தமிழக வியூகத்துடன் ராகுல் தலைமையால்தான் 2024-ல் பாஜகவை வீழ்த்த முடியும்: கே.எஸ்.அழகிரி அடுக்கும் யோசனைகள்

By செய்திப்பிரிவு

சென்னை: "இந்திய கருத்தியலின் மூலமாகவும், ராகுல் காந்தியின் தலைமையின் வழியாகவும்தான் பாஜகவையும், பிரதமர் மோடியையும் 2024 மக்களவைத் தேர்தலில் வீழ்த்த முடியும்; காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்பதன் மூலமே ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகளின் தேசிய அளவிலான நோக்கங்கள் நிறைவேற முடியும்" தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஐந்து மாநில தேர்தல் தோல்விக்குப் பிறகு நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் 4 மணி நேர விவாதத்திற்குப் பிறகு சோனியா காந்தி, தலைவர் ராகுல் காந்தி தலைமை மீது முழு நம்பிக்கை வைத்து ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதைத் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் அழைக்கப்பட்ட 57 பேரில் 54 பேர் பங்கேற்று சோதனையான நேரத்தில் எத்தகைய பொறுப்புணர்ச்சியுடன் கருத்துப் பரிமாற்றங்கள் நடத்தப்பட வேண்டுமோ, அதனை மனதில் கொண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

தோல்விக்குப் பிறகு மீண்டும் சாதனைகள் படைத்த காங்கிரஸ்: 137 ஆண்டுகால வரலாற்றுப் பெருமை படைத்த காங்கிரஸ் பேரியக்கம், பல வெற்றிகளைப் பெற்றிருக்கிறது. சில தோல்விகளையும் சந்தித்திருக்கிறது. 1977 தேர்தலில் தோல்வியுற்ற இந்திரா காந்தி இரண்டரை ஆண்டு காலத்தில் ஜனதா ஆட்சியை அகற்றிவிட்டு, மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை அமைத்து சாதனை படைத்ததை எவரும் மறந்திட இயலாது. ஐந்து மாநில தேர்தல் தோல்விக்குப் பிறகு, ஊடகங்களின் வாயிலாக காங்கிரஸ் தலைமையில் மாற்றம் ஏற்படப் போகிறது என்று ஆதாரமற்ற செய்திகள் பரப்பப்பட்டு வந்தன. ஆனால், அத்தகைய செய்திகளை முறியடிக்கும் வகையில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் ஆக்கப்பூர்வமான விவாதங்களை நடத்தி, தலைமை மீது முழு நம்பிக்கை வைத்து, தீர்மானங்களை நிறைவேற்றி எதிர்க்கட்சிகளின் அவதூறு பிரச்சாரத்தை முறியடித்துள்ளது. ஐந்து மாநில தேர்தலைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி இரண்டாவது பெரிய கட்சியாக இடம் பெற்றிருக்கிறது.

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மையின் காரணமாகத் தான் ஏற்கெனவே நான்கு மாநிலங்களில் ஆட்சியிலிருந்த பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்து வெற்றி பெற்றிருக்கிறது. அதுவும் ஏற்கெனவே பெற்ற வெற்றியை விடக் குறைவான எண்ணிக்கையில் தான் வெற்றி கிடைத்திருக்கிறது. கடந்த 2017 சட்டமன்றத் தேர்தலை விடக் குறைவான வாக்கு சதவிகிதத்தைத் தான் பாஜக பெற்றிருக்கிறது. இந்தத் தேர்தலை அனைத்து எதிர்க்கட்சிகளும் படிப்பினையாகக் கருதி, மீண்டும் பாஜகவை வருகிற சட்டமன்றத் தேர்தலிலும், அடுத்து வருகிற 2024 மக்களவை தேர்தலிலும் தோற்கடிக்க ஓரணியில் திரள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

ஆர்எஸ்எஸ் வகுப்புவாத சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்தி வருகிற பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியை 2024-இல் அகற்றுவதுதான் ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளின் ஒரே குறிக்கோளாக இருக்க வேண்டும். அந்த குறிக்கோளை அடைவதற்கு இன்றிலிருந்து அந்த இலக்கை அடைய பணியாற்ற வேண்டும். அந்த குறிக்கோளை அடைவதற்கு சோனியா காந்தியும், தலைவர் ராகுல் காந்தியும் தொடர்ந்து உறுதுணையாக இருப்பார்கள்.

