரச்சாரங்கள், அவதூறுகளை எல்லாம் முறியடித்து இன்றைக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறோம்.

மக்கள் நம்மீது நம்பிக்கை வைத்து இந்த வெற்றியை நமக்கு வழங்கியிருக்கிறார்கள். நமக்கென்று ஏதாவது ஆபத்து என்று சொன்னால் உடனடியாக ஓடி வருபவன்தான் திமுககாரன் என்பதை மக்கள் உணர்ந்த காரணத்தால்தான் இன்றைக்கு மிகப்பெரிய வெற்றி நமக்குக் கிடைத்திருக்கிறது.

இன்னொன்றையும் நான் இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்று சொன்னால், ஏறக்குறைய இரண்டாண்டு காலமாக கரோனா என்ற ஒரு கொடிய தொற்றில் சிக்கி நான் மட்டுமல்ல நாடே இன்றைக்கு அதில் தவித்துக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட அந்தக் கரோனா காலக்கட்டத்தில் நாம் எதிர்க்கட்சியாக இருந்தோம். எதிர்க்கட்சியாக இருந்த நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்கிற முறையில் தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த அதிமுக ஆட்சியில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒரு வேண்டுகோள் வைத்தோம்.

உடனடியாக அரசியலை பார்க்காமல், அரசியல் நோக்கத்தோடு இதைக் கருதாமல் அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டுங்கள். இதை எவ்வாறு சமாளிப்பது என்று யோசியுங்கள் , சிந்தியுங்கள், உரிய நடவடிக்கை எடுங்கள் என்று சொன்னால், அங்கிருந்து என்ன பதில் வந்தது என்று கேட்டால், “நீங்கள் என்ன டாக்டரா?” என்று திருப்பி நம்மைப் பார்த்து கேட்டார்.

அதற்கு நான் ஒரே ஒரு விளக்கத்தைச் சொல்ல வேண்டுமென்று சொன்னால், நாம் ஆட்சிக்கு வந்த நேரத்தில் கரோனா எவ்வாறு இருந்தது; பாதிக்கப்பட்ட மக்களுடைய எண்ணிக்கை எவ்வளவு இருந்தது என்பது உங்களுக்குத் தெரியும். அதைச் சந்தித்து, அதைச் சமாளித்து இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவிலேயே கரோனாவை இன்றைக்கு முழுமையாகக் கட்டுப்படுத்தியிருக்கும் மாநிலமாகத் தமிழகம் விளங்கிக் கொண்டிருக்கிறது என்று சொன்னால், நாம் மக்கள் பணியில் எந்த அளவிற்கு கவனம் செலுத்துகிறோம் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது.

எதிர்க்கட்சியாக இருந்தபோது இந்த கரோனா காலத்தில், ‘ஒன்றிணைவோம் வா’ என்ற ஒரு திட்டத்தை அறிவித்தோம். அவ்வாறு அறிவித்தது மட்டுமல்ல, நேரடியாகச் சென்று மக்களை நாம் சந்திக்க முடியாது, நம்முடைய கட்சித் தோழர்களை சந்தித்து பேச முடியாது, ஆங்காங்கு இருக்கும் நிர்வாகிகளிடத்தில் நம்முடைய கருத்துக்களை நேரடியாக சென்று சொல்ல முடியாது.

எனவே காணொலிக் காட்சியின் மூலமாக ஒவ்வொரு மாவட்ட - ஒன்றிய - நகர – பகுதி – கிளைக் கழகத்தில் இருக்கும் நிர்வாகிகளை, ஏன் கட்சியின் தொண்டர்களை, ஏன் சில இடங்களில் பொதுமக்களையும் அந்தக் காணொலிக் காட்சியின் மூலமாக சந்தித்து, உங்களுக்கு என்ன குறை? அந்தக் குறையை நிறைவேற்ற நாங்கள் இருக்கிறோம், திமுக இருக்கிறது என்று சொல்லி நாம் அவர்களுக்கு நிவாரணப்பணிகளில் ஈடுபட்டோம்.

அவர்களுக்குத் தேவையான மளிகைப் பொருட்களை, அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை, அவர்களுக்கு மருந்து – மாத்திரைகளை, இவற்றையெல்லாம் நாமே காணொலிக் காட்சியின் மூலமாக விசாரித்து, அந்தந்தப் பகுதியில் இருக்கும் கட்சி நிர்வாகிகள் மூலமாக அந்தப் பணிகளை செய்தோம். எனவே நம்முடைய மணமக்களை நான் வாழ்த்துகிற இந்த நேரத்தில் அழகான தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள். தமிழகத்திற்கு பெருமை சேர்த்துத் தாருங்கள். தமிழர் என்ற உணர்வைப் பெறுங்கள்" என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்