மோடி ஆட்சி அகற்றப்படுவது உறுதி: இந்தியாவினுடைய பன்முகத் தன்மையையும், வேற்றுமையில் ஒற்றுமையையும், மாநிலங்களில் நிலவுகிற கூட்டாட்சித் தன்மையையும் பாதுகாப்பதற்குக் காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகள் ஓரணியில் திரள்வது மிகமிக அவசியமாகும். பாஜகவுக்கு எதிரான பொதுவான செயல் திட்டத்தின் மூலம் கொள்கை சார்ந்த ஓர் அணியை உருவாக்கி, அதன்மூலம் செயல்பட்டால் வருகிற மக்களவைத் தேர்தலில் மோடி ஆட்சி அகற்றப்படுவது உறுதியாகும்.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவித்து தேர்தல் களத்தை எதிர்கொள்ள வியூகம் வகுத்தார். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில், 38 தொகுதிகளில் திமுக தலைமையிலான, காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் மக்களின் பேராதரவோடு வெற்றி பெற்றார்கள். தமிழகத்தில் பெற்ற வெற்றிக்கு தலைவர் ராகுல் காந்தி, மு.க. ஸ்டாலின் ஆகியோர் இணைந்து எடுத்த கூட்டு முயற்சி தான் மகத்தான வெற்றிக்கு அடிப்படையாக அமைந்துவிட்டது. அத்தகைய அணுகுமுறையை தேசிய அளவிலும், பல மாநிலங்களிலும் பின்பற்றி பாஜகவுக்கு எதிராக கொள்கை சார்ந்த வலுவான கூட்டணி அமையுமேயானால், 2024 மக்களவைத் தேர்தலில் மோடி ஆட்சி அகற்றப்படுவது உறுதியாகும். அதில் எவரும் எந்த சந்தேகமும் கொள்ள தேவையில்லை.

கடந்த 8 ஆண்டுகால மோடி ஆட்சியில் பொருளாதாரப் பேரழிவுகளும், விலைவாசி உயர்வு, விவசாயிகள் வாழ்வாதாரப் பாதிப்பு, வேலையில்லாத் திண்டாட்டம், மாநில உரிமைகள் பறிப்பு, நாடாளுமன்ற ஆட்சி முறைக்கு உலை வைக்கும் வகையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் என தொடர்ந்து மக்கள் விரோத நடவடிக்கைகளை பாஜக எடுத்து வருகிறது. இதனால் மக்களிடையே எழுகிற எதிர்ப்புணர்ச்சியை மூடி மறைக்கவும், திசைத் திருப்பவும், மதரீதியாக மக்களைப் பிளவுபடுத்தி வாக்கு வங்கியை விரிவுபடுத்துகிற அரசியலை ஆர்எஸ்எஸ் ஆதரவோடு பாஜக நடைமுறைப்படுத்தி வருகிறது.

5 மாநில தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகளுக்கு ஒரு படிப்பினை: அத்தகைய அணுகுமுறையை வீழ்த்த தமிழகம் எத்தகைய வியூகத்தை கடந்த மக்களவைத் தேர்தலில் நடைமுறைப்படுத்தியதோ, அதைப் போல ஒரு வியூகத்தை ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் பின்பற்றுமேயானால், தேசிய அளவில் மிகப்பெரிய வெற்றியை நிச்சயமாகப் பெற முடியும். இதுவே ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகளுக்கு வழங்கிய படிப்பினையாகும். இந்த படிப்பினையைச் சரியான புரிதலோடு ஏற்றுக் கொண்டு ஒவ்வொரு கட்சியும் லாபக் கணக்குப் போடாமல் இந்தியாவின் எதிர்கால நலன் கருதி, அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்ட உரிமைகளைப் பாதுகாத்து, மக்களை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்கிற தீவிர முயற்சியில் ஈடுபட வேண்டியது மிக மிக அவசியமாகும்.

2024 மக்களவை தேர்தலை எதிர்கொள்கிற வகையில் காங்கிரஸ் செயற்குழு செயல் திட்டங்களை வகுத்திருக்கின்றது. நடத்தப்பட வேண்டிய அமைப்பு தேர்தல்களை முன்கூட்டியே ஜூலை மாதத்தில் தொடங்கி, ஆகஸ்ட் 20-க்குள் முடிக்கிற கால அட்டவணை வெளியிடப்பட்டிருக்கிறது. இதன்மூலம் வருகிற ஆகஸ்ட் மாதத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவருக்கான தேர்தலில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிற தலைவர் ராகுல் காந்தி தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டுமென்பதே தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான காங்கிரஸ் கட்சியினரின் ஏகோபித்த எதிர்பார்ப்பாகும். தலைவர் ராகுல் காந்தி என்பவர் இந்திய கருத்தியலின் பிரதிநிதியாக இருப்பவர். இத்தகைய கருத்தியலின் மூலமாகவும், தலைவர் ராகுல் காந்தியின் தலைமையின் வழியாகவும் தான் பாஜகவையும், பிரதமர் மோடியையும் வீழ்த்த முடியும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்பதன் மூலமே ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகளின் தேசிய அளவிலான நோக்கங்கள் நிறைவேற முடியும்'' என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

47 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்